உயிருக்குயிரே அன்பு என்று உணர்த்தி நின்றார் வள்ளுவரும்
உணரா மனிதர் பணத்தைத் தேடி ஒடி ஒடி அலைகின்றார்
பயிருக்குயிரே மழை என்பதனைப் பாரோர் அனைவரும் அறிந்திருந்தும்
பசுமைக் காட்டை அழித்து அழித்துப் பாழாய் தமையே அழிக்கின்றார்
வயலும் காடும் இல்லா வாழ்வு வாழ்வாகிடுமோ உயிர்கட்கு
வருத்தம் இன்றி மேலும் மேலும் வயல்கள் அழித்து ஒழித்தீரே
துயில வீடு கட்டும் மாந்தர் துயரே சேர்த்து வாழ்கின்றார்
தூய்மை அழிக்கும் யந்திர வாழ்வின் துணையில் வீணே அழிகின்றார்
Friday, October 30, 2009
வீணே ஆழிகின்றார்
Monday, October 26, 2009
உங்க மக்க
அமைச்சர் பெருமானை வணங்குகின்றோம்
அடிக்கடி நீர் தொகுதிக்கு வருதல் வேண்டும்
குமைச்சல் இன்றி மின்சாரம் கிடைப்பதற்கும்
குண்டு குழிச் சாலையெல்லாம் மின்னுதற்கும்
சமைச்ச சோறு ஏழைகட்குக் கிடைப்பதற்கும்
சரியாக இலவசங்கள் பெறுவதற்கும்
அமைச்சர் அய்யா மீண்டும் மீண்டும் வாங்க அய்யா
அன்போடு அழைக்கின்றோம் உங்க மக்க
Friday, October 23, 2009
சூர சம்காரம்
சூரர்கள் அழிக்கும் கூட்டத்திற்குள்
சூரர்கள் ஆயிரம் இருக்கின்றாரே
நீரறிவீரே நெற்றிக் கண்ணின்
நேர்மைப் பொறியில் உருவானவரே
பேரறிவாளா இவரை அழித்தல்
பெருமை இல்லை என நினைத்தீரோ
ஊரகம் முழுதும் சேவல் மயிலாய்
உரு மாறிடும் எனும் அச்சம் தானோ
எந்தக்காலம்
சிலைகளுக்குள்ளே தலைவர்கள் இல்லை
சிறந்த அவர்தம் கொள்கைகள் இல்லை
கலகம் செய்தே வாழ்ந்திட நினைக்கும்
கண்ணியமற்றோர் கைகளில் சிலைகள்
விலை உணராத ஏழைகள் ஆங்கே
வீழ்ந்தே இறப்பர் சிலைகளுக்காக
சிலைகளை அகற்றிக் கொள்கைகள் ஏற்று
சிறக்கப் போவது எந்தக் காலம்
Tuesday, October 20, 2009
திருவடி கிடந்தேன்
ஆறுதல் தேடி வருபவர் தமக்கு
ஆறுதல் தருவதில் மகிழ்ந்தேன்
அழுகையில் விழுந்து அரற்றுவார் தமக்கு
அழுகையின் மகத்துவம் உரைத்தேன்
தேறுதல் தேடி வருபவர் தமக்குத்
தேறுதல் தருவதில் தெளிந்தேன்
திசைகளைத் தேடியே திணறுவார் தமக்குத்
திசைகளை உணர்த்தியே உணர்ந்தேன்
மாறிடும் உலகினில் நல்லன எல்லாம்
மற்றவர்க்கு உரைத்திடப் படைத்தான்
மனமெலாம் உறையும் எனதருங் கடவுள்
மகிழ்ந்தவன் திருவடி கிடந்தேன்
Saturday, October 17, 2009
தீபாவளித் திருநாள்
ஆண் குழந்தை
என்பதால்
கள்ளிப் பால்
கொடுக்காமல்
வளர்த்து
அரக்கனாக்கி
தந்தை
உதவியுடன்
தாய்
கொன்ற
நாள்