Sunday, December 20, 2009

உள்ளார்

பணம் ஒன்றே வாழ்க்கை என்று காட்டி தம்மின்
பகட்டான வாழ்வதனால் மனம் கெடுத்து
குணம் கொள்கை என்பதெல்லாம் என்றும் எங்கும்
கோடிகளைக் குவிப்பதுவே என்று காட்டி
நிணம் தசை நார் எல்லாமே கையூட்டுக்காய்
நிதம் தந்து வாழ்கின்ற தலைவர் கண்டால்
குணம் வருமோ குல மானம் வருமோ இங்கே
கொள்ளை ஒன்றும் தவறில்லை என்றே கொள்வார்


தினம் தோறும் கைதாவார் கையூட்டுக்காய்
தேசமெங்கும் காவலர்கள் அலுவலர்கள்
பிணம் தின்னும் அரசியலார் கொள்ளையெல்லாம்
பேச்சோடு நிற்கிறது கைதே இல்லை
குணம் கொண்ட காந்தி மகான் காமராசர்
குல மானம் கொண்ட கக்கன் ஜீவா என்னும்
இனத்தின் பேர் சொல்பவரும் அன்றோ இந்த
இழிவான கூட்டத்தினுள்ளே உள்ளார்

0 மறுமொழிகள்: