Saturday, March 28, 2009

பழம் பாடல் பட்டினத்தார்

இறுதி வரை மனிதருக்குள் இருக்கும் அந்த
இன்ப விழைவொன்றாலே தடுமாறித்தான்
உறுதிப் பொருள் ஆன நந்தம் இறைவன் தன்னை
உள்ளத்துள் கொள்ளாராய் மனத்திற்குள்ளே
குருதியுடன் சீழுடனும் தான் பிறந்த
குமைக்கின்ற குறியதனை எண்ணுகின்றார்
தரும் கல்விக்கண்கள் அவை இரண்டினாலே
தகி மார்பே தேடுகின்றார் அய்யோ அய்யோ

பட்டினத்தார்
சிற்றம்பலமும் சிவனும் அருகிருக்க
வெற்றம்பலம் தேடி விட்டோமே-நித்தம்
பிறந்த இடத்தை நாடுதே பேதை மட நெஞ்சம்
கறந்த இடத்தை நாடுதே கண்

Friday, March 27, 2009

பொறுத்திருப்போங்க

வேட்பாளர் சொத்துக் கணக்குக் காட்டிடு வாங்க இங்க
காட்டிடுவாங்க அதில்
விதம் விதமாய்ப் பட்டியலைப் பாத்திடலாங்க

சாப்பாட்டுக் கில்லாமல் சாலையோரத்தில் நமது
சாலையோரத்தில்
சங்கடங்கள் படுவார்க்காய் இவர்கள் வாராங்க

பாட்டனது காலத்திலே சோறு இல்லாம திங்கச்
சோறு இல்லாம
பரிதவச்ச பழைய நெலம மறந்து போட்டாங்க

ஆட்டம் போட்டுக் கோடிக் கணக்கில் அள்ளிக் கிட்டாங்க
ஆமா அள்ளிக் கிட்டாங்க
ஆரம்பத்தில் துணியுமின்றி அலஞ்சிருந்தவங்க

பாட்டன் பூட்டன் பரம்பரையே ராஜ பரம்பரை
ஆமா ராஜ பரம்பரை என்று
பல விதத்தில் சேதி சொல்லி பரிதவிப்பாங்க

ஆட்டம் இந்த ஆட்டம் இது நடக்கட்டுங்க
ஆமா நடக்கட்டுங்க
ஆண்டவனார் தீர்ப்பு உண்டு பொறுத்திருப்போங்க

ஆட்சிசெய்வாங்க

கூட்டணிகள் மாறுவதில் ஒண்ணுமில்லீங்க இங்க
கொள்கையில்லாக் கூட்டணியில் சத்து இல்லீங்க
வாக்கணியாய் மாறி இவர் வாழப் பாக்காங்க நாம
வறுமை இன்மை எல்லாம் பாக்க நேரமில்லைங்க
தோக்கடிக்க முடியாம தோத்துப் போறோங்க நாம
தோத்துப் போறோங்க இவர்
துளிக் கூட வெட்கமின்றி ஆட்சி செய்வாங்க
தூத்தூ ஆட்சி செய்வாங்க

Thursday, March 26, 2009

பாத்துப் புட்டீங்க

வாக்குத் தாருங்க அய்யா வாக்குத் தாருங்க தலைவர்
வளம் சேர்த்து வாழ ஒங்க வாக்கைத் தாருங்க
நோக்கம் போலங்க ஒங்க நோக்கம் போலங்க
நோட்டுக்களை நாங்களுமே தந்திருவோம்ங்க
பாக்கப் போறீங்க நீங்க பாக்கப் போறீங்க
பலவிதமாய் அறிக்கைகளைப் பாக்கப் போறீங்க
போக்குக் காட்டத் தான் அதெல்லாம் போக்குக் காட்டத்தான்
புரியாமலா தேர்தல் எத்தனை பாத்துப் புட்டீங்க

Wednesday, March 25, 2009

வாழுகின்றார்

தவறாகப் பொருளீட்டி வாழ்வோரெல்லாம்
தனியாக வாழ்கின்றார் மனத்திற்குள்ளே
அவமானம் உணர்ந்தேதான் வாழுகின்றார்
ஆனாலும் பணம் சேர்க்க ஒடுகின்றார்
குலமானம் இனமானம் வாழ்வின் மானம்
கூட்டாக்க முடியாமல் கலங்குகின்றார்
பணமான துன்பத்தால் என்றும் எங்கும்
பரிதாபமாகவே வாழுகின்றார்


சேர்த்துள்ள பணத்தாலே தாம் விரும்பும்
சீரான பொருள் யாவும் வாங்குகின்றார்
பார்த் தெவரும் போலியாய் வணங்கி நின்றால்
பாவத்தை மனத்துக்குள் எண்ணுகின்றார்
ஆர்த்தாலும் பேர்த்தாலும் உலகம் தம்மை
அவமானமாகத் தான் பார்க்குமென்று
வேர்த்தாராய் மனத்துக்குள் அழுதழுது
விரும்பாத வாழ்க்கையதை வாழுகின்றார்

Tuesday, March 24, 2009

துட்டைத் தாங்க

ஆடுங்க பாடுங்க கொண்டாடுங்க
அடுத்த தேர்தல் வரும் வரைக்கும் திண்டாடுங்க
கூடுங்க கூட்டணியாய் ஏமாத்துங்க
கொடுப்பதற்காய் வாக்களிப்பார் எங்காளுங்க
சோறுங்க தண்ணிங்க எல்லாம் தாங்க
சொத்தை எல்லாம் நீங்களேதான் சேத்துக்குங்க
ஊருக்குத் தண்ணி வேண்டாம் பள்ளி வேண்டாம்
ஒங்களுக்கே வாக்களிப்போம் துட்டைத் தாங்க

மறந்திடுங்க ஜோரா

வந்திருச்சு வந்திருச்சு வந்திருச்சு தேர்தல்
வளமெல்லாம் வெளியில் வர வந்திருச்சு தேர்தல்
வந்திருச்சு வந்திருச்சு வந்திருச்சு தேர்தல்
வன்முறையைத் தூண்டி விட வந்திருச்சு தேர்தல்
வந்திருச்சு வந்திருச்சு வந்திருச்சு தேர்தல்
வாய்ச் சால வீரருக்காய் வந்திருச்சு தேர்தல்
வந்திருச்சு வந்திருச்சு வந்திருச்சு தேர்தல்
வடிவழகு நடிகையருக்காய் வந்திருச்சு தேர்தல்



வருங்கால வாழ்க்கைக்காய் வந்திருச்சு என்று
வாய்ச் சால வீரர்களும் வழியெல்லாம் சொல்வார்
தருங்காலம் என்று இதை ஏழையர்கள் எல்லாம்
தருவதையே பெற்று தங்கள் எதிர்காலம் கொல்வார்
பெறும் காலம் என்று தங்கள் கள்ளப் பணம் எல்லாம்
பிரியமுள்ள தலைவர்களும் அள்ளி அள்ளித் தருவார்
கருங்காலம் நம் நாட்டின் எதிர்காலம் எல்லாம்
காந்தி காமராஜர் எல்லாம் மறந்திடுங்க ஜோரா

ஜிங்கு ஜிக்காம் ஜிங்கு ஜிக்காம் ஜிங்கு ஜிங்குச்சாம்

அங்க இங்க கூத்தணியாய் மாறிக் கிறாங்க
அய்யோ பாவம் தமிழன் மானம் தெருவில் கிடக்குது
பொங்கல் வைத்துக் கிடா வெட்டும் போக்கு அது மட்டும்
பொதுத் தேர்தல் என்ற பெயரில் மீண்டும் நடக்குது
சங்கறுக்க வாராங்க என்று தெரிந்துமே எங்க
சனங்க மட்டும் திரும்பத் திரும்பத் தலை கொடுப்பாங்க
திங்கதுக்குச் சோறு தந்தா தின்னுக்குவாங்க
தேர்தல் தோறும்பரிசுகளை வாங்கிக்குவாங்க
ஜிங்கு சக்காம் ஜிங்கு சக்காம் ஜிங்கு ஜிங்குச்சாம்
ஜிங்கு சக்காம் ஜிங்கு சக்காம் ஜிங்கு ஜிங்குச்சாம்

மீட்டுத் தாருங்க

காந்தித் தாத்தா காந்தித் தாத்தா ஒங்களைத்தானே
கையெடுத்துக் கும்பிடுதோம் ஏழைக நாங்க
ஏந்தி நீங்க வாங்கித் தந்த விடுதலை தன்னை
ஏய்ப்பவர்கள் தங்களுக்கு எடுத்துக்கிட்டாங்க
மாஞ்சு மாஞ்சு நாங்களுமே வாக்களிக்கிறோம்
மறுபடியும் மறுபடியும் தவறு செய்வோர்க்கே
வேண்டி நின்றோம் ஒங்களையே மீண்டும் வந்து எம்
விடுதலையை எங்களுக்கே மீட்டுத் தாருங்க

Monday, March 23, 2009

நெஞ்சம் பதறுதே

கூட்டணியாய்க் கூட்டணியாய்க் கூட்டமாய் வருவார்
இவர் கூட்டணியாய் வருவார்
கொள்கை கொடி என்றெல்லாம் கோஷங்கள் இடுவார்
இவர் கோஷங்கள் இடுவார்
நாட்டணியாய் இன்றும் வாழும் நல்லவரெல்லாம்
அந்த நல்லவரெல்லாம்
நாணிக் கோணித் துன்பமுற வேடங்கள் கொள்வார்
இவர் வேடங்கள் கொள்வார்
பாட்டனாக பெருமை சேர்த்த காந்தி மகானை
அந்த காந்தி மகானை
பைத்தியம் போல் ஆக்கி இவர் பதவிகள் கொள்வார்
இவர் பதவிகள் கொள்வார்
கேட்க இங்கு யாருமில்லை யாருமில்லையே
ஆமாம் யாருமில்லையே இந்தக்
கேடு கெட்ட மனிதர் ஆட்டம் ஒயவில்லையே
இன்னும் ஒயவில்லையே
பாட்டுப் பாடி இவரையுமே புகழுகின்றாரே
சிலர் புகழுகின்றாரே அந்தப்
பாவிகளைக் காண்கையிலே நெஞ்சம் பதறுதே
நமது நெஞ்சம் பதறுதே

அஞ்சிச் சாவோமே

வாக்களித்து வாக்களித்து ஒஞ்சு போவீங்க
நீங்க ஒஞ்சு போவீங்க
வகை வகையாய் ஜெயித்து மேலும் சேர்த்திடுவாங்க
அவங்க சேர்த்திடுவாங்க
போக்களிந்த வாழ்க்கை யிதைத் தருவதற்காக
நமக்குத் தருவதற்காக
பொக்கை வாயின் கிழவர் காந்தி பொய்யொழித்தாரே
ஆமாம் பொய்யொழித்தாரே
நாக்கை மட்டும் நம்பி வாழும் நாசகாரர்கள்
இந்த நாசகாரர்கள்
நாட்டை விற்றுத் தாங்கள் வாழக் கூட்டுச் சேர்வாரே
ஆமாம் கூட்டுச் சேர்வாரே
வாக்களித்து நமது உரிமை தனை இழப்போமே
நாமும் நமை இழப்போமே
வந்தவர்க்கும் செல்பவர்க்கும் அஞ்சிச் சாவோமே
நாமும் அஞ்சிச் சாவோமே

Friday, March 20, 2009

அடிமையாகுங்க

வாக்குச் சீட்டு வைத்துள்ளார் அனைவரையும்
வருக வருக என்றே வரவேற்கின்றோம்
ஆக்குகின்றோம் சோறு எல்லாத் தொகுதியிலும்
அன்பாகப் பரிமாற ஆளும் உண்டு
நாக்குக்கு ருசியாக கறி வகைகள்
நாற்புறமும் ஆடு கோழி அனைத்தும் வாங்கி
கோக்கு மாக்கா அறுத்துள்ளோம் உங்களுக்காய்
கூட்டமாகத் தின்னுட்டு வாக்கைத் தாங்க


வெற்றி பெற்ற பின்னாலும் சோறு தருவோம்
வீடு வீடாய் வாருங்க தின்னுட்டுப் போங்க
கட்டு கட்டாய்ப் பணமும் வரும் கவலை வேண்டாம்
கணக்காக வாக்கை மட்டும் போட்டுட்டுப் போங்க
எட்டுத் திக்கும் எங்களுக்கு வெற்றி வேணும்
எம்புட்டுத் துட்டுன்னாலும் தந்திருவோங்க
சத்தியத்தார் காந்தி படம் போட்ட நோட்டு
சட்டுன்னு வாக்களிங்க அடிமையாகுங்க

போற்றி நிற்போம்

தமிழ் கற்றார் தன் நிலையை இழப்பதில்லை
தனக்காகப் படித்தாரே தாழ்ந்து நின்றார்
அமிழ்தல்ல நந்தம் மொழி அனைவருக்கும்
அன்னையெனச் சோறூட்டும் அன்பு மொழி
உமிழ் நீரும் தேனாக்கும் அன்பு மொழி
உலகு காக்கச் சொல்லி நிற்கும் தாயின் மொழி
கமழ்கின்ற சந்தனமா இல்லை யில்லை
கண்ணீரைத் துடைக்க வந்த கருணை மொழி


எந்நாடும் நம் நாடு உலக மக்கள்
எல்லாரும் நம் உறவு என்று சொன்ன
பன்னாட்டுச் சிந்தனையை உலகுக்கீந்த
பனிக் கணியன் பூங்குன்றன் நந்தம் தாத்தா
சொன்னார்கள் நல்லதெல்லாம் உலகம் வாழச்
சொன்னார்கள் நமக்கென்று மட்டுமின்றி
கண்ணாகப் போற்றி அந்த வழியில் வாழ்ந்து
கண்ணியத்துத் தமிழ் அன்னை போற்றி நிற்போம்

Thursday, March 19, 2009

தேர்தல் வெல்க

மக்களாட்சி மலர்வதற்காய் தேர்தல் என்னும்
மாபெரிய கடமையினை ஆற்ற வேண்டும்
இக்கணமே அனைவருமே எழுந்து நிற்பீர்
இனிய அந்த பொத்தானை அழுத்தித் தோற்பீர்
தக்கவர்கள் தகாதவர்கள் என்று எல்லாம்
தடுமாறித் தொலையாதீர் தலைவர் தங்கள்
மக்களவர் ஆட்சி அது மலர்வதற்காய்
மனம் கொண்டு நடத்துகின்ற தேர்தல் வெல்க

வாக்கை அளியும்

காந்தி வந்திருவார் மாமா நேரு வந்திருவார்
கண்ணியத்துக் காமராஜர் தானும் வந்திருவார்
ஏந்திழையார் அன்னை இந்தி ராவும் வந்திருவார்
இழநத இனிய தலைவர் ராஜீவ் காந்தி் வந்திருவார்
சேர்ந்து வந்திருவார் சுவ ரொட்டிகள் தோறும்
சிரித்த முகத்தில் வாக்கு கேட்க வந்து நின்றிடுவார்
ஆய்ந்து பாருங்கள் இவர்கள் அத்தனை பேரும்
அடுத்த தேர்தல் வந்தவுடன் மீண்டும் வந்திடுவார்


ஆய்ந்தறிந்த தந்தை பெரியாரும் வந்திடுவார்
அவரோடு அறிஞர் அண்ணா தானும் வந்திடுவார்
ஒய்ந்த ஏழைக்கான காரல் மார்க்சும் வந்திடுவார்
உத்தமராம் அம்பேத்கார் தானும் வந்திடுவார்
தேர்ந்த ஞானத் தேவர் மகன் தெய்வமாய் வருவார்
தீன் காயிதே மில்லத் தானும் வந்திடுவார்
பாந்தமாக இரு அணியும் இவர்கள் படம்
பத்திரமாய் அச்சடிக்கும் வாக்கை அளியும்

Wednesday, March 18, 2009

வெல்க தேர்தல்

மதச்சார்பு அது அற்ற இன்னொரு சார்பு
மாபெரிய சிந்தனையின் மூன்றாம் சார்பு
சத குப்பையாக தனிச் சாதிச் சார்பு
சாதனையே அணி மாறல் சார்பு என்று
விதம் விதமாய் புறப்படுது சார்பு எல்லாம்
வேட்பாளர் தேர்வு அதும் சாதிச் சார்பு
பதப் பட்ட மக்கள் எதும் பார்ப்பதில்லை
பக்குவமாய் வாக்களிப்பார் வெல்க தேர்தல்

Monday, March 16, 2009

வாழ்வார்கள் சில பேர்

சாவதற்காய்ப் பிறந்து சாவதற்காய் வளர்ந்து
சாவதற்காய் வாழ்வார் பல பேர்
ஆவதற்காய் பிறந்து ஆவதற்காய் வளர்ந்து
ஆவதற்காய் வாழ்வார் சில பேர்
நோவதற்காய் பிறந்து நோவதற்காய் வளர்ந்து
நோவதற்காய் வாழ்வார்பல பேர்
நுண்ணிய அறிவாலே மனிதரை வாழ வைக்க
நோன்பென வாழ்வார்கள் சில பேர்

Saturday, March 14, 2009

என்ன செய்வேன்

அன்பு செய்யப் பழகாமல் மனிதரெல்லாம்
அழுதழுது வாடுகின்ற கேடு கண்டேன்
பண்பு கொண்டு வாழாமல் பணத்திற்காக
பரிதவித்து அலைகின்ற சோகம் கண்டேன்
நண்பரென்று நல்லவரைக் கொள்ளாராகி
நாடெங்கும் புலம்பி நிற்கும் அவலம் கண்டேன்
என் செய்வேன் என்னிறையே இவரைக் கண்டு
இரக்கங்கள் கொள்வதன்றி என்ன செய்வேன்

Friday, March 13, 2009

வரமாய் வர

எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று
ஏற்றங்கள் சொல்லி நின்றார்
இனிய நம் தமிழிலே சொல்லியே தமிழர்கள்
எல்லோர்க்கும் மகிழ்ச்சி தந்தார்
அல்லா ரக்கா ரகுமான் ஆஸ்கரே வென்றாலும்
அடக்கத்தின் உருவம் கண்டீர்
அதனால்தான் தந்தையின் ஆசியால் வந்தது
ஆஸ்கரும் என்று சொன்னார்


ஆண்டவன் மொழி தந்தை அனைவருக்கும் நன்றி
ஆக்கிய ரகுமான் அவர்
அன்னையின் ஆசியை அன்பதன் ஆசியாய்
அனுபவித்து உணர்ந்து வென்றார்
வேண்டுவோம் ரகுமானின் வெற்றிகள் மென்மேலும்
விரிந்திட வேண்டி நிற்போம்
வெள்ளை மனத்தவர் ரகுமானின் வெற்றிகள்
விண்ணவர் வரமாய் வர

Tuesday, March 10, 2009

தமிழோடு வாழுகின்றேன்

எப்போதும் நல்லதே நினைப்பவர் செய்பவர்
என்றென்றும் வாழுகின்றார்
ஏய்ப்பதே தொழிலாகக் கொண்டிங்கு மகிழ்பவர்
இருக்கையில் மாளுகின்றார்
தப்பேதும் இல்லாத வாழ்க்கையை அருளினாய்
தலைவனே வணங்கி நின்றேன்
தனியனாய் மாண்டாலும் தமிழர்கள் எனக்காக
தான் அழும் வாழ்க்கை தந்தாய்


எப்போது அழைப்பாய் நீ என்பது தெரியாமல்
ஏழை நான் வாழுகின்றேன்
இருந்தாலும் அழைப்பினை எதிர்பார்த்து எதிர்பார்த்து
இன்றும் நான் ஏங்குகின்றேன்
தப்பாகிப் போன இவ்வுறவுகள் மத்தியில்
தனியாகித் தூங்குகின்றேன்
தலைவா நீ அருள்கின்ற தூக்கத்திற்காகவே
தமிழோடு வாழுகின்றேன்

போதிப்போம்

சாதிகள் சொல்லி இளையவருக்குள்
சண்டைகள் மூட்டுகின்றார்
சரித்திரம் சொல்லி பகையினை மேலும்
சதி வழி ஏற்றுகின்றார்
ஆதியில் நடந்த தவறுகள் மறந்து
அடுத்தவோர் தலைமுறையை
அனைவரும் ஒன்றென உணர்த்தியே வாழ்ந்திட
அன்பதை போதிப்போம்

உணருகின்றேன்

கற்றவர் அனைவரும் பெற்றவனாய் என்னைக்
கண்ணியப் படுத்துகின்றார்
உற்றவரோ எந்தன் உயர்வினைக் கண்டு
உள்ளுக்குள் புலம்புகின்றார்
மற்றவரோ தம் மனத்துக்குள் வியந்து
மலிந்த சொல் வீசுகின்றார்
உற்றவனே எந்தன் ஆண்டவனே இவை
உன் செயல் உணருகின்றேன்

Saturday, March 7, 2009

ஏற்றங்கள் கொண்டு வாழ்வான்

அப்பனும் பிள்ளையும் உறவுகள் அனைத்துமே
ஆண்டவன் அருளுவது
அவனுக்கு மனம் இல்லை என்பதை உணர்கையில்
அழுதங்கு வாடி நிற்பார்
தப்பாகப் பிள்ளைகள் நல்லோர்க்கு வாய்த்திடும்
தலைவனின் வேலையது
தலை சாய்த்து அழுவார்கள் வருந்தியே துடிப்பார்கள்
தனைத் தானே நொந்து கொள்வார்


தான் பெற்றோம் தான் பெற்றோம் என்றங்கு ஆடுவார்
தலையிலே அடி கொடுக்க
தன்னிலை அறியாத தந்தையை மதியாத
தனயனைத் தேடி அருள்வான்
ஏன் பெற்றோம் என்றவர் ஏங்கியே துடித்திட
எப்போதும் அழுகை தருவான்
ஏகம்பன் கயிலாயன் அவன் மட்டும் மகன்களால்
ஏற்றங்கள் கொண்டு வாழ்வான்

Friday, March 6, 2009

உணருங்கள்

வாழ்கின்ற போதிலே வாழுங்கள் மனிதராய்
வளமெலாம் பிறர்க்கு உதவி
வந்தவர் பசி தனைத் தீர்ப்பதில் மனங் கொண்டு
வயிறாரச் சோறு இடுங்கள்
சூழ்கின்ற வாழ்வதில் நல்லதே கொள்ளுங்கள்
சுற்றிலும் நன்மை பெருகி
சுகமதே சுகமதே மிகப் பெருஞ் சுகமதே
சோதித்துப் பின் உணருங்கள்

மறைந்து போவார்

கொடுப்பதில் மனங் கொண்டு சுகங் கண்டு கொடுப்பவர்
கொற்றவர் போல வாழ்வார்
கொள்கின்ற செல்வங்கள் கொடுப்பதற் கென்ற ஒரு
கொள்கையில் சிறந்து வெல்வார்
இருப்பது அனைத்தையும் தனக்கெனக் கொள்பவர்
இழிவதை ஏற்று வாழ்வார்
எப்போதும் பணமதே பெரிதென வாழ்வதால்
இருந்துமே மறைந்து போவார்


கொடுத்திங்கு வாழ்பவர் மறைந்த பின்னாலுமே
கோயிலைப் போல வாழ்வார்
கொண்டங்கு வாழ்பவர் அவர் தம்மைப் பற்றியே
கூட்டங்கள் தோறும் சொல்வார்
எடுப்பதே தொழிலென என்றைக்கும் வாழ்பவர்
இழி நிலை கொண்டு மாய்வார்
இருந்தாலும் செத்தாலும் அவர் நிலை ஒன்றுதான்
யார் இங்கு அவரை நினைவார்

கடவுளின் அன்பராகி

சேர்த்திங்கு வைத்ததை சேமித்து வைத்ததை
செத்த பின் கொண்டு செல்ல
சிவனவன் அனுமதி தந்ததேயில்லையே
சேர்ப்பார்கள் உணர்வதிலையே
கோர்த்திங்கு கொண்டிட்ட கொள்ளைகள் அனைத்தையும்
கூடவே கொண்டு செல்ல
கூத்தாடும் ஆண்டவன் வழி விடவில்லையே
கொள்ளையர் அறிவதிலையே
ஆர்ப்பாட்டம் போர்ப்படை அதிகாரம் கொண்டவர்
அழிவார்கள் என்பதன்றி
அறிவார்கள் மத்தியில் வாழ்ந்திட இறைவனும்
அனுமதி அளிப்பதிலையே
காப்பாற்றும் நல்லவர் கண்ணியம் கொண்டவர்
காலமாய் ஆவதன்றி
கண்ணென மக்களால் போற்றவே படுகின்றார்
கடவுளின் அன்பராகி

தாங்கவில்லை

தந்தையாய்ப் பிள்ளையாய் உறவுகள் தருவது
தவித்தென்றும் அழுவதற்காய்
தழுவியே அணைத்திடப் பெண்மையைத் தந்தது
தனியாக புலம்புதற்காய்
முந்திய தலைமுறைத் துன்பங்கள் என்றென்றும்
முன்னாலே நிற்பதென்ன
முடி மேலே ஒரு பெண்ணும் உடலோடு ஒருபெண்ணும்
முக்கண்ணா கொண்டதென்ன


ஆடியே நிற்கின்றாய் ஊர் தோறும் ஊர் தோறும்
அன்பராய் வணங்க வைத்தாய்
ஆட்டியே எங்களை மென்மேலும் மென்மேலும்
ஆசையில் வீழ வைத்தாய்
கூடிட மாதரை மணமென்னும் கோலத்தில்
கூத்தனே சேர்த்து வைத்தாய்
கொண்ட அவ்வின்பத்தில் பிள்ளைகள் என்றொரு
குவியலைத் தந்து விட்டாய்


ஆடுறார் ஆடுறார் பிள்ளைகள் என்பவர்
அறியாமல் ஆடுகின்றார்
அன்பதைப் பாசத்தை நேர்மையாய்க் கொள்ளாமல்
அப்படி ஆடுகின்றார்
கூடிய போதினில் கண்டிட்ட சுகங்களை
கூட்டாக்க முடியவில்லை
கொள்ளியாய் வந்திட்ட பிள்ளைகள் கொடுத்திடும்
கொடுமைகள் தாங்கவில்லை

Wednesday, March 4, 2009

கருணை செய்க

குடும்பத்தைக் காத்திடக் கல்வியை விட்டவன்
கொண்டிட்டான் பெரும் விருதை
கூவியே நிற்கின்றான் வெற்றியது தந்தையின்
குளிர் ஆசி தந்ததென்று
திடும் திடும் தாளத்தில் ராகத்தில் ஒசையில்
தெய்வத்தின் உதவி கொண்டான்
தெளிவாகக் கூறினான் புகழெலாம் அல்லாவின்
திருவடி தமக்கு என்று



ஆண்டவன் அருள் தனை நன்குணர்ந்தான் அவன்
அதனாலே உயருகின்றான்
ஆஸ்கார் விருதினை ஆண்டவன் தந்ததாய்
அன்புடன் கூறுகின்றான்
வேண்டியே நிற்கின்றேன் இறையினை அய்யனே
வெற்றிகள் அருளிச் செய்க
வெல்லாத பரிசின்றி ரகுமானும் மென்மேலும்
வென்றிடக கருணை செய்க

என்னபெருமை தரும்

கல்வியைக் கல்வியாய்க் கற்றவர் நெஞ்சிலே
கல்லெறி உணர்வு வருமோ
கையிலே ஆயுதம் ஏந்தியே இரத்தத்தைக்
கண்டிடும் வெறியும் வருமோ
நல்லதோர் கல்வியும் வணிகமாய் ஆனதால்
நாடின்று அழுது நிற்கும்
நாளையும் தொடருமோ இதுவென்ற அச்சமே
நல்லவர் மனதில் நிற்கும்


வள்ளுவன் என்றொரு மாபெரும் மனிதனை
வழங்கினாள் எந்தமிழ்த் தாய்
வாய் திறந்தால் அவன் பெருமையே கூறுவீர்
வழி ஏற்று நடக்க மாட்டீர்
கொள்ளையைத் தீங்கினைத் தடுக்கவே வந்தவர்
குடும்பமும் மனித குலந்தான்
கூட்டமாய் இருப்பதால் எவரையும் தாக்குதல்
கொண்ட நல் கல்விக்கு அழகோ


நல்லதைக் கற்றவர் அதன் வழி நடத்தலே
நலம் என்று தந்தை சொன்னார்
நலமெல்லாம் புறந்தள்ளி அடிதடி கொள்ளுதல்
நமக்கென்ன நன்மை தரும்
வல்லமை என்பதே நல்லது என்பதை
வள்ளுவம் சொல்லி நிற்க
வழி மாறிப் பொருதுதல் படித்தவர் செயலென்றால்
வாழ்வென்ன பெருமை தரும்