Wednesday, April 29, 2009

சேரும்

ஏழைகட்கு உணவளித்தல் அன்பு செய்தல்
என்பதற்கு ஒரு நாளைச் சொல்லி வைத்தார்
பேழைக்குத் தங்கம் வாங்குமென்று எந்தப்
பேடி சொன்னான் என்பதுவே தெரியவில்லை
வேலையற்ற வேலையாக கடனை வாங்கி
விரைகின்றார் தங்கம் வாங்கிச் சேர்ப்பதற்கு
நாளை வாழ்வு நிச்சயமா நினைத்தீரா நீர்
நாயகனின் அருள் இருந்தால் வந்தே சேரும்

பாவம்

அன்பு கொண்டால் பண்பு காட்டி அரவணைத்தால்
அறியாமல் நம்மை ஏய்க்க ஆசை கொள்வார்
தெம்பு கொண்டு அத் தீமை அதை அறிந்தும்
தெரியாமல் செய்கின்றார் என அணைத்தால்
வம்பு செய்யப் பார்க்கின்றார் மீண்டும் மீண்டும்
வாழ்வென்றால் பணம் என்றே நம்புகின்றார்
துன்பம் அதை நம்பிப் பின்னர் துவளுகையில்
துணை தேடி அலைகின்றார் அந்தோ பாவம்

Tuesday, April 28, 2009

தேடிடுங்கள்

நாடகங்கள் நாடகங்கள் நாடகங்கள்
நாடாள நடத்துகின்றார் நாடகங்கள்
ஊடகங்கள் ஊடகங்கள் ஊடகங்கள்
உண்மைக்குப் புறம்பாக ஊடகங்கள்
ஏடெடுங்கள் ஏடெடுங்கள் ஏடெடுங்கள்
எல்லாமே இனம் சார்ந்து சாதி சார்ந்து
வாடிடுங்கள் வாடிடுங்கள் வாடிடுங்கள்
வாடுதற்குப் பிறந்தாரே வாடிடுங்கள்


கூடிடுங்கள் கூடிடுங்கள் கூடிடுங்கள்
கொள்கை நீதி நோக்காமல் கூடிடுங்கள்
பாடிடுங்கள் பாடிடுங்கள் பாடிடுங்கள்
பாரதத் தாய் வாழ்த்தை எங்கும் பாடிடுங்கள்
ஆடிடுங்கள் ஆடிடுங்கள் ஆடிடுங்கள்
அனைவரையும் கேட்டு நன்கு ஆடிடுங்கள்
தேடிடுங்கள் தேடிடுங்கள் தேடிடுங்கள்
தேர்தலுக்குப் பின்னாலே தேடிடுங்கள்

Friday, April 24, 2009

வய்ப்பளிப்பீர்

வாக்களிக்க விரும்பாமல் பல பேர் இங்கு
வருத்தத்தில் ஒதுங்குகிறார் நாடு மேலும்
போக்கழிந்து போவதற்கு அவரைப் போலப்
பொறுப்பற்றோர் காரணமாய் ஆகி நின்றார்
ஆக்கம் பெற நம் நாடு மேலும் வாழ
அறிவுடையோர் நற்றலைமை மீண்டும் வர
வாக்களிப்பீர் அனைவருமே வாக்களிப்பீர்
வரலாற்றை மாற்றுக்கின்ற வாய்ப்பளிப்பீர்

Wednesday, April 22, 2009

காயப் போகுது

சேலையெல்லாம் கொடிகளாகி தெருவெங்கும் பறக்குது
சேலைக்காக ஏங்கும் கூட்டம் தெருவோரம் கிடக்குது
நாளை வாழ்வு என்ன என்று தெரியாமல் தவிக்குது
நாடாள அலையும் கும்பல் வாக்குக் கேட்டு நெருக்குது
பேழைப் பணங்கள் வெளியில் வந்து பெரும் போடு போடுது
பிச்சைக்கார வேஷம் போட்டு பெரிசு எல்லாம் அலையுது
நாளை எல்லாம் முடிந்த பின்னர் நாடாளப் போகுது
நாட்டில் உள்ள ஏழைகளின் வயிறு காயப் போகுது

Sunday, April 19, 2009

வெற்றி காண்போம்

தந்தை தாய் இருவரும் தான் நாமே நேரில்
தான் கொண்டு வணங்குதற்கு ஏற்ற தெய்வம்
சிந்தையிலே இதைக் கொண்டு வாழ்வார் வாழ்க்கை
சிறப்பாகத் தெய்வ பலம் தன்னைச் சேர்க்கும்
முந்தி இதைத் தமிழ்த் தாயாம் அவ்வை என்னும்
முது பெரிய கிழவி அவள் சொல்லி வைத்தாள்
அந்தியிலும் சந்தியிலும் அன்னை தந்தை
அவர்களையே வணங்கி நின்று வெற்றி காண்போம்

நம்மைச் சேர்ப்பான்

உழைத் ததனால் வாழ்வாரே வாழ்வா ராவார்
ஊர் அவரைப் போற்றி நிற்க உயிராவார் காண்
பிழைப் பதற்காய் வாழ்கின்றார் வாழ்வாரல்லர்
பிழையாகி ஊர் முன்னர் குனிந்து நிற்பார்
அழைப்பதற்கு ஒருவன் உண்டு என்றுணர்ந்தார்
அன்பு வடிவாகி நின்று இன்பம் சேர்ப்பார்
குழை மனத்தால் கும்பிட்டு உருகி நின்றால்
கூத்தாடும் பேரிறைவன் நம்மைச் சேர்ப்பான்

Saturday, April 18, 2009

வாழ்த்துறார்

உறவானார் எழுதினால் ஒசத்தி என்றும்
ஊரார்கள் எழுதினால் தாழ்ச்சி என்றும்
கரவாக வாழ்கிறார் சில பேர் இங்கே
கவி போல ஆடுறார் அந்தோ பாவம்
திறமானார் எழுத்தினைக் கண்டால் போதும்
திருடர்கள் குதிக்கின்றார் அய்யோ என்று
வரமாக வந்தாரோ இவரைக் கண்டால்
வாயார வாழ்த்துறார் வாழ்க என்று

கம்ப இராமாயணம் பழம் பாடல் புதுக் கவிதை

சூர்ப்பனகை இராவணனிடம்
காமன் என்றால் ஒருவன் தான் அவனும் தான் இங்கே
கை கட்டி நிற்கின்றான் உன்னிடத்தில் என்றால்
யான் கண்டேன் இரு காமன் ஒரிடத்தில் வாழ
யார் அவர்க்கு இணையாவர் எவரும் இலை அண்ணா
தாமவர் தம் கை வில்லின் ஆற்றலினை விஞ்ச
தரணி இதில் வீரரென ஒருவருமே இல்லை
ஆம் அவர்கள் இருவருமே சிவன் திருமால் பிரம்மா
அனைவரையும் ஒத்தவராய் நிற்கின்றார் கண்டேன்

கம்பன்

மாரர் உளரே இருவர் ஒருலகில் வாழ்வார்
வீரர் உளரோ அவரின் வில் அதனின் வல்லார்
ஆர் ஒருவர் அன்னவரை ஒப்பவர்கள் அய்யா
ஒர் ஒருவரே இறைவர் மூவரையும் ஒப்பார்

Friday, April 17, 2009

பழம் பாடல் புதுக் கவிதை கம்ப இராமாயணம்

சீதை கூடப் பார்க்காத புதுக் கோணத்தில்
ஸ்ரீராமன் தனைப் பார்த்தாள் சூர்ப்பனகை
போதையிலே மிதக்கிறவள் என்றால் கூட
புது விதமாய்ச் சுவைக்கின்றாள் இராமன் தன்னை
பாதையிலே நிற்கின்ற இராமன்தன்னைப்
பார்க்கின்றாள் மரவுரியில் தவக்கோலத்தில்
ஏது தவம் செய்ததந்தத் தவமே இவன்
ஏற்று அதைச் செய்வதற்கு வியந்தே வீழ்ந்தாள்


கம்பன்
எவன் செய இனிய இவ்வழகினை எய்தினோன்
அவம் செயத் திரு உடம்பு அலச நோற்கின்றான்
நவம் செயத் தகைய இந் நளின நாட்டத்தான்
தவம் செயத் தவம் செய்த தவம் என் என்கின்றாள்

குறளும் திருமந்திரமும்

ஏழைக்கு ஈவதே ஈகை மற்றெல்லாமும்
நாளைக்கு வரும் என்று நம்பியங்கு தருவதுதான்
பேழைக் குறளுக்குள் வள்ளுவனார் பேசுவது
பெரு முனிவர் திருமூலர் அதையேதான் சொல்லுகின்றார்
கோழைக் குணத்தார்க்கு ஒழுக்கம் விட்ட மானிடர்க்கு
கூட்டாக நோன்பதனைக் கைக் கொள்ளா தீயருக்கு
ஆளை அறியாமல் ஈவதனைத் தவறென்று
ஆணி அடித்தாற் போல் அடிக்கின்றார் ஒங்கியங்கு


புல்லறுத்துப் போட்டு பொறுப்பாய்த் தழைகளிட்டு
நல்ல விதம் நீங்கள் நாள் தோறும் பார்த்தாலும்
வல்ல மலடாக வந்து விட்ட பசு மாட்டில்
நல்லதாய்ப் பால் கறந்து நாம் அருந்தக் கூடுமோ?
அல்லதொரு காலத்தில் சென்று பயிரிட்டு
அறுவடைக்குச் சென்று நிற்றல் அறிவுடைமை ஆகுமோ
நல்லவர்க்கு ஈதலே நாதனுக்கு மகிழ்ச்சி தரும்
நலம் சேர்க்கும் என்றிங்கு திருமூலர் சொல்கின்றார்

திருமந்திரம்
அபாத்திரம்

கோல வறட்டைக் குனித்துக் குளகிட்டுப்
பாலைக் கறந்து பருகுவதேயொக்குஞ்
சீலமும் நோன்பும் இலாதவர்க்கு ஈந்தது
காலம் கழிந்த பயிரதுவாகுமே

Wednesday, April 15, 2009

சுவைஞர்கள் இராசபாளையம் திருவள்ளுவர் மன்றம்

சுவைஞர்கள் திருவள்ளுவர் மன்றம் இராசபாளையம்

இராசபாளையம் திருவள்ளுவர் மன்றம் வழக்காடு மன்றம் உடன் சுபாஷ் சந்திர போஸ் திருமதி சுப்புலட்சுமி

Monday, April 13, 2009

காரைக்குடி கம்பன் கழகம் பட்டிமன்றம் 08/04/09 மரபின் மைந்தன் ம.முத்தையா

காரைக்குடி கம்பன் கழகம் பட்டிமன்றம் 8/04/09

போற்றியே பணிந்து நிற்கும்

தாயினை வணங்கி நின்று தந்தையினைத் தொழுது நின்று
ஆய கலைகள் அனைத்தையுமே கற்று நின்றால்
போய்ப் பெறுவீர் நீவீர் பொறுப்பான புகழிடங்கள்
பூமியெல்லாம் உமை வணங்கி போற்றியே பணிந்து நிற்கும்

Friday, April 10, 2009

ஒழிஞ்சே போவோம்

ஏழ்மையினை ஒழிப்பதுவாய்ச் சொல்லி விட்டு
ஏழைகளை ஒழிக்கின்றார் சாதி சொல்லி
கோழைகள் தான் வீரர்கள் போல் அவர்கள் போடும்
கூத்தாட்டம் தாங்கவில்லை என்ன செய்ய
வாழையடி வாழையென இவர்கள் செய்யும்
வதை தாங்கிப் பழகி விட்டார் நமது மக்கள்
நாளை மறு நாள் வரும் இத் தேர்தலிலும்
நாட்டு மக்கள் வாக்களிச்சு ஒழிஞ்சே போவோம்

நம் கடமை

பேச்சு மாறா நம் தலைவர் தம்மைக் கண்டால்
பெருமை கொண்டு மகிழ்கின்றோம் இந்தியர்கள்
காச்சு மூச்சு என்று எதும் புதிதாய்ச் சொல்லி
கண்ணியத்தைக் குறைக்காமல் மீண்டும் மீண்டும்
வாச்ச அந்தப் பழைய தேர்தல் அறிக்கை தன்னை
வளம் பெருக்கி அவர் வாழத் தந்து உள்ளார்
பேச்சு மூச்சு இல்லாமல் வாக்கைத் தந்து
பெருமையுடன் அழிவதுவே நம் கடமை

Thursday, April 9, 2009

ஏங்குகின்றோம்

சாதியினை ஒழிப்பதுவாய்க் கொள்கை சொன்னார்
சாதி தோறும் வேட்பாளர் போடுகின்றார்
ஆதித் தமிழ்க் குடும்பம் தன் குடும்பம் என்று
ஆடியவர் தன் குடும்பம் பேணுகின்றார்
வாதிப்பார் யாருமில்லை அனைவருமே
வளம் சேர்த்து வாழ்வார் முன் மண்டியிட்டார்
சோதிப் பெருங்கடலே எம்மிறையே உம்
சூட்சுமத்தை அறியாமல் ஏங்குகின்றோம்

நல்ல வாழ்க்கை

பணம் மட்டும் வாழ்க்கைஎன்று எண்ணி நிற்பார்
பலபேர்க்கு அஞ்சி அஞ்சி வாழுகின்றார்
குணம் ஒன்றே மனிதரென வாழ வைக்கும்
கொள்கை கொண்டோர் அனைவருக்கும் அன்பு செய்வார்
நினைத்ததினை வாழ்வதற்குப் பழகி விட்டால்
நிம்மதியே மிகச் சிறந்த சொத்தாய் ஆகும்
அனைத்துலகும் நமை உறவாய் ஏற்றுக் கொள்ளும்
அதுதானே தமிழ் அளித்த நல்ல வாழ்க்கை

Saturday, April 4, 2009

குறட் கருத்து அதிகாரம் 45 பெரியாரைத் துணைக் கோடல்

அற வழிதான் வாழ்க்கைக்கு ஆக்கங்கள் தரும் என்று
அவ்வழியைத் தம் வழியாய்க் கொண்டொழுகும் பெரியோரை
உறவாக்கி அவர் காட்டும் உயர் வழிகள் தனில் நடத்தல்
உற்றாராய் ஆட்சியிலே இருப்பாரின் பெருங் கடமை
திறமாக இதைக் கொண்டு தெளிவாக ஆளுபவர்
தெய்வமென ஆவார்கள் மக்களுக்குப் புரிவாரா?
அறமெல்லாம் தெளிவாக ஆக்கிவைத்த வள்ளுவனாம்
அப்பெரியார் துணை கொள்ளல் அழகான நல் வழியே

பெரியாரைத் துணைக் கோடல்
அதிகாரம் 45
அறன் அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறன் அறிந்து தேர்ந்து கொளல்

Friday, April 3, 2009

குறட் கருத்து அதிகாரம் 108 இரவு

இரந்து நிற்பார் அழகுடையர் ஆவதற்கு
ஏற்ற ஒரு வழியினை நம் தந்தை சொன்னார்
மறந்தும் கூட செல்வத்தை மறைத்து வைக்கும்
மனம் இல்லாப் பெருங் கடமை யாளரிடம்
இரந்து நிற்றல் மிகச் சிறந்த ஏற்றம் தரும்
இரப்பவர்க்கும் அது பெரிய அழகைத் தரும்
சிறந்து நிற்கும் அக் குறளை இங்கே காண்பாம்
சென்றிரந்து நின்றோமா? அவனாய்த் தந்தான்

அதிகாரம் 108
இரவு
கரப்பிலா நெஞ்சின் கடன் அறிவார் முன் நின்று
இரப்பும் ஒர் ஏஎர் உடைத்து

குறட் கருத்து அதிகாரம் இரவு 108ம் அதிகாரம்

இரந்து நிற்பார் ஈவாரே ஆவாராம் ஆம்
இனிய தந்தை வள்ளுவனார் சொல்லுகின்றார்
சிறந்து நிற்கும் இப்படியோர் சிந்தனையை
செப்புதற்கு அவரன்றி யார்தான் உண்டு
மறந்தும் தம் கனவினிலும் செல்வம் தன்னை
மறைக்காமல் வெளிப்படையாய் வாழ்வார் தம்மை
இரந்து அவர் உடன் கொடுக்கும் மாண்பதனை
எல்லோரும் உணரும் வாய்ப்பைக் கொடுக்கின்றாராம்


இரந்தவரே கொடுக்கின்றார் என்ற செய்தி
இதோ இந்தக் குறள் வழியே வருகின்றது

அதிகாரம் 108
இரவு
இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவிலும் தேற்றாதார் மாட்டு

Wednesday, April 1, 2009

உயர்வீர்

புலன்களையே வென்று நிற்கும் துறவியரை
பொறுப்பான நல் மனிதர் தமக்குப் பின்னே
உளர் என்று வள்ளுவரும் சொல்லுகின்றார்
உலகுக்கு வழிகாட்டும் பொதுமறையில்
வளர்கின்ற பசிதன்னைப் பொறுத்து வெல்லும்
வடிவான துறவியரை விடவும் மற்றோர்
தளர்வானின் பசி தன்னைத் தீர்த்து வைக்கும்
தனி மனிதர் மிக உயர்ந்தார் என்றே சொன்னார்


உண்ணாமல் அதே நோன்பாய்க் கொண்டுயரும்
உயர் துறவிக் கூட்டத்தைக் கண்டு சொன்னார்
எண்ணுதற்கு உயர்ந்தாற்போல் தோன்றும் இவர்
எதிரிகளின் பண்பற்ற சொற்கள் தன்னை
இன்னாதாய்க் கொள்ளாமல் முக மலர்ந்து
ஏற்று அதன் பின்னாலும் நன்மை செய்யும்
நல்லாராம் அவர் பின்னால் ஆமாம் ஆமாம்
நாட்டாரே உதவி செய்யும் உயர்வீர் என்றார்


ஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்

உண்ணாது நோற்பார் பெரியர் பிறர் சொல்லும்
இன்னாச் சொல் நோற்பாரின் பின்