Tuesday, September 28, 2010

பழியும் கொள்வார்

வாபரையும் வழி பட்டு அய்யப்பனின்
வாசலிலே நிற்கின்றார் கோஷத்தோடு
பாபரையும் ராமரையும் இவ்வாறே தான்
பக்குவமாய்ப் புரிந்து கொண்டால் ரத்தம் இல்லை
காவல் செய்யும் தெயவத்தை உணர்ந்தார் இந்தக்
கண்ணியத்தைக் கடைப் பிடிப்பார் கருணை கொள்வார்
பாவமதைச் செய்வதற்கு பிறந்தார் மட்டும்
பல சொல்லிப் பிரித்தாண்டு பழியும் கொள்வார்

Saturday, September 18, 2010

அய்யா என்றார்

பார்ப்பவர்கள் அனைவரையும் கதைகளுக்குள்
பாத்திரங்கள் ஆக்கிடுவார் என்ற எண்ணம்
ஊர்க்காரர் அனைவருக்கும் உண்டு பண்ணி
உயர்வாகக் கதை சொல்லும் வண்ணதாசன்
பேர் சொல்லி உங்களை நான் அழைக்கமாட்டேன்
பெருமையாக அய்யா என்றழைத்திடுவேன்
சீர் மிகுந்த உங்களது செந்தமிழைச்
செவிமடுத்த காரணத்தால் அய்யா என்றார்

Friday, September 17, 2010

இசைஞானி

விருதளித்தார் விருதுக்கே பெருமை சேர்த்தார்
வெற்றி இசைஞானிக்கு விருதளித்து
சுருதியுடன் ராகமதைச் சேர்த்துத் தந்து
சுத்தமாக்கி மனதையெல்லாம் வெள்ளையாக்கும்
எருதேறும் அண்ணாமலை ஈசனது
எளிய தொண்டர் இளையராஜா அருகில் என்றும்
அரிதான கலை மகளே குழந்தையாகி
அமர்ந்துள்ளாள் அவர் இசையில் மயங்கி இன்றும்

Thursday, September 16, 2010

ஒழிந்து போகும்

உடல் சார்ந்த வெறி கொண்டே வாழுகின்றார்
உளம் சாரா மானிடரகள் உலகமெங்கும்
படம் எடுத்து விட்டாராம் சாமி என்பார்
பதை பதைத்துத் துடிக்கின்றார் கற்பு காப்பார்
தினம் தினமும் செய்தியாக வருவதெல்லாம்
தெரிந்தும் ஏன் ஆடுகின்றார் புரியவில்லை
உளம் கண்டு வாழ்வதற்குப் பழகி விட்டால்
உடல் சார்ந்த வெறி அதுவும் ஒழிந்து போகும்

Sunday, September 12, 2010

கேட்பாரோதான்

பாரதியை நினைந்தாரா மறந்தே போனார்
பாவி மகன் காந்தியினை மறைத்தே வைத்தார்
ஊர் முழுதும் மதுக் கடைகள் காந்தியாரின்
ஊரிலேயும் மதுக் கடைகள்-- கறிக் கடைகள்
சீர் மிகுந்த வள்ளலார் பெயரிலேயே
சிறப்பாகத் திறப்பதற்கு விருப்பம் கொள்வார்
யார் இவரைக் கேட்பார்கள் மக்கள் தானே
இலவசத்தைத் தேடி நிற்பார் கேட்பாரோதான்

Saturday, September 11, 2010

பாரதியை நினைப்போமா

இதிகாசக் கதைகளெல்லாம் பொய்தானென்றும்
இருந்தாலும் கவிதைகள் தான் சிறப்பு என்றும்
முடியாத நேரத்திலே முழங்கி நின்ற
முண்டாசுக் கவிஞ னவன் கனவையெல்லாம்
எது வரைக்கும் நிறைவேற்றி உள்ளார் நாட்டார்
ஏய்த்துள்ளார் ஏய்த்துள்ளார் ஏய்த்துள்ளாரே
கதி இதுதான் இந்நாட்டில் திருடர்களே
காவலிலே அமர்ந்ததனால் வந்த கேடு

Friday, September 10, 2010

ரமலான் வாழ்த்துக்கள்

ஏழைகட்கு உதவி செய்து இரங்கினாரை
இறையவனின் பெருமைகளை உணர்ந்தார் தம்மை
வேளை அய்ந்தும் தொழுது நின்ற வீரர் தம்மை
விண்ணகத்தில் இறையருளைப் பெறுவார் தம்மை
தாழ நின்று அனைவருக்கும் நன்மை செய்தாரை
தான் என்ற அகந்தை விட்டு நின்றார் தம்மை
வாழையடி வாழையாக இறைவன் தூதர்
வழி கண்டு வாழ்வாரைப் போற்றுகின்றேன்

Wednesday, September 8, 2010

இறை கண்டு அஞ்சவில்லை

அரசியலார் எல்லாரும் ஆசை கூட்டி
ஆங்காங்கே நிற்கின்றார் நோன்பிற்காக
வரிசையாக ஊர் தோறும் அவர்கள் செய்யும்
வம்புகளைப் பார்க்கையில் துடித்துப் போனோம்
பரிசாக வழி காட்ட இறைவன் தந்த
பார் ஏற்ற குரான் வழியை மறந்தே போனார்
விரிசல் கண்டு மனமெல்லாம் துடிக்கின்றது
வீணானார் இறை கண்டு அஞ்சவில்லை

Tuesday, September 7, 2010

இளையராஜா

இசை என்றால் இனிமை என்ற நிலையை மாற்றி
இரைச்சலென்று ஆக்கி விட்டார் கொடியோர் சில்லோர்
நிணம் தசை நார் அனைத்திற்கும் உள் நுழைந்து
நிம்மதியைத் தருவதுவே நல்ல இசை
குணம் தரவும் மனத்திற்குள் நல்லனவே
கொண்டு வந்து சேர்ப்பதுவும் இசையே ஆகும்
மணமான அவ்விசையை இளையராஜா
மன்னன் தான் தருகின்றான் வாழ்க அவன்

அல்லாஹ் அதை

அல்லாஉற் ஒருவனே இறைவன் என்று
அவனையே மனதாலே தொழுது நின்று
பொல்லாத செயல் இன்றி நல்ல வாழ்க்கை
பொறுமை நேர்மை நன்மை அன்பு கொண்டு வாழ்ந்தார்
வல்லானின் வழி தன்னில் நோன்பு நோற்று
வாழ்கிறார் திறக்கின்றார் நோன்பு என்றால்
எல்லோரும் திறக்கின்றோம் நோன்பு என்றால்
ஏற்பானா இறைவனாம் அல்லாஉற் அதை

Friday, September 3, 2010

ஒன்பதாம் பக்கம்

எட்டாம் பக்கம்

ஏழாம் பக்கம்

ஆறாம் பக்கம்

ஐந்தாம் பக்கம்

நான்காம் பக்கம்

மூன்றாம் பக்கம்

இரண்டாம் பக்கம்

Thursday, September 2, 2010

காதல் செய்யாதவர்கள் கல்லெறியுங்கள் முதல் பக்கம்

எரிகின்ற மூடர்களே வாழப் பாரும்

போராட்டம் என்றாலே ஏழைகள் தான்
புரியாமல் எரிகின்றார் மாளுகின்றார்
சீராட்டி வளர்க்கின்ற தலைவர் மக்கள்
செந்தழலில் கொள்கைக்காய் எரிவதில்லை
தேரோட்டம் காரோட்டம் திருவிழாக்கள்
தேர்தலிலே வெற்றி கொள்ளல் அமைச்சராதல்
நீரோட்டம் போல அவர் வாழ்க்கை மட்டும்
நீள்கிறது ஆள்கிறது வாழ்கிறது


எரிந்த அந்த அறியானின் சடலத்தின் முன்
ஏங்கி அந்தத் தலைவர் விடும் கண்ணீர் கண்டு
நொறுங்கிடுவார் எரிந்தவனின் குடும்பத்தாரும்
நோகாமல் நடிக்கின்ற தலைவர் கண்டு
விரிந்த மனம் கொண்டவராய்த் தலைவர் அங்கு
விம்மலுடன் ல்ட்சம் ஒன்றை நீட்டிடு வார்
கருகியவன் குடும்பத்துக் கண்ணீரையும்
காசாக்கி வென்றிடுவார் நம் தலைவர்


எரிந்து பட்ட தங்கமே என் இதய வேந்தே
எப்படி நான் உனை மறப்பேன் செந்தமிழா
கருகுகின்ற நேரமும் நீ என்னை வாழ்த்தி
கனித் தமிழில் முழக்கங்கள் இட்டாயாமே
பனித் தமிழே என் தம்பி உன்னைப் போல
பாசமிக்க தம்பியரைப் பெற்றதால் தான்
தனித்த நந்தம் இயக்கத்தின் ஆட்சியதும்
தவறாமல் தொடருது இந்த நாட்டில் நன்கு


இனித்தவனே என் நெஞ்சில் தீயை வைத்தாய்
என்று நான் உனைக் காண்பேன் கொன்றே போட்டாய்
தனித்து நான் நிற்கின்றேன் உன்னைப் போன்ற
தம்பியரைப் பிரிகின்ற நேரமெல்லாம்
கனித் தமிழாள் உனைப் பெற்ற காரணத்தால்
கண்ணியத்தைப் பெருமையெனக் கொண்டாள் தம்பி
நினைவெல்லாம் நீயாக என்றும் வாழ்வேன்
நெஞ்சத்தில் ஒரு இடத்தை உனக்களித் தேன்


சுவரொட்டி ஆயிடுவான் அந்தத் தம்பி
சுற்று முற்றும் தேர்தல் வரும் நேர மெல்லாம்
தவறாமல் அவன் பெயரை மேடை தோறும்
தமிழ் காக்க உயிர் தந்தான் என்று சொல்லி
அவதார புருஷர் இவர் ஆட்சி கொள்வார்
அடுத்து வரும் தலை முறையின் ஆசை தீர்ப்பார்
இவர் பிள்ளை எரிந்தவனின் வயதையொத்தான்
இந்நாட்டு ஆட்சியிலே அவன் அமர்வான்


எரிகின்ற மூடர்களே உணர்ந்தீரா நீர்
ஏய்க்கின்றார் பிள்ளைகள் தான் எரிகின்றாரா
விரிகின்ற அறிவு கொள்வீர் வாழ்க்கைதன்னை
வீணருக்காய்க் கொள்ளையர்க்காய் எரிக்காதீர் நீர்
தெரிகின்ற நல் வாழ்க்கை தேர்ந்தெடுப்பீர்
திருடருக்காய் அழியாதீர் வாழப் பாரும்
உரிமையுள்ள தாய் தந்தை மனைவி மக்கள்
உற்றார்கள் நாட்டிற்காய் வாழப் பாரும்