சிறு பெண்ணைக் கற்பழித்த காரணத்தால்
சிறு தண்டனை அளித்த நீதிபதி
பெருங் காவலராய் இருந்த ரத்தோர் என்னும்
பீடையினைக் கொல்வதன்றி வழக்கு ஏனோ?
சரியான தண்டனையை அளிக்கா அந்த
சரித்திரத்து நீதிபதி தன்னைச் சேர்த்து
உரிக்காமல் விடுவதுவே கயவர்க்கெல்லாம்
உற்சாகம் தருகிறது நமது நாட்டில்
Thursday, December 31, 2009
நமது நாட்டில்
Tuesday, December 29, 2009
பேசுதற்கும் ஏசுதற்கும்
வாரிசுகள் வருகின்றார் அரசியலில்
வந்தவுடன் பதவிகளில் அமருகின்றார்
ஊரிசைய பலகாலம் உழைத்தவரோ
ஒரத்தில் நிற்கின்றார் அந்தோ பாவம்
நேரிடையாய் ஒரு கேள்வி அவரிடத்தில்
நெஞ்சிருந்தால் இப் பதவி ஏற்பீரோ நீர்
ஊரறிய பட்டங்கள் பெற்று உள்ளீர்
உயர் கல்வி உமக்கிதனை உணர்த்தலையோ
உழைத்தழிந்து போனவரின் உடைமையினை
ஊரறியத் திருடுகின்றீர் உள்ளமற்றீர்
பிழைக்கின்ற கல்வியினைப் பெற்று உள்ளீர்
பேரறிவுக் கல்வியினைப் பெற்றிருந்தால்
இழைப்பீரோ இக் கொடுமை நாணி நிற்பீர்
ஏற்பீரோ பொறுப்பை யெல்லாம் வெட்கம் கொள்வீர்
பிழைப்பு இந்தப் பிழைப்பு உம்மை உலகம் எல்லாம்
பேசுதற்கும் ஏசுதற்கும் வழிகள் செய்யும்
Wednesday, December 23, 2009
கொண்டாரில்லை
பாரதியின் பாடலது துக்கடாவாம்
பார்த்தீரோ தமிழர்களே வன் கொடுமை
ஊரறிய ஆட்சி செய்வோர் தமிழுக்காக
உயிர் கொடுப்போம் என்பவர்கள் கேட்பாரில்லை
ஆர் கேட்பார் இவர்களையே ஆடுகின்றார்
அன்னை தமிழ் இசை அரங்கில் ஒழிகின்றது
ஊர் நிறைந்த செய்தித் தாள் ஊடகங்கள்
ஒருவருமே தமிழ் உணர்வு கொண்டாரில்லை
Tuesday, December 22, 2009
இவரையெல்லாம்
இசை நிகழ்ச்சி எங்கெங்கும் நடக்கின்றது
இசை மொழியாம் தமிழை அது பழிக்கின்றது
வசையாக்கி தமிழ்ப் பாடல் தன்னையெல்லாம்
வாயார துக்கடா என் றழைக்கின்றது
திசை தோறும் வென்று நின்ற தமிழாம் தாயை
தேடி நந்தம் அரசியலாய்க் கொண்டாரெல்லாம்
உசிரோடே இருக்கின்றார் கேட்டாரில்லை
உயர் தமிழே கேட்பாயா இவரையெல்லாம்
Sunday, December 20, 2009
உள்ளார்
பணம் ஒன்றே வாழ்க்கை என்று காட்டி தம்மின்
பகட்டான வாழ்வதனால் மனம் கெடுத்து
குணம் கொள்கை என்பதெல்லாம் என்றும் எங்கும்
கோடிகளைக் குவிப்பதுவே என்று காட்டி
நிணம் தசை நார் எல்லாமே கையூட்டுக்காய்
நிதம் தந்து வாழ்கின்ற தலைவர் கண்டால்
குணம் வருமோ குல மானம் வருமோ இங்கே
கொள்ளை ஒன்றும் தவறில்லை என்றே கொள்வார்
தினம் தோறும் கைதாவார் கையூட்டுக்காய்
தேசமெங்கும் காவலர்கள் அலுவலர்கள்
பிணம் தின்னும் அரசியலார் கொள்ளையெல்லாம்
பேச்சோடு நிற்கிறது கைதே இல்லை
குணம் கொண்ட காந்தி மகான் காமராசர்
குல மானம் கொண்ட கக்கன் ஜீவா என்னும்
இனத்தின் பேர் சொல்பவரும் அன்றோ இந்த
இழிவான கூட்டத்தினுள்ளே உள்ளார்
Tuesday, December 15, 2009
குறளைக் கற்றார்
கொள்ளைகளை அடிப்பதிலே கொஞ்சம் கூட
கூச்ச நாச்சம் இல்லாமல் அடிக்கின்றாரே
கூட்டம் போட்டு மேடையிலே ஏழையென்றும்
கொள்கையென்றும் நாணமின்றி நடிக்கின்றாரே
வெள்ளை உள்ளம் தன் உள்ளம் என்று எல்லாம்
விரிக்கின்றார் கதைக்கின்றார் புளுகுகின்றார்
தெள்ளு தமிழ் அன்னையவள் குறளைக் கற்றார்
திகைக்கின்றார் துடிக்கின்றார் இவரைக் கண்டு
Monday, December 14, 2009
நம்பாதார்
ஏழைக்கு உதவாதார் கடவுளின் முன்
எப்படிப் போய் நிற்பாரோ தெரியவில்லை
நாளைக்கு எனச் சேர்த்து வாழ்வார் தம்மை
நாயகனும் சேர்ப்பானோ அடி அளித்து
கோழைகளாய் வாழ்கின்றார் பயந்து போயே
கொள்ளைகளும் அடிக்கின்றார் அந்தோ பாவம்
ஏழைகளைக் காவாதார் என்றால் அவர்
இறைவனையே நம்பாதார் என்றே கொள்வோம்
Friday, December 11, 2009
ஆடுகின்றார்
பாரதிஎன் றொருகவிஞன் பிறந்தான் இன்று
பழந்தமிழைப் புதுத் தமிழாய்ப் புதுக்குதற்கு
ஊரதிரப் பெண்களுக்காய்க் குரல் கொடுத்தான்
ஊத்தைக் கற்பெனும் அந்தப் பெயரொழித் தான்
நீரறிவீர் தமிழை அவன் தந்தது போல்
நிலவுலகில் தந்தவர்கள் யாரும் இல்லை
யாரறிவார் இன்று இந்தத் தமிழுலகில்
யார் யாரோ ஆடுகின்றார் கவிஞர் என்று
Tuesday, December 8, 2009
என்றும் எங்கும்
முனிந் தனைத்தும் ஒதுக்கி வனத்துள்ளே சென்று
முதல்வனையே நினைத் திருப்பார் முனிவர் ஆவார்
நினைந் தனைத்தும் உணர்ந் திருந்தும் சொத்தைக் காக்க
நிறைவான மடத் தலைவர் ஊரில் உள்ளார்
தினந் தினமும் நமக்கெல்லாம் புத்தி சொல்லி
தேற்று கின்ற சாமியார்கள் வலம் வருவார்
அனந் தன் அவன் ஆண்டவனோ இவர் ஒதுக்கி
அருளி நிற்பான் நமக் கென்றும் என்றும் எங்கும்
Saturday, December 5, 2009
வணங்கி நிற்போம் விவேகாநந்தர்
அழுதழுது துன்பத்தில் பெண்கள் வாழும்
அவ் வீடும் அந் நாடும் அழிந்தொழியும்
பழுதற்ற தாய்மை யென்று பெண்ணைப் போற்றும்
பாரதத்தில் பிறந்தீரே இதை உணர்வீர்
தொழுவதற்கு தாயன்றி வேறோர் தெய்வம்
தூயவரே இல்லையென்று வேதம் சொல்லும்
விழுதாகி அனைத்தையுமே தாங்கி நிற்கும்
வீரர் அவர் அவர்களையே வணங்கி நிற்போம்
வள்ளுவரும் விவேகாநந்தரும்
உயிரோடு இருப்பாரை சவக் கிடங்கில்
உள்ளாராய்க் காணுகின்றார் வள்ளுவரும்
துயர் தீர்த்து அடுத்தவர்க்கு உதவி செய்யும்
தூய மனம் இல்லாரை செல்வம் சேர்த்து
அயராமல் அப்பணத்தைக் காத்து நிற்கும்
அன்பில்லா மனிதர்களை சவங்கள் என்றார்
உயர்வான இக் கருத்தை விவேகாநந்தரும்
உரைக்கின்றார் சுய நலமே மரணம் என்று