Saturday, April 30, 2011

வியட்நாம் விடுதலை பெற்ற நன்னாள்

ஆடைகளோ இரண்டே தான் வேறு இல்லை
அடித்ததுவோ அமெரிக்கத் தடித் தனத்தை
மேடை போட்டுப் பேசவில்லை தனது நாட்டின்
மேன்மைகளை மக்களுக்கு உணர்த்தி நின்றான்
காடுகளில் மரங்களிலே வாழ்ந்திருந்தான்
கயமைகளின் கூட்டத்தை வென்று நின்றான்
ஆடியது அமெரிக்கா ஹோசி மின்னால்
ஆமாம் வியட்னாம் இன்று வென்ற நன்னாள்

Friday, April 29, 2011

ராஜா ரவிவர்மா பிறந்த நாள்

ஒவியத்தால் உள்ளங்கள் தன்னை வென்றோன்
உலகெங்கும் மயங்கி விடச் செய்த நல்லோன்
காவியத்துக் காட்சிகளைக் கடவுளரை
கண்ணியமாய் வரைந்தளித்த கனியின் மேலோன்
தாவி அவன் சித்திரங்கள் மனதிற்குள்ளே
தனியாகப் பதிவுபெற்று மகிழ வைக்கும்
பாவி ராஜா ரவி வர்மா என்னும் பாவி
படைப்பதற்காய்ப் படைப்பவனும் படைத்த நன்னாள்

பாரதிதாசன் பிறந்த நாள்

தன் பெண்டு தன் பிள்ளை தன் வீடு தன் குடும்பம் என்றிருப்போன் கடுகு போல் சின்ன மனம் கொண்டவன் என்று பாடிய பாரதிதாசனார் பிறந்த நாள்.

Monday, April 25, 2011

பாபா உம்மை

தாயாக நிற்கின்றார் பாபா எங்கும்
தனியாக இல்லை பல கோடியாக
வாயார அவர் புகழைப் பரப்புகின்றார்
வாழுகின்றார் உலகமெங்கும் பக்தியோடு
சேயாக அவர் மீண்டும் வருவேன் என்றே
செய்தி சொல்லிச் சென்றுள்ளார் கவலை வேண்டாம்
போய்த் தொண்டு செய்து நிற்பீர் பாபா உம்மை
புகழுக்கு உரியவராய் ஆக்கி நிற்பார்

பாபாவை என்றும் என்றும்

பாபா வின் சமாதி நிலை உலகமெங்கும்
பரபரப்பைத் துயரத்தைத் தந்துளது
ஆனாலும் அவர் பெருமை சேவை எங்கும்
ஆண்டவனின் பெயராலே நடக்கிறது
போனார் என் றுரைப்பதிலே உண்மையில்லை
பொய் உடம்பு தன்னை அவர் நீத்தார் ஆமாம்
காணாதார் உள்ள மெலாம் கோயிலாக்கிக்
கண்டிடலாம் பாபாவை என்றும் என்றும்