Thursday, July 31, 2008

அசிங்கம்

பெண்களையே மீண்டும் மீண்டும் பேசுகின்றார்
  பேசுவதில் நாணமின்றிப் பேசுகின்றார்
  கண்கள் அவர் என்பதையே மறந்து இங்கே
  கண்ணியமே இல்லாராய்ப் பேசுகின்றார்
  என்ன செய்ய இவர்களையே என்ன செய்ய
  இவர் தாயர் பெண்ணென்றல் மறந்தே நின்றார்
  கன்னலென்னும் பெண்ணினத்தை இழித்துப் பேசும்
  கயவர்களைச் சமுதாயம் தூத்தூ என்னும்

 காதலிக்கப் பெண் வேண்டும் அவர்க்ளோடு
  கலந்து பல இன்பங்கள் பெறவும் வேண்டும்
 பா பலவாய்ப் படைப்பதற்கு அவர்கள் வேண்டும்
  பனிக் குளிராய் அனற் சூடாய்ச்சுகங்கள் வேண்டும்
 கூடுகையில் உளறுகின்ற மொழிகள் எல்லாம்
  கொண்டவளை ஏமாற்றிச் சரித்தல் வேண்டும்
 ஆடுகின்றார் ஆடவரில் சில பேர் இங்கே
  அவர் இருத்தல் ஆடவர்க்கே அசிங்கம் இங்கே

குறட் கருத்து பொருட் பால்

 ஊரோடு உலகெல்லாம் அஞ்சுகின்ற
  உயிர்க்கெல்லாம் கேடுகளே தந்து நின்ற
  சீரில்லா அறமற்ற செயல்களையே
  செய்வதற்கு நல்லவர்கள் நாணி நிற்பார்
  காரற்ற வானம் போல் கருணையில்லார்
  கவலையின்றி நாணம் விட்டு அதனைச் செய்வார்
  பார் போற்றும் அறமதுவோ நாணம் கொண்டு
  பாவியவன் தனை விட்டு விலகிச் செல்லும்
   
  குறள்
 பிறர் நாணத் தக்கது தான் நாணான் ஆயின்
 அறம் நாணத் தக்கதுடைத்து

பழம் பாடல் திருமந்திரம்

 ஒன்றே ஒன்றாக அவனே யுள்ளான்
  உமையவளோடிணைந் தவனே இரண்டுமானான்
  கண்டார்கள் த்மக்கு அவனே குருவுமாகிக்
  கையெடுத்துத் தொழுவதற்கு லிங்கமாகி
  நன்றான சங்கமமாய்க் காட்சி தந்தான்
  சத்து சித்து ஆனந்தம் மூன்றும் ஆனான்
  நன்றான வேதங்கள் நான்கும் ஆனான்
  ந்லமாக அறம் பொருள் இன்பம் வீடும் ஆனான்

  கொன்றன்ன மனிதருக்குத் துன்பம் தரும்
  கூட்டான அய்ம்புலனை வென்றே நின்றான்
  நன்றான ஆதாரம் ஆறும் ஆனான்
  நாம் காண இயலாத ஏழண்டத்தும்
  சென்றானே நிலமாகி நீரும் ஆகி
  நீள் காற்றும் ஆகி தீ வானுமாகி
  கன்றாத கதிரவனாய்ச் சந்திரனாய்க்
  காணுகின்ற ஆன்மாவாய் எட்டாய் ஆனான்

  திருமந்திரம்
  ஒன்று அவன்தானே,இரண்டு அவன் இன்னருள்
  நின்றனன் மூன்றினுள் , நான்கு உணர்ந்தான் ஈந்து
  வென்றனன் , ஆறு விரிந்தனன், ஏழு உம்பர்ச் 
  சென்றனன் , தானிருந்தான் உணர்ந்து எட்டே
   
   
   

Sunday, July 27, 2008

ஒழித்தல் வேண்டும்

 மனைவியரைக் கொல்லுகின்றார் குழந்தைகளை
  மழலையரைக் கொல்லுகின்றார் அந்தோ பாவம்
  தனை மறந்துக் கொடுமைகளைச் செய்து நிற்கும்
  தனியான மனிதரினை என்ன செய்ய
  வினை வழியோ விதி வழியோ புரியவில்லை
  வீணர் இவர் தமைக் கண்டேன் பொறுக்கவில்லை
  புனை கதைகள் திரைக் கதைகள் கண்டு இங்கு
  போக்கொழிந்து போனாரே மனிதர் இவர்

  கொல்லுதற்கு வந்தவரா உந்தனது கூட்டாகிக்
  கொள்ளையினபம் தந்த மாதர்
  அள்ளுதற்கும் கொஞ்சுதற்கும் உந்தன் மீது
  அன்பு செய்து உனைத் தந்தையாக்குதற்கும்
  தெள்ளு தமிழ் மழலையரை உந்தன் பேரைத்
  தெரிய வைக்கத் தந்ததற்கும் முட்டாள் முட்டாள்
  கொல்லுதற்கா அழகவரை இறைவன் தந்தான்
  கொடும் பாவிக் கூட்டம் இதை ஒழித்தல் வேண்டும்

குறட் கருத்து பொருட் பால்

 ஊர் தூற்றிச் சிரிக்கின்ற ஒரு செயலை
  ஒரு நாளும் செய்து விடார் நாணம் கொண்டார்
  பேர் கெட்டுச் சீர் கெட்டுப் போனால் கூட
  பிழையுள்ளார் வாழ்வது போல் வாழ மாட்டார்
  ஆர் கெட்டுப் போனாலும் நாணம் உள்ளார்
  அவர் சிறப்பு பெருஞ் சிறப்பு நாணம் காக்க
  பேர் பெற்றார் தம் உயிரைத் தந்திடுவார்
  பெரிதங்கு நாணம் என்றே உணர்த்திடுவார்

  குறள்
 நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப் பொருட்டால்
 நாண் துறவார் நாண் ஆள்பவர்

பழம் பாடல் காளமேகம்

இறைவனையும் மனிதருடன் இணைத்துப் பார்க்கும்
இப்பெருமை காளமேகம் தனக்கே உண்டு
பிறை சூடி நிற்கின்ற பெம்மான் நந்தம்
பேரருளாம் சிவனிடம் தான் கேள்வி வைத்தான்
உறை கடலாம் பாற்கடலைக் கடைந்த போது
உடன் வந்த நஞ்சதனை உண்டு நின்ற
இறைவனிடம் கேட்கின்றான் இவனைப் போன்ற
இடக்கான புலவர் வேறு யாருமில்லை


நஞ்சருந்த வேண்டிய ஒரு நிலைக்கு சிவன்
நாடறிய வந்ததென்ன  என்று கேட்டான்
கொஞ்சமல்ல செல்வம் வெள் ளியில் மலையும்
கூடக் கொழிக் கின்ற பொன் மலையும்
அஞ்சல் என்று சொல்லி அவன் தன்னை விட்டு
அகலாத உமையம்மை உடனிருக்க
நஞ்சருந்த வேண்டிய ஒர் சூழ் நிலைக்கு
நாயகனார் வந்த்தென்ன  என்று கேட்டான்

பணமில்லாத் துன்பத்தில் நஞ்சருந்தும்
பழக்கம் உண்டு மனிதரிடம் இவர்தமக்கோ
அளவின்றி செல்வம் உண்டு மலைகளாக
அதனாலே நஞ்சருந்த வழியேயில்லை
துணையாலே துன்பம் வந்து மனிதர் சிலர்
தொலைந்தொழிந்து போக நஞ்சை யருந்திடுவார்
அணைந்தென்றும் பிரியாமல் அன்னையவர்
அருகிருக்க நஞ்சருந்தல் நியாயம்தானோ

வினை யாவும் தீர்க்கின்ற இறைவன் அவன்
விளையாட அளிக்கின்ற அன்பு வாய்ப்பில்
கணையாக் கேள்விகளைத் தொடுத்து நின்றான்
காளமேகம் எனும் பெரும் வம்பன் இவன்
தனியாகத் த்மிழன்னை இவனுக்கென்று
தந்து விட்ட பேரருளே காளமேகம்
கனியான பாடல் பல தந்து நின்றான்
களித்திடுவோம் நாம் அவ்னைக் கற்றுக் கற்று

காள்மேகம்

வள்ளலெனும் பெரிய மாயூர நாதருக்கு
வெள்ளி மலை பொன் மலையுமே யிருக்க-தெள்ளுமையாள்
அஞ்சல் அஞ்சல் என்று தினம் அண்டையிலே தானிருக்க
நஞ்சு தனை ஏன் அருந்தினார்

Saturday, July 26, 2008

பழம் பாடல் பெரிய புராணம்

 நீலகண்டர் மனைவி சொன்ன வார்த்தையொன்றில்
  நிற்கின்றார் மனைவியவர் துணையுடனே
  காலமது இறைவர் அவர் காமனையே
  கண்ணுதலால் எரித்தவரின் வேலையது
  ஆலமுண்டார் அவர் அன்புத் தண்டனையில்
  அகப்பட்டார் நீலகண்டர் அதனால் அந்த
  சீலமுள்ளார் எமைத் தீண்ட வேண்டாம் என்று
  செப்பியதில் தப்புணர்ந்து நிற்கின்றாரே

  இருவருமே ஒரு வீட்டில் இருக்கின்றாராம்
  இருந்தாலும் உடல் சார்ந்த வாழ்க்கையில்லை
  திரு மகளோ துணைவருக்காய்எல்லாம் அங்கு
  தினப்படியே செய்கின்றார் குறைகளின்றி
  வருபவர்க்கும் போவபர்க்கும் விருந்து ஒம்பி
  வாழ்க்கையதன் சிறப்பையெல்லாம் போற்றுகின்றாராம்
  ஒருவருக்கும் தெரியாமல் இந்த வாழ்வை 
  உவப்புடனே கொண்டாராம் இறையை ஏத்தி

  சேக்கிழார்
  கற்புறு மனைவியாரும் கணவருக்கான எல்லாம்
  பொற்புறு மெய்யுறாமல் பொருந்துவ போற்றிச் செய்ய
  இற்புறத்தெழுந்திடாமல் இருவரும் வேறு வைகி
  அற்புறு புணர்ச்சியின்மை அயலறியார்து வாழ்ந்தார்
   

Friday, July 25, 2008

குறட் கருத்து காமத்துப் பால்

  சொன்ன நேரம்  வருவதில்லை வந்த  பின்போ

          சுகம் உடனே வேண்டும் என்று  அலைகின்றார் பார்

  சின்னவளா நான் அறிவேன் இவரை நன்கு

           சிரிப்பின்றி  முகம் மாற்றித் துன்பப் பட்டேன்

 என்னவரோ மிகப் பெரிய  கெட்டிக்காரர்

            என் ஊடல் தீர்ப்பதற்காய் தும்மல் ஒன்றை

தன்னறிவால் உண்டாக்கித் தும்மித் தீர்த்தார்

            தனை மறந்து நான் அவரை வாழ்த்தவென்று

                                           குறள்

   ஊடி   இருந்தே  மாத்தும்மினார்  யாம் தம்மை

   நீடு வாழ்கென்பாக்கு   அறிந்து

பழம் பாடல் அவ்வையார்

   பாரம் தாங்காமல்    கற்றூண்  வளைவதுண்டோ

       படீரெனத் துண்டாகிக்  கீழே    விழுந்து  விடும்

  ஈர மனம் கொண்டு எல்லார்க்கும் உதவி நிற்கும்

       எப்போதும்   நல்லதையே   வாழ்க்கையெனக் கொண்டிலங்கும்

  வீர மனத்தார்க்குக் கேவலங்கள்   ஏற்படுத்த

        வீணர்களும்  முயற்சி செய்து  வெற்றி பெற நினைத்தாரேல்

  சோரம்   போவாரோ உயிர் துறப்பார் வெற்றி  கொள்வார்

        பாரத்தால் ஒடிந்த அந்தக் கற்றூணைப் போலத் தான்

                                      மூதுரை

    உற்ற இடத்தில் உயிர்   வழங்கும்  தன்மையோர்

   பற்றலரைக்  கண்டால் பணிவரோ==      கற்றூண்

  பிளந்திறுவதல்லால் பெரும் பாரந் தாங்கின்

  தளர்ந்து    வளையுமோ தான்

Thursday, July 24, 2008

குறட் கருத்து காமத்துப் பால்

     பார்க்கின்றார்  பெண்கள் எல்லாம் உந்தன்   மார்பை

           பரத்தனென ஆனாய் நீ    இனியுன் மார்பை

    சேர்ந்திடவே மாட்டேன்   நான்  போ போ என்று

          சீறுகின்றாள் பெண்ணவளும்  வெறுத்தாற் போல

   கூர்த்த மதி வள்ளுவனார் இரண்டு செய்தி

        கூறுகின்றார் இக்குறளில் மிகச்   சிறப்பாய்

   சேர்ந்தவரைச் சேருகின்றார் பரத்தையென்றால்

        செப்புகின்றார் ஆடவனைப்  பரத்தனென்று

    மீண்டும் ஒரு செய்தி  இங்கே   சொல்லுகின்றார்

         மிக அருமை மிக  அருமை அந்தச் செய்தி

   காண்டு நிற்பார் பெண்கள்  என்றா சொல்லுகின்றார்

        கணக்காகப்  பெண்ணியல்பு கொண்டார் என்றார்

  தூண்டிடுமாம்  அவன் மார்பின் அழகு  அங்கே

       துடிக்கும் திருநங்கையரை  இழுத்திடுமாம்

  ஆண்களிலே  சிலர் கூட விரும்புவாராம்

       அப்படியே புரிய வைப்பார்   வள்ளுவரும்

                                         குறள்

 பெண்ணியலார் எல்லாரும் கண்ணில்  பொது   உண்பர்

நண்ணேன் பரத்த நின் மார்பு   

பழம் பாடல் புகழேந்தி

      புகழேந்தி பாட வந்தார் இரட்டைத் தாழ்ப்பாள்

             போட்டு நின்ற அரசியிடம் கோபம் தீர்க்க

    புகழேந்த விரும்புவார் பெண்கள் என்ற

             பொதுப் பொருளை கருப் பொருளாய்க் கொண்டவராய்

  இழையொன்றை இரண்டாக வகுந்தாற் போல்

            இடைகொண்ட எம்மரசி பெண்ணரசி 

 பிழை பொறுக்கும் பெருங்குடியாம் பாண்டியர் தம்

           பெருங்குடியில் பிறந்தவள் நீ மறந்தா போனாய்

 மழை மாதம் மூன்று முறை பெய்யும் நாட்டு

           மன்னவராம் சோழரிவர் செய்த பிழை

 பெரிதென்று கருதி நிற்றல் சரியாய் ஆமோ

         பெரிய மனம் கொண்டீரே மாற்றிக் கொள்ளும்

 விழைகின்ற அன்பாலே உந்தன் வாசல்

         வேண்டி இங்கு நிற்கின்றார் சோழ மன்னர்

 குழை கொண்ட  காது வரை விழிகள் கொண்ட

        கோல மயில் கதவினையே திறந்தருள்வாய்

 உளமறிந்து பாடி நின்றார் புகழேந்தியார்

        ஊரறியும் ஆனாலும் உண்மை ஒன்று

 களமறிய அவருக்குக் கிடைத்த வாய்ப்பு

       கண்மணியின் பாண்டி நாட்டுப் புலவர் அவர்

 நிலையறிந் தார் அதனாலே அந்தப் பெண்ணாள்

       நெஞ்சறிந்து பாடி விட்டார் வென்று விட்டார்

 தலை நிமிர்ந்த கூத்தரவர் இயல்பினாலே

      தளிர்க்   கொடியாள் இரு தாழ்ப்பாள் போட்டு விட்டாள்

                                            புகழேந்தி

  இழையொன்றிரண்டு வகிர் செய்த நுண்ணிடை ஏந்திய பொற்

 குழையொன்றிரண்டு  விழியணங்கே கொண்ட கோபம் தணி

 ம்ழையொன்றிரண்டு கைம்மானாபரணன் நின் வாயில் வந்தால்

 பிழையொன்றிரண்டு பொறாளோ பெருங்குடியிற் பிறந்தவளே

      

         

 

Wednesday, July 23, 2008

குறட் கருத்து காமத்துப் பால்

    விட்டு விட்டுச் சென்று விட்டார் காதலரும்

          வெறுத்திடவா முடிகிறது இல்லை இல்லை

   தொட்டவரின் பின்னாலே செல்வதொன்றே

         துடியிடையாள் எனை இங்கு வாழ வைக்கும்

  விட்டவரை விலகி இங்கு மானத்தோடே

        வெற்றி கொள்ள முடியாது காமம் நம்மை

  சுட்டு விடும் அதனாலே மானம் கொள்ளல்

        சுத்தமாய்ப் பெண்களுக்கு வேண்டாம் என்றாள்

                                         குறள்

   செற்றார் பின் செல்லாப் பெருந்தகைமை காம நோய்

  உற்றார் அறிவது ஒன்று அன்று

ஒட்டக்கூத்தனும் இரட்டைத்தாழ்ப்பாளும்

      பாண்டியனின்  மகள்  அங்கே சோழனது

         பத்தினியாய் ஆகி விட்டாள் ஆன பின்னர்

     வேண்டு மட்டும் இன்பங்கள் பெறுவதுவும்

         பெறுவது  போல் தருவதுவும்  என்று வாழ்ந்தாள்

     ஆண்களுக்கும் பெண்களுக்கும்  இடையில்   நேரும்

        அவசியமாம்  ஊடலது வந்ததங்கு

    தான் போய்  அவ்வூடலினைத் தீர்த்தல் விட்டுத்

        தமிழ்க்  கவியாம் கூத்தரினை அனுப்பி  வைத்தான்

  கூத்தர் கொஞ்சம் நிமிர்ந்தவர்    காண் கொற்றவனே

      கூப்பிட்டுத் தந்த  பணி என்ற போது

  பாத்திறத்தைக் காட்டுதற்கு முனைந்தாரன்றி

     பாண்டியனின் மகள் மனதை அறிந்தாரில்லை

  ஆத்திரம்  தான் அரசிக்கு அங்கு வந்து

      ஆறுதலைத்  தர வேண்டும்  மன்னன்  அவன்

 பாத்திறத்துப் பாவலரை  அனுப்பியதில்

    பாவையவள் நொந்து விட்டாள் அதற்கு மேலே

  நாத்திறத்தைக் காட்டுகின்றார் புலவர் நங்கை

            நல் மனத்தை   அறியாராய் கனிவே இன்றி

 பூந்தளிரே  உன் கைகள் தானே வந்து

            பொறுப்பாகத் தாழ்ப்பாளைத் திறந்து விடும்

  வேந்தன் எங்கள் சோழனுமே இங்கு  வந்தால்

           விரைவாகத் திறந்து விடும் உந்தன்  கைகள்

  வேண்டியெல்லாம் நான் ஒன்றும்  பாட மாட்டேன்

          வேல் விழியே கதவுகளைத் திறந்திடுக

 கூத்தரது வார்த்தைகளால்   அரசியவள்

              கோபமது   கூடியது  தோழிதன்னைச்

 சேர்த்து மற்றொர்   தாழ்ப்பாளை உடனே   போடச்

             செப்பி விட்டாள்   கூத்தர் செய்த நன்மை யீது

காத்து நிற்கும் சோழனவன்  புலவர் தம்மைக்

             காதலித்துத் தொலைத்ததனால் வந்த துன்பம்

சேர்த்தணைத்து ஊடல் தீர்க்க முயலான் அன்பைச்

             செந்தமிழ் மேல் வைத்ததனால் வந்த துன்பம்

                                     ஒட்டக்கூத்தர்

    நானே யினி உனை வேண்டுவதில்லை  நளின மலர்த்

   தேனே கபாடம் திறந்திடுவாய் திறவாவிடிலோ

   வானேறனைய ரவி குலாதிபன் நின் வாயில் வந்தால்

   தானே திறக்கும் நின் கைத்தலமாகிய தாமரையே

தாழ்ப்பாளை நீக்க  புகழேந்திப் புலவர் பாடிய பாடலை நாளை பார்ப்போம்

  

Tuesday, July 22, 2008

குறட் கருத்து காமத்துப் பால்

 

   இரந்து தான் நிற்கின்றேன் தினம் தினமும்

           இரு விழிகள் கேட்கிறதா எந்தன் பேச்சை

  வரந்தருக என்றெல்லாம் வாயிழந்தேன்

          வகை வைக்க மறுத்ததெந்தன் வேண்டுதலை

  நிரந்தரமாய் இவை தூங்க மறுத்ததென்றால்

         நெஞ்சத்தார் கனவினிலே வருவதெங்கே

  இறந்து பட மாட்டாமல் நானும் இங்கே

        இருப்பதனைச் சொல்லுதற்கு வழி தான் ஏது

                                  குறள்

  கயல் உண்கண் யான் இரப்பத் துஞ்சின் கலந்தார்க்கு

  உயல் உண்மை சாற்றுவேன் மன்

பழம் பாடல் விவேக சிந்தாமணி

     கால் ஒன்று நொண்டி  கண் ஒன்றோ இல்லை

                 காதுகளும் அறுபட்டுப் போக

    வால் அதுவும்  ஊரார் தனை வணங்கி நின்றும்

                வடிவாக துண்டித்து விட்டார்

   பால் பானை உடைந்து தலையோடு தொங்க

               பார்க்கின்றார் அதைக் கண்டு சிரிக்க

  ஏலாத போதும் பெண் நாயின் பெண்ணே

              இரைப்போடு செல்கிறதாம் ஆண் நாய்

  ஊராரே இதனை உமக்கேன் தான் சொன்னார்

             உள்ளதனை உள்ள படி சொல்வேன்

 யாரான போதும் இதுதானாம் நிலைமை

            எப்படியும் காமமது கொல்லும்

 கூராக அதனை ஆண் நாயின் மூலம்

           கூறி நின்றார் அக் காலப் புலவர்

 யாராரோ இதனை வென்றதாய்ச் சொல்லல்

          எப்படி என்றல் இதனுட் செய்தி

                                          செய்யுள்

   உணங்கி ஒரு கால் முடமாகி                                                                                                                       ஒருகண் இன்றிச் செவியிழந்து

  வணங்கு நெடு வால் அறுப்புண்டு                                                                                                               அகல் வாயோடு கழுத்தேந்தி

  சுணங்கன் முடுவல் பின் சென்றால்                                                                                                          யாரைக் காமன் துயர் செய்யான்

  

                

Monday, July 21, 2008

வாழுகின்றான் இன்றும்

மறைந்து விட்டான் மா கலைஞன் என்று இந்த
மனிதர்களும் புலம்புகின்றார் புரியாராகி
நிறைந்து விட்டான் நற்றமிழர் நெஞ்சிலெல்லாம்
நீங்காத புகழ் கொண்ட மேலவனாய்
சிறந்து நிற்பான் என்றென்றும் தமிழர் நெஞ்சில்
சிவனாகிச் சிவாஜியாய் எங்கள் அண்ணன
கலந்து விட்டான் அறிஞர்களின நெஞ்சில் எல்லாம்
கலையுலகத் தலைமகனாய் வாழுகின்றான்

குறட் கருத்து காமத்துப் பால்

   நாசி உளைகிறது தும்மலுக்காய்

        நலம் கொண்டார்   நினைக்கின்றார்  என மகிழ்ந்தேன்

   ஆசை  ஒழிந்ததங்கு தும்மலில்லை

        அன்புடையார்  நினைத்தாற் போல் நிறுத்தினாரோ

  பாசம் நிறைந்தவளாய்த் துடிக்கின்றாளாம்

        பாவி மகன் பிரிவாலே பெரிய கண்ணாள

  நேசம் நிறைந்தவளின்  உணர்வதனை

      நெஞ்சுணரக் காட்டுகின்றார்   குறளின்   வேந்தர்

                                                குறள்

  நினைப்பவர்  போல்   நினையார்   கொல்  தும்மல்

 சினைப்பது   போன்று கெடும்

பழம் பாடல் திரிகடுகம்

    உணவளிப்பார் யார் என்று அறிந்த பின்னர்

           உணவுண்பார் நல்லவராம் அறிஞர் என்றும்

   தனைப் பெரிதாய் எண்ணுகின்ற சிறியோரிடம்

         தனை விற்றுப் பிழைக்கின்ற தாசியிடம்

   வினை நல்லதாற்றுகின்ற  அறச் சாலைகள் த்ம்மை

        வேரொடு மகிழ்ந்தழித்த ஈனரிடம்

  தனை அறிந்த நல்லவர்கள் ஒரு காலமும்

       தான் அருந்த மாட்டாராம் அவர் உணவை

                               திரிகடுகம்

   செருக்கினால் வாழும் சிறியவனும் பைத்தகன்ற

  அல்குல் விலைபகரும் ஆய்தொடியும் = நல்லவர்க்கு 

  வைத்த அறப்புறம் கொன்றானும் இம்மூவர்

  கைத்துண்ணார் கற்றறிந்தார்

        

Friday, July 18, 2008

குறட் கருத்து காமத்துப் பால்

    ஏதேனும் ஒன்றைக்  கொள் எந்தன் நெஞ்சே

         எப்படி நான் இரண்டையுமே  தாங்கிக் கொள்வேன்

   சூதின்றி வாதின்றி இன்பம்  தன்னைச்

         சுகமதனைக் கொடுப்பதுவும் பெறுவதுவும்

  பேதை நான் மணத்தோடு பெறுவதற்கு

        பெரும் உதவி நாணத்தை விட்டு விடு

  வாதையின்றி  நான் வாழக் காமம் தன்னை

      வகையாக விட்டு  விடு  தாங்க மாட்டேன்

  இரண்டிலொன்றே என்னாலே தாங்க ஏலும்

        இதை உணர மாட்டாயா எந்தன் நெஞ்சே

  புரண்டு புரண்டழுதாலும் எந்தன் துன்பம்

        புரிந்து கொள்ள  மாட்டாயா   போதும் போதும்

  துறந்திடத்தான் நினைக்கின்றாள் நாணம் தன்னைத்

      தோள்களிலே சேர்ந்திடத்தான் துடிக்கும் பெண்ணாள

 இரந்து நிற்பாள் நாணத்தின் முன்னே     அதை

     எடுத்துரைத்துப் பெருமை சேர்த்தார்  வள்ளுவரும்

                                 குறள்

  காமம் விடு ஒன்றோ. நாண் விடு நன்னெஞ்சே

 யானோ பொறேன் இவ்விரண்டை

பழம் பாடல் அவிவேக சிந்தாமணி

     வருகின்றார் நம்மையே தழுவுகின்றார் 

          வாயாரப் புகழுகின்றார் கொஞ்சுகின்றார்

   தருகின்றார் செல்வமதை அள்ளி அள்ளி

          தட முலை மேல் உறங்குகின்றார் தனை மறந்து

   அருகாமல் தள்ளி நின்றால் காலில் கூட

         அப்படியே விழுகின்றார் புரியவில்லை

  செரு காமம் தீர்க்கின்றார் இன்பம் தந்து

        சிந்தனைக்கு எட்டவில்லை காரணமும்

  அரிதான தொழில் இதிலே மூத்திருக்கும்

       அன்னைக்கு இணையான பெண்ணிடத்தில்

  விரி காமச் சோலையெனப் பூத்திருக்கும்

      விழியழகி கேட்கின்றாள் மூத்தவளோ

  சிரிப்போடு பதிலதனைச் சொல்லுகின்றாள்

     செம்மை மிக்க அறஞ் செய்யார் செல்வம் தன்னை

  பிரித்தெங்கும் சிதறடிக்க கள்ளைச் சூதைப்

    பெண்  நமையும்படைத்தானே பிரம்மன் தானே

                                       பாடல்கள்

  அன்னையே அனைய தோழி அறந்தனை வளர்க்கும் மாதே

  உன்னையோர் உண்மை கேட்பேன் உரை தெரிந்துரைத்தல் வேண்டும்

 என்னையே புண்ருவோர்கள் எனக்குமோர் இன்பம் நல்கி

 பொன்னையும் கொடுத்து பாதப் போதினில் வீழ்வதேனோ

                              பதில் பாடல்

 பொம்மென்ப் பணைத்து விம்மி போர் மதன் மயங்கி வீழும்

 கொம்மை சேர் முலையினாளைக் கூறுவேன் ஒன்றைக் கேண்மோ

 செம்மையில் அறஞ்செய்யாதார் திரவியம் சிதற வேண்டி

 நம்மையும் கள்ளும் சூதும் நான் முகன் படைத்தவாறே

Thursday, July 17, 2008

குறட் கருத்து காமத்துப் பால்

   நன்றியில்லா நெஞ்சென்று  தன் நெஞ்சையே

          நங்கையவள் நினைக்கின்றாள் அழகு போங்கள்

  மன்னவனைப் பார்த்ததவள் கண்கள் தானாம் 

         மனதுக்கோ அதனால்தான்  பழக்கமானான்

  சின்னவனைத் தேடி இந்த நெஞ்சு மட்டும்

        சிறகடித்துப் பறக்கிறதாம் ஊர்கள் எங்கும்

  கண்களையும் அழைத்துச் செல்ல  வேண்டும் என்றே

      கை கூப்பி வேண்டுகின்றாள் நெஞ்சம் தன்னை

                                           குறள்

   கண்ணும் கொளச் சேறி நெஞ்சே   இவை என்னைத்

  தின்னும் அவர்க் காணலுற்று

     

பழம் பாடல் அவிவேகசிந்தாமணி

      சிற்றிடையாள்  நிற்கின்றாள் முலைகள் தாங்கி

            சேர்ந்தங்கு  சுகித்தவனோ ரசிக்கின்றானாம்

     நெற்றி  முதல் கால் வரைக்கும் அழகுப் பெண்ணாள்

           நினைக்கவொண்ணா அணிகலன்கள் அணிந்திருந்தாளாம்

   வெற்றி அங்கு அவளுக்கே தங்கம்  எல்லாம்

        வீண் என்று சொன்னானாம்     சொன்னவனே

  சற்று தலை சாய்ந்து  நிற்கும் பெண்ணாள் மூக்கை

       சட்டென்று பார்த்தானாம் அங்கே பெண்ணாள்

 முத்தெடுத்து அணியாமல் குன்றி மணி 

     மூக்கினிலே அணிந்திருந்தாள் பார்த்த மகன்

 பட்டெனவே கேட்டானாம் என்ன இது

     பார்ப்பதற்கே ஒப்பவில்லை  என்று சொல்ல

சட்டெனவே பெண்ணவளும் கண்ணை வாயை

    சரியாக இரு கரத்தால் பொத்தினாளாம்

வெட்டெனவே இளைய மகன் கத்தினானாம்

   வெண் முத்து வெண் முத்து என்று சொல்லி

  தலை சாய்ந்து நின்றதனால் புல்லாக்கதும்

       தன்னிடத்தில் இருந்து சற்று நகர்ந்ததாலே

 கலையழகாள் கண்ணிரண்டின் கருமையது

      கணக்காக முத்தின் மேல் பகுதி சேர

 அலை கடலின் செம்பவள இதழ்கள் தம்மின்

     அச்சிவப்பு முத்தின் கீழ்ப் பகுதி சேர

 நிலை குலைந்தான் குன்றி மணி என நினைந்து

     நீள் விழியாள் இரு கரத்தால் உண்மை தேர்ந்தான்

                                                  அவிவேக சிந்தாமணி

   கொல்லுலை வேற்கயற்கண் கொவ்வையங்கனி வாய் மாதே

   ந்ல்லணி மெய்யில் பூண்டாய் நாசிகாபரண மீதில்

   சொல்லதில் குன்றி தேடிச் சூடியதென் னோவென்றான்

 மெல்லியல் கண்ணும் வாயும் புதைத்தனள் வெண் முத்தென்றான்

Wednesday, July 16, 2008

நடிகர் திலகம் 3

   விரி விழிகள் அவற்றுக்குள் காட்டி நிற்பான்

        வியன்  உலகச் சிறப்பெல்லாம் ,,, வாய் திறந்து

  சிரியெனவே   கேட்டாலோ  நூறு வகைச்

      சிரிப்பதனைத்   தந்து நின்ற  தவன் ஒருவன்

  மொழியெனிலோ அவன் மொழிந்தால் தமிழே ஆகும்

     முதல்வன் என்றால்   கலையுலகம் அவனைச் சொல்லும்

  வழி வழியாய் வந்த ஆய கலைகள்  எல்லாம்

     வடிவமைத்தான்    எங்கள் அண்ணன் சிவாஜியன்றோ

    

     

  

குறட் கருத்து காமத்துப் பால்

 

     மாற்றிக் கொள்ள நினைந்தானா அவன் தன் நெஞ்சை

           மயக்குகின்ற வேலை மட்டும் செய்த மகன்

   ஆற்றிக்  கொள்ள வழியின்றி அவன் நினைவில்

           அரற்றுவதும் பிதற்றுவதும்  மீண்டும் மீண்டும்

   தேற்றுதற்கு ஆளின்றித் தவிப்பதுவும்

           தினம் வேண்டாம் சொல்வதை நீ கேட்பாய் நெஞ்சே

 மாற்றமின்றி என்னிடமே இருந்திடு    நீ அவன்

          மயக்கு நெஞ்சு அவனிடத்தே இருந்தால்  போல

                                               குறள்

    அவர் நெஞ்சு அவர்க்கு ஆதல் கண்டும் எவன் நெஞ்சே

   நீ எமக்கு ஆகாதது

பழம் பாடல் நாலடியார்

    சிவந்த வாய் அரக்காம்பல் நிறம் கொண்டாள் ,சீரழகு

        சிற்றிடை தனைக் கொண்டாள் மார்போடு போராட

  எவன் தன்னைக் கொண்டாளோ அவனோடு போய் விட்டாள்

       எவ்வழியில் பரற் கற்கள் நிறைந்துள்ள கான் வழியில்

 சிவப்பழகை  அவள அழகுச் சீரடிகள் தனில் பூச

       உவப்பேன் நான் பஞ்சு கொண்டே பூசிடுவேன் பின்னிழுப்பாள்

தவிப்பாள் அப்பஞ்சு படத் தாங்காமல் மெல்ல என்பாள்

     தாயல்ல செவிலித் தாய் புலம்பி நின்றாள் தனியாக

                                      நாலடியார்

     அரக்காம்பல் நாறும் வாய் அம்மருங்கிற் கன்னோ

     பரற்கானம் ஆற்றின கொல்லோ  -  அரக்கார்ந்த

    பஞ்சு கொண்டூட்டினும் பையெனப் பையெனவென்று

   அஞ்சிப்பின் வாங்கும் அடி

      

 

Tuesday, July 15, 2008

குறட் கருத்து காமத்துப் பால்

ஊரார் பழிக்கின்றார் என்னவரைப் புரியாமல்
உண்மை நிலை தெரியாமல் எங்கேயும் எப்போதும்
வாராது போயிடுவார் என்றெங்கும் கூறுகின்றார்
வழக்குணரார் உணர்வாரா என்னவரின் பெருந்தன்மை
நேராய் என் நாணமும் அழகும் அவர் கொண்டார
நினைத்துணரக் காம நோயும் பசலையுமே எனக்களித்தார்
சீராய் இரண்டெடுத்தார் சிறப்பாய் இரண்டளித்தார்
ஊரார் அறியார் இவ்வுண்மை நிலை பழிக்கின்றார்


குறள்

சாயலும் நாணும் அவர் கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து

பழம் பாடல் நாலடியார்

          கலந்து மகிழ்ந்தவன் தான் கணப் போதும்  பிரியாது

             இணைந்து  மகிழ்ந்தவன் தான் பொருள் தேடி   இன்றென்னை

        பிரிந்தே சென்றவுடன்  பேதையெனை இத்தனை பேர்

             இணைந்தே   கொல்லுகின்றார்  இது என்ன நியாயம் சொல்க

       விரைந்தே  கேட்கின்றாள் விரி விழியாள் அப்பப்பா 

           சிறந்தாள் முதல் குற்றம்  சிவனின் மேல் ஆம் அய்யா

      நிறைந்தான் எம்  மனதில் மன்மதனைக் கொன்ற சிவன்

          நிலையின்றி  மீண்டும் ஏன் உயிர்ப்பித்தான் மன்மதனை

    சிலை கொண்டு  என்னை இன்றும் சீர் குலைப்பான்  அப்பேதை

         சிவனாரின்   அன்பு இதைச் செப்பாமல் இருப்பேனோ

   குலை நடுங்க வைக்குதிங்கே குயில்  இதனின் குரலிங்கே

        கூடு கொண்ட  காகம் இதை அடை காத்துத் தந்ததனால்

  படையல்   வைத்த சோறுண்ட காகம் செய்த துரோகம் இது

       பார்  முழுதும் பாவையர்க்கு என்றென்றும் துரோகம்  தான்

   இடை இல்லாப்  பெண்களுக்கு இடையூறு செய்யும் நிலா

      இதை  விழுங்கி எங்களுக்கு இன்பம் தந்த இராகு அதும

    உடன் அதனை உமிழ்ந்தெங்கள் உயிர் பறிக்கச் செய்ததென்ன

        உலகெங்கும் பெண்களது  உயிர்த் துன்பம் அறியானோ

    இடம் நேரம் என்று  இங்கு எதுவுமே  கருதாமல்

       இடையூறாய் நிற்கின்ற  அன்னையவள்   செயல்  பார் நீ

    பட  படத்து நிற்கின்றாள்  பாவை யங்கே  தோழியிடம்

      பருத்த  முலைத் தோழி  என்று  பாவையங்கு அழைத்தது  ஏன்

  இளைத்த  முலையானதிங்காம் இவள் முலையும் பிரிவதனால்

     கொடுத்து  வைத்த  தமிழினத்தீர் கொள்க இந்தப் பாடலினை

                                        நாலடியார்

    கண் மூன் றுடையானும்   காக்கையும் பையரவும்

   என்னீன்ற  தாயும் பிழைத்ததென்   -        பொன்னீன்ற

  கோங்கரும்  பன்ன முலையாய்  பொருள்வயிற்

 பாங்கனார் சென்ற  வழி

      

Monday, July 14, 2008

குறட் கருத்து காமத்துப் பால்

   தீயென்றால் தொட்ட உடன் சுடும் என்று

          தீண்டி அதை உணர்ந்துள்ளோம் அனைவருமே

  மாயப் பெண் இவளிடத்தில் உள்ள தீயோ

         மாற்றங்கள் கொண்டதுவாய் இருப்பதென்ன

  தோய்ந்து அவளைத் துய்த்திருந்தேன் அப்போதெல்லாம்

        துடியிடையாள் தீயதனின் குளிர்ச்சி தேர்ந்தேன்

  போய் வரலாம் என்றே தான் பிரிந்தேன் தீ

       போட்டு என்னை வறுத்ததினை உணர்ந்தேன் வெந்தேன்

  பிரிகையிலே சுடுகின்ற இந்தத் தீயைப்

        பெண் மகளாள் பெற்றதிங்கு யாரிடத்தில்

  அறிவதற்கு முயல்கின்றேன் முடியவில்லை

        ஆனாலும் அனுபவித்தே மகிழ்கின்றேன் நான்

  துடியிடையைத் தொட்டவுடன் தீயைக் காணோம்

        தொட்டு உடன் விலகி நின்றால் குளிரைக் காணோம்

  அட அட இப் பெண்ணாளை அடைந்ததிலே

        அறிவியலின் தோல்வியினைக் கண்டேன் நானும்

                                           குறள்

   நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்

  தீயாண்டுப் பெற்றாள் இவள்

பழம் பாடல் நாலடியார்

   சிற்றிடையால் மார்பகத்தின் செழுமை ஒங்க

         சிரிப்பதனால் முல்லையெல்லாம் தோற்று ஒட

  கற்றையெனும் குழலதனால் மேகம் வாட

       கனி மொழியாள் நடக்கின்றாள் ஊரே பாட

 விற் புருவப் பெண்ணாளின் பின்னே சாடி

      விரைகிறதாம் மீன் கொத்திப் பறவை ஒன்று

 கொத்தி விட வேண்டும்  அந்தக் கயல்கள் ரெண்டை

     கொஞ்சு மொழிப் பெண்ணாளின்  கண்கள் தன்னை

 கண்கள் ரெண்டும் கயல்கள் என்று எண்ணி எண்ணி

         கவனமாய் பறக்கிறது பின்னாலேயே

 பெண்ணவளின் அருகினிலே சென்று உடன்

       பின் வாங்கி விண்ணோக்கிப் பறக்கிறது

 ஒன்றுமில்லை பெண்ணாளின் புருவம் அங்கே

       ஒளி வில்லாய்த் தெரிகிறது அச்சம் கொண்டு

  சென்று சென்று மீண்டும் அது வருகின்றது

      சேர்ந்தவனின் மனம் போலே ஆகா ஆகா

                                         நாலடியார்

  கண் கயல் என்னும் கருத்தினால் காதலி

 பின் சென்றது அம்ம அச் சிறு சிரல்  -  பின் சென்றும்

 ஊக்கியெழுந்தும் எறிகல்லா ஒண்புருவம்

கோட்டிய வில் வாக்கு அறிந்து

Sunday, July 13, 2008

குறட் கருத்து காமத்துப் பால்

         மெல்லத்தான  தழுவுகின்றான் பொன் மகளாள்

             மேனியெல்லாம் இதழ்க் கோலம் போடுகின்றான்

        சொல்லத்தான்  வார்த்தையின்றிப் பூ மனத்தாள்

            சுகம் கண்டு இதம் கண்டு சொக்குகின்றாள்

        அள்ளித் தான்   தருகின்றார் இருவருமே

            அவர்களுக்குள் தோல்வியில்லை  வெற்றி ஒன்றே

        கள்ளியின்   தோள்களிலே களி முடிந்து

             காதலனும் உறங்குகின்றான் சுகமோ சுகம்

       மெல்ல அவன் விழிக்கின்றான் மார்பகமாம்

             மெத்தையிலே வாய் புதைத்துச் சிரிக்கின்றானாம்

       கள்ளியவள் விழிக்கின்றாள்  சிரிப்பதனின்

             காரணத்தைப் புரியாமல் திகைக்கின்றாளாம்

      மெல்ல அவன்   சொல்லுகின்றான்  மேலுலகம்

        மேலேயாம் பெரியவர்கள்  சொல்லுகின்றார்

     கள்ளி  உந்தன் தோளில்  நான்      கொண்ட தூக்கம்

        கார் மாலின்  சொர்க்கத்தின் இனிதேயென்றான்

                                        குறள்

     தாம் வீழ்வார்     மென்  தோள் துயிலின்    இனிது கொல்

    தாமரைக் கண்ணான் உலகு

பழம் பாடல் நாலடியார்

        செந்தாமரை மலரில் சீராக வீற்றிருக்கும்

             செங்கண் மால் மார்பு   உறையும் திருமகளே  சரிதானோ

      நொந்தழிய வைக்கின்றாய்  நூலறிந்த மேலவரை

            நோயாக வந்தவர்க்கு செல்வமதைக் குவிக்கின்றாய்

     செந்திருவே நீ நிலத்தில்  சாம்பலாய்   ஒழிந்திடுக

            சீரான பண்பாளர் பொன் போன்றார்  அவர்  தவிர்த்து

    மைந்தராய் தீமைகளை மனம்  கொண்டு வாழ்வாரின்

           மணமில்லா  மலர் போன்றார்  தன்னிடத்துச் சேர்ந்தாயே

                           

          

                                      நாலடியார்

          நாறாத்தகடே போல்  நன்மலர் மேல் பொற்  பாவாய்

         நீறாய்   நிலத்து விளியரோ      -      வேறாய

        புன்மக்கள் பக்கம் புகுவாய் நீ  பொன் போலும்

       நன்மக்கள் பக்கம் துறந்து

Saturday, July 12, 2008

வாழுகின்றேன்

   காலையிலே குயில் ஒன்றின்   அன்பதனால்  எழுந்திடுவேன்

        கலகலக்கும் குருவிகளின் கானத்தோ டிணைந்திடுவேன்

   சாலையிலே வண்டிகளின் சத்தமது  கேட்கும் முன்னர்

        சரியாக தேவாரப் பண்ணிசையில் எனை மறப்பேன்

  வேலை பின்னர் சரியான உடற் பயிற்சி  அதன் பின்னர்

        விரைந்து வந்து  கணிப்  பொறியில்  கவிதைகளை எழுதிடுவேன் 

 நாளை என்றல் நம்மிடமா ஒரு நாளும்  இல்லை அந்த

         நாயகனின்  கையிலன்றோ உணர்ந்தே  தான் வாழுகின்றேன்

குறட் கருத்து காமத்துப் பால்

     உண்டு விட்டாள் கண்களினால் என் உயிரை இதழமுதம்

                தந்தேனும் காத்தாளா தளிர்க் கொடியாள்  இல்லை இல்லை

    கொண்டேன் நான் நோய் அந்த்க் கோல விழிப் பார்வையினால்

                 கொண்ட   நோய் தீர்த்து விடக் கூடிய  ஒர்   மருந்தில்லை

   கண்டு  நின்றார் அனைவருமே கணக்கொன்று சொன்னார்கள்

                 கண்மணியாள் பார்வையொன்றே அதைத் தீர்க்கும்  மருந்தென்று

  நோய்  தரும்   பார்வையாய் ஒரு பார்வை வைத்துள்ளாள்

                நோய் தீர்க்கும் பார்வையும்  அவளே தான் கொண்டுள்ளாள்

                                             குறள்

  இரு நோக்கு இவள் உண்கண் உள்ளது ,,ஒரு நோக்கு

  நோய் நோக்கு ,மற்று அந்நோய் மருந்து

பழம் பாடல் நாலடியார்

     பல்வேறு நிறத்தில் பசுக்கள் உண்டு

       பால் மட்டும் வெள்ளை நிறம் அதனைப் போல

    நல்லவரின் செயல்கள் வேறு வேறாய்

        நமக்கிங்கே தோன்றிடினும் செயல்கள் எல்லாம்

  வல்லமையைத் தரும் அறமே ஆகும் இங்கே

       வடிவங்கள் வெவ்வேறாய் இருந்த போதும்

  அல்லதையே வேரறுத்து நன்மை வழி

      அறங்களையே செய்திடுவீர்  பல வழியில்

                                      நாலடியார்

  ஆ வேறுருவின ஆயினும் ஆபயந்த

  பால் வேறுருவின வல்லவாம் -பால் போல்

  ஒருதன்மைத் தாகும் அறநெறி. ஆ போல்

  உருவு பலகொளல் ஈங்கு

Friday, July 11, 2008

குறட் கருத்து காமத்துப் பால்

   கரு விழியாள் தன்னழகில்  வீழ்ந்தேன்   வீழ்ந்தேன்  அந்தக்

           கனியிதழாள்  அமுத  நஞ்சில்   மாய்ந்தேன் மாய்ந்தேன்

   தருவதிலும்    பெறுவதிலும் வாழ்ந்தேன் வாழ்ந்தேன்  அந்தத்

           தளிர்க் கொடியாள் எனைப்  பிரிந்தாள் ஒய்ந்தேன் ஒய்ந்தேன்

   பெருமையுடன் நிமிர்ந்திருந்த ஆண்மை  ஊரார்

          பேசி நிற்கும் எந்தனது நாணம் என்னும்  

   இரு படகும் இழந்து   விட்டேன் அந்தோ காமம்

          எனும் பெரிய  வெள்ளத்தில்  நானும்  நானும்

                                             குறள்

    காமக் கடும்  புனல் உய்க்குமே நாணொடு

   நல் ஆண்மை என்னும் புணை

பழம் பாடல் அவ்வையார்

   தாமரை மலர்ந்திருக்கத் தண்ணீர் நிறைந்திருக்கும்

           சீர் மிகுந்த நீர் நிலையில்  அன்னம் வந்து சேர்ந்து கொள்ளும்

   காமமது கல்வியின் மேல் கொண்டார் இணைவது போல்

        கற்றறிந்தார் கற்றறிந்தார் தம்மோடி ணைந்திடுவார்

  தாமறிவை விரும்பாமல் தற்குறியாய் வாழ்வார்கள்

       தற்குறிகள் கூட்டத்தில் தாமாய் இணைந்திடுவார்

  காகமது  பிணம் விரும்பி  காடுகளில் அலைதற் போல்

      கற்பில்லா மூடர்களும் மூடர்களோ டிணைவாரே

                                       மூதுரை

                நற்றாமரைக் கயத்தில் நல்லன்னம் சேர்ந்தாற் போல் 

               கற்றாரைக் கற்றாரே காமுறுவர்  -  கற்பிலா

               மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முது காட்டில்

              காக்கை உகக்கும் பிணம்                                                  

      

Thursday, July 10, 2008

திருக்குறள் - காமத்துப்பால்

ர்
ள்Get this widget | Track details | eSnips Social DNA

நடிகர் திலகம 2

கண் நடிக்கும் என்றே நாம் பார்த்து நிற்போம்
கை நடிப்பைப் பார்ப்பதற்கு விட்டுப் போகும்
பண்ணிசைக்கு வாயசைக்க பார்த்திருந்தால்
பாடியது அவரேதான் என்று தோன்றும்
விண்ணவரின் வேடத்தில் அவரும் வந்தால்
விண்ணவர்க்கோ வியப்பினால் இமை துடிக்கும்
கண்ணவரே எங்களது திரைத் துறையின்
கடவுளே சிவாஜி கணேசனன்றோ

குறட் கருத்து காமத்துப் பால்

காதலித்து விட்டேனாம் என்னை விட்டு
கண்ணாளர் பிரிந்தாராம் ஊரே கூடி
பேதலித்து விட்டேன் நான் என்று சொல்லி
பின்னாலும் முன்னாலும் பேசி நிற்பார்
ஆதரவே அவர் தூற்றல் அதனாலன்றோ
ஆருயிரும் அழியாமல் நிற்கின்றது
காதலினை அவர் பேசப் பேசப் பேச
கவலையின்றி வாழுகின்றேன் நல் வினையால்

குறள்

அலர் எழ ஆருயிர் நிற்கும்,அதனைப்
பலர் அறியார் பாக்கியத்தால்

பழம் பாடல் ஒளவையார் மூதுரை

சாதிகளாய் வேறு பட்டு மேலும் மேலும்
சங்கடங்கள் தனைச் சேர்த்து அழியும் மாந்தர்
வீதி தோறும் சங்கங்கள் தன்னைக் கொண்டு
வீணாக அழிகின்றார் அய்யோ பாவம்
சாதிகளா இரண்டேதான் உண்டு என்று
சாற்றுகின்றார் தமிழ்த் தாயாம் அவ்வையாரும்
நீதி நெறி தவறாமல் பொருளை யீட்டி
நெஞ்சாரப் பிறர்க்குதவி நிற்பார் தம்மை


பேதங்கள் இல்லாத பெரியார் என்றும்
பெரும்பொருளை தவறான வழியில் ஈட்டி
நீதி நெறி தவறியே வாழ்வார் தம்மை
நிலை குலைந்த மிகச் சிறியர் என்றும் சொல்லி
சாதி என்றால் மிகத் தெளிவாய்ச் சொல்லிச் சென்றார்
சத்தியத்தை உண்மையினை அவ்வைப் பாட்டி
ஆதியிலே சாதியில்லை இடையில் வந்த
அவமானம் தனை ஒழிப்போம் விரைந்து வாரீர்

மூதுரை

சாதியிரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறி முறையின் - மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்
பட்டாங்கிலுள்ள படி

நடிகர் திலகம்

ஒவ்வொரு அசைவும் நமது உயிரினைக் கொள்ளை கொள்ளும்
அவ்விரு விழிகள் பேசும் ஆயிரம் மொழிகள் தன்னை
செவ்விய தமிழோ அவனால் சிறப்புகள் கோடி கொள்ளும்
சிறு நடை நடந்தால் கூட சிங்கமே ஒதுங்கிக் கொள்ளும்
எவ்விதம் இவனால் மட்டும் இத்தனை முடியும் என்று
அவ்விய நெஞ்சத்தாரின் அழுக்காறு அவரைக் கொல்லும்
பவ்வியம் காட்டும் போதும் பல விதம் காட்டி நிற்கும்
பல்கலைக் கழகம் எங்கள் பார் புகழ் சிவாஜி அண்ணன்

Wednesday, July 9, 2008

அருள்க அய்யா

உடலாலே குறைவு கொண்டோர் தம்மைக் கண்டு
உயிர் பதைத்துப் போகின்றது இறைவன் மேலே
பலவாகக் கோபமதும் வருகிறது
பார்க்கையிலே துன்பமதோ கொல்கிறது
தலைவா உம் பிள்ளைகளில் இவரை மட்டும்
தனியாக்கிப் படுத்துவது நியாயம் தானா
இலை அய்யா இத்துன்பம் எங்களையே
இடர்ப் பாடாய்த் தனியாகக் கொல்கிறது


வினையென்ன காரணம் தான் என்ன என்று
விரிகின்ற பல கேள்வி எமக்கு உண்டு
தலைவா உன் அரசாங்க எல்லைக்குள்ளே
தனியார்க்கு அனுமதியே இல்லை என்ற
நினைவுண்டு எமக்கெல்லாம் என்ற போதும்
நீயளித்த நெஞ்சே தான் கேட்குதிங்கே
குலைவில்லா நல் வாழ்க்கை அனைவருக்கும்
கொண்டளிக்க வேண்டுகின்றேன் அருள்க அய்யா

குறட் கருத்து காமத்துப் பால்

கலந்திருந்தான் கனிந்திருந்தேன் கைகள் தமக்கிடையில்
பிணைந்திருந்தேன் விட்டுப் பிரியாமை வேண்டி நின்றேன்
அலந்திருந்த காரணத்தால் அணைப்பதிலே சிறப்பளித்தேன்
அப்படியே மயங்கியதால் கூடலிலோ வென்றிருந்தேன்
பிரிந்து விட்டான் பேதையெனை உடல் நிறமும் மாறியது
பேசுகின்றார் ஊரார் என் மாற்றமதைப் பெரிதாக
துறந்து சென்ற அவனன்றோ துன்பமதை இழைத்தவன் காண்
தூற்றுகின்றார் அவனை விட்டு எனை என்ன நியாயமிது

குறள்
'பசந்தாள் இவள்' என்பது அல்லால்,இவளைத்
'துறந்தார் அவர்'என்பார் இல்

பழம் பாடல் நாலடியார்

சீவி முடித்திட்ட சிங்காரத் தலையழகும்
சிறப்பாக உடுத்தி நிற்கும் ஆடையதன் பேரழகும்
பாவித்த மஞ்சளினால் பாவை கொள்ளும் நல்லழகும்
மேவியே நின்றாலும் மேன்மை அவர்க்கில்லை நல்ல
சீர் அளிக்கும் கல்வியெனும் நடுவு நிலை கொண்டிலங்கும்
செம்மாந்த பேரழகே அழகு என்று உணர்வீரே
ஊர் நிறைந்த தமிழினத்தீர் கல்வியெனில் நடுவு நிலை
உண்மையெனச் சொல்லுவது நாலடியின் சீரடிகள்


நாலடியார்

குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து
நல்லம் யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு

Tuesday, July 8, 2008

அந்தோ பாவம்

நாட்டினிலே நடக்கின்ற தவறனைத்தும்
நல்லவர்கள் காணுகின்றார் கண்ட போதும்
போர்க் குரலை எழுப்பாமல் வீட்டிற்குள்ளே
பொருமுகின்றார் இருமுகின்றார் புலம்புகின்றார்
ஆர்க்கு வந்த விதியென்று நல்லவர்கள்
அழுகின்றார் புலம்புகின்றார் புரியவில்லை
நீர்க் குமிழி வாழ்க்கையதை வாழ்வதற்காய்
நெஞ்சிழந்து நிற்கின்றார் அந்தோ பாவம்

வ.உ.சி.40 ஆண்டு சிறைத்தண்டனை

ஆர்ப்பரிக்கும் கடலினிலே கப்பல் விட்டு
அதன் முலம் வெள்ளையரை எதிர்த்து நின்று
போர்ப் பரணி பாடி நின்ற சிதம்பரத்தார்
பொது வாழ்வில் தனை அ(ழி)ளித்த பொன் மனத்தார்
சீர் பரவி நின்றாரா தமிழர் நாட்டார்
செய்த நன்றி மறந்தாரே அந்தோ அந்தோ
நீர் நிறைந்த கண்களுடன் நினைந்து நொந்தேன்
நெஞ்செல்லாம் புண்ணாகிப் புலம்புகின்றேன்

பார் முழுதும் அரசியலில் பங்கு பற்றி
பல விதமாய்ப் பாடு பட்டோர் இடையில் தன்னின்
சீர் அனைத்தும் இழந்து நின்ற சிதம்பரத்தை
செக்கிழுத்து நமக்குழைத்த செந்தமிழை
ஆர் நினைத்துப் பார்க்கின்றார் அந்தோ அந்தோ
அடிமை விலங்கறுத்தவரை மறந்தார் அந்தோ
ஊர் முழுதும் தவறானோர் விழாக்கள் காணும்
ஊமை மக்காள் உணர்ந்திங்கு பழி நீக்கீரோ

குறட் கருத்து காமம்

காணுகின்ற மலர்கள் எல்லாம் கவிழ்ந்து கொள்ளும்
கண்மணி உன் கரு விழிகள் கண்டு விட்டால்
நாணி நிற்கும் அம்மலர்கள் உந்தனது
நளின விழி தனைக் கண்டால் என்று என்றும்
வானளவு புகழ்ந்திட்ட காதலர்தாம்
வரவில்லை என்பதனால் விழியிரண்டும்
ஆன மட்டும் அழுதழுது அழகிழக்க
ஆடி நிற்கும் மலர்கள் எல்லாம் ஆர்ப்பரித்து


குறள்

சிறுமை நமக்கு ஒழியச் சேண் சென்றார் உள்ளி
நறு மலர் நாணின கண்

பழம் பாடல் காளமேகம்

ஆண்டவனின் தலையினையேக் கண்டு விட
அன்னமதில் ஏறிப் பிரமன் மேலே செல்ல
காண்பதற்கு அரிதான திருவடிகள் தன்னைக்
கண்டு விடப் பூமிக்குள் திருமால் தானும்
பூண்டு நின்றார் பன்றியதன் வடிவம் தன்னை
பூமியினைத் தோண்டி அதன் உள்ளே சென்றார்
காண்பதற்கு முடிந்ததுவோ இருவராலும்
கண்ணுதலான் அடி முடியை இல்லை இல்லை


வேண்டி நிற்பார்க்கு அருள் செய்யும் இறைவன் இவர்
வீம்பு கண்டே இவர்களுக்கு அருளவில்லை
பூண்ட நல்ல அன்பு கொண்ட அடியவரின்
பொன் மனத்தால் அவர்களுக்கு ஏவல் செய்வான்
ஆண்டவனின் அடி முடியைக் காண்பதற்கு
அன்று திருமாலுக்கும் பிரமனுக்கும்
வேண்டியதோர் வழி சொன்னான் காளமேகம்
விரித்துரைப்பேன் களி கொள்வீர் படித்து விட்டு


ஆரூரின் தோழர் அவர் சுந்தரராம் அவருக்காய்
அன்றொரு நாள் இரவு நேரம்
தேரூரும் திருவாருரின் வீதிகளில்
திருவடிகள் பதித்து இறைவன் நடந்து சென்றார்
பாலூறும் பக்தி கொண்ட பரவையாரின்
படி தாண்டி இரண்டு முறை சென்று வந்தார்
போய் அந்த நிலைப் படியாய் இருவருமே
பொருந்தி அவர் அடி முடியைக் காணலாமாம்

சீராய் ஒரு வெண்பாவில் காளமேகம்
செப்புகின்றார் இவ்வழியை இருவருக்கும்
ஊராரே உணர்வீர் நீர் ஏழை அன்பர்
ஒவ்வொருவர் அழைத்தாலும் வருவான் அவன்
நீர் பெரியர் என்ற எண்ணம் கொண்டு சென்றால்
நெருங்கிடவே முடியாதாம் இறைவன் தன்னை
ஆர் எனினும் திருமாலும் பிரமன் தானும்
அறிந்திடவே சொல்லுகின்றார் காளமேகம்


காளமேகம்
ஆனார் இலையே அயனும் திருமாலும்
கானார் அடி முடி முன் காண்பதற்கு - மேனாள்
இரவு திருவாரூரில் எந்தை பிரான் சென்ற
பரவை திரு வாயிற் படி

பொதிகைத் தொலைக்காட்சி

அன்புடையீர்.
வணக்கங்கள்.4ம் தேதி நண்பர் முனிரெத்தினம் கல்வி நிலையங்களில் முற்றிலுமாக இருந்தேன்.
மறு நாள் வழக்கம்போல எனது பிள்ளைகள் திரைப் படப் பாடலாசிரியர்கள் பழனி பாரதி
நந்தலாலாவும் தம்பி நெல்லை ஜெயந்தாவும் சிறந்த புகைப்படக் கலைஞர் க்ளிக் ரவியும் வந்தி
ருந்தனர். அத்தனைக்கும் மேலாக அண்ணன் இலக்கிய வீதி இனியவன் அவர்கள் வந்திருந்தார்.

மாலையில் பொதிகைத்தொலைக் காட்சிக்கு காலை நேர நிகழ்ச்சிக்காக தம்பி இராஜேந்திரன்
நண்பர் சாமி.நண்பர் வீரபாகு.நண்பர் இளங்கோ.நண்பர் சுந்தரம் ஆகியோர் நான் தங்கியிருந்த
நியு உட்லண்ட்ஸ் விடுதிக்கு வந்து படம் பிடித்துச் சென்றனர்.

அன்று இரவு புறப்பட்டு நெல்லை வந்தேன்.6 ம் தேதி காலை நெல்லையில் உள்ள வ.உ.சி.
மணி மண்டபத்தில் வ..உ.சி.அவர்களுக்கு உலக வரலாற்றிலேயே எவருக்கும் தரப் படாத மிகக்
கொடுமையான தண்டனையை( 40 ஆண்டுகள்) வெள்ளை நீதிபதி பின்கே வழங்கிய நூறாவது ஆண்டின் நினைவாக
எனது பிள்ளை ஒவியர் வள்ளி நாயகத்தின் ஒவியக் கண்காட்சி சிறப்புற நடந்தது.பெரியவர்
உயர் திரு தி.க.சிவசங்கரன் அவர்கள் தலைமை வகித்தார்கள்.பேராசிரியர்கள் ஆ.சிவசுப்பிரமணியம்.தொ.பரமசிவம் மாணிக்கம்.கவிஞர் அண்ணன் இளசை அருணா இளசை
மணியன் வ.உ.சியின் வழித் தோன்றல்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.இறுதியில் நான்
சிறப்புரையாற்றினேன். அன்று இரவே காரைக்குடி சென்று தங்கினேன்.7ம் தேதி உழைப்பால்
மட்டுமே உயர்ந்த பெரியவர் வைரம் வடிவேல் செட்டியார் அவர்களின் எண்பதாவது ஆண்டு
நிறைவு விழாவில் கலந்து கொண்டு தமிழால் வாழ்வோம் என்ற தலைப்பினில் பேசினேன்.
தமிழ் வளர்க்கும் நகரத்தார்கள் சுவைத்துப் பாராட்டினர்.நான்கு தினங்களாக வலைப் பூவில் நான்
எழுதாத காரணம் இதுவே.பொறுத்துக் கொள்ள வேண்டுகின்றேன்.நன்றி
தங்கள் அன்பின் அடிமை
நெல்லைக்கண்ணன்

முனிரெத்தினத்தின் கல்வி நிலையங்கள்

அன்புடையீர்.
வணக்கங்கள்.முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் அருமை நண்பர் திரு முனிரத்தினம்
அவர்களின் கல்வி நிறுவனங்களின் புது மாணவர்களை வரவேற்கும் விழாவில் தலைமை
விருந்தினராகக் கலந்து கொள்ளச் சென்றிருந்தேன்.ஆர்.எம்.டி. ஆர்.எம்.கே.பொறியியற் கல்லூரி
கள்.துர்கா தேவி பாலி டெக்னிக் கல்லூரி சிறு குழந்தைகளுக்கு உறைவிடப்பள்ளி என்று 500
ஏக்கரில் அந்தக் கல்வி நிறுவனங்கள பரந்து விரிந்து இருப்பதனைப் போலவே அதனை நிர்வகிக்
கின்ற முனிரத்தினத்தின் மனைவியும் மகனும் மாமனார் அவர்களும் பரந்த உள்ளத்தினராகவே
உள்ளனர்.சுத்தம் சுத்தம் கல்லூரிகள் அத்தனை சுத்தம்.மாணவர்களைப் பார்க்கச் செல்கின்ற பெற்
றோர் நண்பர்கள் யாரெனினும் அங்கே உணவருந்தாமல் வர முடியாது.நல்ல அருமையான உணவு
அத்தனை கல்லூரிகளும் ஒரே வளாகத்தினுள் இருந்தாலும் ஒவ்வொன்றிற்கும் தனித் தனி விளை
யாட்டு அரங்குகள்.குளிருட்டப்பட்ட உடற் பயிற்சிக் கருவிக் கூடங்கள்.150க்கும் மேற்பட்ட
பேருந்துகள்.ஒட்டுநர்களிலிருந்து அனைவருக்கும் மிக மிகச் சுத்தமான உணவருந்தும் இடங்கள்.
அத்தனையும் சுத்தமான இடங்கள். ஒவ்வொரு பிரிவிலும் மாணவர்களுக்கு தனித் தனி முடி
திருத்தும் நிலையங்கள் குளிரூட்டப் பட்டவை.குழந்தைகளுக்கான உறைவிடப் பள்ளியின் சிறப்பை
வரிகளில் அடக்கி விட முடியாது.ஒழுக்கம் மாணவர்களுக்குச் சரியான முறையில் உணர்த்தப் பட்
டுள்ளது.எந்த மாணவரிடமும் கைத் தொலைபேசி கிடையாது.உடை என்ற பெயரில் கண்ணியக்
குறைவிற்கு அனுமதி இல்லை.மிக மிக என்னை வியப்பிலாழ்த்தியது முனிரத்தினம் அவர்களது
மொத்தக் குடும்பமும் காலை 8 மணிக்குக் கல்லூரிக்கு வந்தால் இரவு 8 மணிக்கே வீடு திரும்பு
கின்றனர்.கல்விக் கூடங்களைச் சுற்றி மரங்களும் செடிகளும்.நேபாளக் காவலாளிகள் 200க்கும்
மேற்பட்ட குடும்பத்தினர் அவர்களுக்கு அருமையான உறைவிடங்கள் தந்துள்ளார்கள்.

ஒரே செய்திதான் உங்களுக்குச் சொல்வேன்.நண்பர் முனிரெத்தினம் கல்லூரிகளில் படிக்கவும்
கொடுத்து வைத்திருக்க வேண்டும்.பணி புரியவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

அனைவருக்கும் அரசு குறித்துள்ள ஊதியம் சரியாகத் தருகின்றனர்.

கல்வி நிறுவனங்களை சிறப்பாக நடத்தி வரும் திரு முனிரெத்தினம் அவரது துணைவியார்
மஞ்சுளா அவர்கள் அவர்களது திருமகன் கிஷோர் பெரியவர் ஜோதி நாயுடு அவர்கள் அனை
வருக்கும் இறைவன் நீண்ட ஆயுளைத் தந்து இந்தச் சிறந்த கல்வித் தொண்டினைத் திறம்படத்
தொடர அருள் வேண்டும் என்று ஆண்டவனை வேடி நிற்கின்றேன்.

தங்கள் அன்பின் அடிமை
நெல்லைக்கண்ணன்

Thursday, July 3, 2008

உயர்வு தரும்

குணம் கொண்ட பெரியோர்கள் பணத்தின் முன்னே
கும்பிட்டு நிற்பதில்லை அவர் அறிவார்
பிணமாக்கும் மனிதர்களை உயிரோடிங்கு
பேதைகளாய் ஆக்கி நிற்கும் பணமேயென்று
மணம் கொண்ட வாழ்க்கை கொண்டு மகிழுதற்கு
மனிதர்களாய் வாழ்வதற்கு அன்பு ஒன்றே
தினம் உங்கள் உள்ளிருந்து உதவி செய்யும்
தெய்வம் உமை அரவணைக்கும் உயர்வு தரும்

குறட் கருத்து காமத்துப் பால்

பிரிந்து சென்ற காதலனைப் பேதைப் பெண்ணாள்
பெருமையுடன் மனத்திற்குள் வைத்து வைத்து
நினைந்தவனை அதனாலே வாழுகின்றாள்
நெஞ்சமதின் சிறப்பான உதவியுடன்
பெருந்தன்மை கொண்டவனாம் காதலனும்
பிதற்றுகின்றாள் பெண்ணவளும பித்தாய் ஆகி
தினம் தினமும் அவனையே நினைத்த போதும்
திருமகனோ கோபமின்றி அனுமதித் தானாம்

குறள்

எனைத்து நினைப்பினும் காயார் அனைத்து அன்றோ
காதலர் செய்யும் சிறப்பு

பழம் பாடல் புதுக்கவிதை காளமேகம்

உணவருந்தச் சென்றிருந்தார் காளமேகம்
ஒவ்வொன்றாய் உண்டு அவர் முடிக்கையிலே
நினைவாக இறுதியிலே மோரை உண்டு
நிறைவாக்க முயல்கின்றார் அந்த நேரம்
கனிவாக மோர் தன்னை ஊற்றுகின்றார்
கவலையின்றி அவ்வீட்டார் புலவருக்கு
பணிவோடு அம்மோரின் பெருமை தன்னை
பாடலிலே வைக்கின்றார் புலவர் தானும்

வானத்தில் இருந்தாய் நீ மேகமென்றார்
வந்தாய் நீ தரையினிலே தண்ணீர் என்றார்
கான் மலையின் மார்பகத்து ஆய்ச்சியர் தம்
கைகளிலே வந்த உடன் மோரேயானாய்
நான் அறிந்தேன் உன் பெருமை ஆமாம் இந்த
நானிலத்தில் முப்பெயரைக கொண்டாய் நீயே
நீர் அறிவீர் மோரதுவும் நீராய் ஆன
நிலை கண்டு காளமேகம் தந்த பாடல்

காளமேகம்

கார் என்று பேர் பெற்றாய் ககனத்துறும் போது
நீர் என்று பேர் பெற்றாய் நெடுந்தரையில் வந்ததற்பின்
வாரொன்று மென்முலையார் ஆய்ச்சியர் கை வந்ததற் பின்
மோரென்று பேர் பெற்றாய் முப்பேரும் பெற்றாயே

Wednesday, July 2, 2008

அளித்தனர்

இன்னும் நான் கற்கவில்லை என்பதை உணர்கின்றேன் ஆம்
எளியனாய் மீண்டும் மீண்டும் கற்றிட முயல்கின்றேன் நான்
அன்னையாம் தமிழோ என்னை அணைத்திங்கு ஆதரித்தாள்
அவள் பிள்ளை என்று சொல்லி ஆடினேன் பாடி நின்றேன்
மன்னவர் காலம் தொட்டு மக்களே தம்மைஆளும்
மாபெரும் வாய்ப்பைப் பெற்று மனம் போல ஆளும் நேரம்
சின்னவன் நானும் இங்கே சிறப்புடன் தமிழால் வாழ
அன்னையும் தந்தை தானும் அளித்தனர் என்னை இங்கு

உணர்வீர் நீரே

ஏழைகட்கு கல்வி கற்க உதவுதற்காய்
எடுக்கின்றார் விழா ஒன்று ஊரில் உள்ளோர்
ஏழை வீட்டுக் குழந்தைகளைக் கொண்டு வந்து
ஏற்றுகின்றார் மேடையிலே உதவி செய்ய
கோழைகளாய் அவர் பெற்றோர் குழந்தைகளின்
கூட வந்து நிற்கின்றார் வறுமையாலே
ஏழைகட்கு உதவுவதை புகைப் படமாய்
எடுத்ததனைச் செய்தியென ஆக்குகின்றார்


குழந்தைகளைக் கொண்டு வந்து ஏழையெனக்
கூட்டத்தில் காட்டி மனம் கொல்லுகின்றார்
இழப்பதுவோ அவர் மானம் கொடுப்பவரும்
இழக்கின்றார் தன் மானம் ஆமாம் ஆமாம்
கொடுப்பதனை ஊருக்குச் சொல்லுவதும்
குழந்தைகளை ஏழையெனக் கொல்லுவதும்
சிறப்புடைத்தோ இல்லை இவர் செய்கை இது
சிறுமையினைக் காட்டுவதே உணர்க நீரே

குறடகருத்த காமததுப் பால்

ஓடி ஓடிப் பார்ர்த்ததுவும் இந்தக் கண்கள்
உள்ளமதில் சேர்த்ததுவும் இந்தக் கண்கள்
ஆடிப் பாடி மகிழ்ந்ததுவும் இந்தக் கண்கள்
அயலார்க்குச் சொன்னதுவும் இந்தக் கண்கள்
வாடி வாடி இன்றழுமே இந்தக் கண்கள்
வதை பட்டு துன்பமுறும் இந்தக் கண்கள்
போடி இது சிரிப்பிற்கே இடம் என்கின்றாள்
பொன்னழகி தன் கண்ணைத் தானே இங்கு

குறள்

கதும் எனத் தாம் நோக்கித் தாமே கலுழும்
இதுநகத் தக்கதுடைத்து

பழம் பாடல் கம்பன்

மதுவினால் மயக்கம் கொண்டாள்
மன்மதன் அம்பும் கொண்டாள்
இது விளை காலம் தன்னில்
இல்லையே கணவன் என்று
துகில் இடை மேலே நல்ல
தூமணி மேகலையை
அணிந்துளாள் தோழி தன்னை
அனுப்புவாள் தூது சொல்ல

உடன் அவன் இங்கே வேண்டும்
உண்மையை உணர்த்து நீயும்
திடமாகச் சென்று சொல்லி
திரும்ப நீ வருதல் வேண்டும்
மடந்தையே நீயும் எந்தன்
மனம் போல அங்கேயே போய்
இருந்திட வேண்டாம் என்றே
இயம்பியே நின்றாள் நங்கை

கம்பன்

கனை கழல் காமனால் கலக்கம் உற்றதை
அனகனுக்கு அறிவி என்று அறியப் போக்கும் ஒர்
இனமணிக் கலையினாள் தோழி நீயும் என்
மனம் எனத் தாழ்தியோ? வருதியோ என்றாள்

Tuesday, July 1, 2008

ஈரோடு புற்று நோய்மைய ஆண்டுவிழா


பட்டுக்கடைச் சம்பந்தி மகாதேவன் பட்டாடை போர்த்துகின்றார்

ஈரோடு புற்றுநோய் மைய ஆண்டுவிழா


வலது புறம் இருந்து இரண்டாவது உயிர் நண்பர் எஸ்.ஆர்.எஸ்.

ஈரோடு புற்றுநோய் மைய ஆண்டுவிழா


இனிய நண்பர் பொறியாள்ர் மனோகரனோடு

புற்று நோய் மைய ஆண்டுவிழா ஈரோடு


முதல் வரிசையில் இடதுஒரம சமுகப் போராளி ஸ்டாலின்

ஈரோடு புற்று நோய் மைய ஆண்டுவிழா


வழி காட்டி ஜீவாவும் வளரும் வேலவனும்

ஈரோடு புற்று நோய்மையம் ஆண்டுவிழா


இளைய இனிய மருத்துவர் வேலவனோடு

ஈரோடு புற்று நோய் மைய ஆண்டுவிழா


சமுக ஆர்வலர் மருத்துவர் ஜீவா பரணி பட்டுக்கடை மகாதேவன்

காந்தி அடிகள்

பூரியிலே இருக்கின்றார் காந்தி அண்ணல்
புகழ் பெற்ற ஜகன்நாதர் கோயிலின் ஊர்
சேரியிலே இருக்கின்றார் சூழ்ச்சியினால்
சிறுமைக்கு உள்ளான அரிஜனங்கள்
யாரும் அந்த கோயிலுக்குப் போதல் வேண்டாம்
என்பதுவே காந்தி அண்ணல் உண்மை உள்ளம்
சீர் உணர்ந்து அரிஜனங்கள் கோயிலுக்குள்
செல்லும் வரை நமக்கில்லை கோயில் என்றார்


ஆர்வமதால் விளைந்திட்ட ஆசையினால்
அன்னை கஸ்தூரி பா செல்ல முடிவெடுத்தார்
சேர்ந்து மகாதேவ தேசாய் அங்கு அவருடனே
சென்று விட்டார் கோயிலுக்கு வணங்கி வந்தார்
சோர்ந்து விட்டார் அடிகளுமே செய்தி கேட்டுச்
சொல்லொணாத துயரத்தில் ஆழ்ந்து விட்டார்
வீழ்ந்ததங்கு அவர் நாடித் துடிப்பு உடல்
வியர்க்கிறது மருத்துவர்கள் ஒடி வந்தார்

ஆழ்ந்த ஒரு கவலை கொண்டார் அடிகள் தானும்
அறிவித்தார் துணைவிக்கும் நண்பருக்கும்
தேர்ந்தெடுத்த கொள்கை வழி விட்டு நீங்கள்
திருடரைப் போல் கோயிலுக்குச் சென்றதென்ன
பேர்ந்ததெந்தன் மனம் என்றார் தேசாய் சொன்னார்
பெரிய நல்ல மகானோடு இருத்தல் என்றல்
தான் துயரம் ஒரு நொடியில் தவறினாலே
தந்தையையே இழந்து விட இருந்தோம் என்று

குறட் கருத்து காமத்துப் பால்

காதலனைப் பிரிந்து வெந்தாள் மங்கை நல்லாள்
கண்ணுறக்கம் கொள்ளவில்லை கண்ணீர் வேறு
சாதலுக்கு வழி உண்டா என்றால் அவன்
சரியாக மனத்துக்குள் அமர்ந்துளானே
பேதலித்துப் போன பெண்ணாள் பேசுகின்றாள்
பிரிவில் அழும் கண்களினைப் பார்த்து பார்த்து
நீர் தந்த நோய் தானே அவரைப் பார்த்து
நீர் வழிய அழுங்கள் எனக்கு இனிமை ஈது


குறள்
ஓ ஓ இனிதே எமக்கிந்நோய் செய்த கண்
தா அம் இதன் பட்டது

பழம் பாடல் கம்பன்

ஆடினார் நீரில் அவர் ஆடிய ஆட்டம் தன்னால்
மூடிய மார்பை விட்டு சந்தனம் கரைந்து போக
கூடிய நேரம் அந்தக் குவி முலைக் கூட்டம் தன்னில்
கொண்டவர் வைத்து நின்ற நகக் குறி வெளியில் தோன்ற
வேள்வியின் பொன்னாலான கலசங்கள் நூல் கொண்டாற் போல்
வெறி நகக் குறிகள் தோன்ற காதலர் எரிகின்றாராம்
வேள்வியாய்க் காமம் தானும் விளைவதே நன்று என்று
ஆழ் மன எண்ணம் தன்னை அழகுறக் கம்பன் தந்தான்

கம்பன்

எரிந்த சிந்தையர., எத்தனை என்கெனோ
அரிந்த கூர் உகிரால் அழி சாந்து போய்
தெரிந்த கொங்கைகள்,செவ்விய நூல் புடை
வரிந்த பொற் கலசங்களை மானவே