Friday, July 22, 2011

ஓங்குகின்றார்

வெறுத்தல் கொண்டு வாழ்ந்தவர் எல்லாம்
வீணென வீழ்ந்தே இறந்து பட்டார்
வெறுத்தல் இல்லா விரிமனத்தாரோ
வென்றிவண் உயர்ந்தே வாழ்ந்து நின்றார்
அறத்தின் வழியை அறவே துறந்தவர்
அபலைகளாகி தெருவில் நின்றார்
அறமே வாழ்வெனக் கொண்டே வாழ்ந்தார்
ஆண்டவனாகிப் பொலிந்து நின்றார்

இறப்போம் என்றே துடிப்பவர் எல்லாம்
இறந்தே இறந்தே வாழுகின்றார்
இறப்பை உணர்ந்து பொறுப்பாய் உள்ளோர்
என்றும் என்றும் வாழுகின்றார்
மறப்போம் என்ற நினைப்பே இல்லார்
மனதால் மனதால் வீழுகின்றார்
மறத்தல் மறந்து துறந்தே வாழ்வோர்
மனிதர்களாகி வாழுகின்றார்

கறத்தல் எதையும் எங்கும் என்போர்
கவலைகளாலே மாளுகின்றார்
கறத்தல் இரத்தல் சுருட்டல் இல்லார்
காவலர் ஆகி ஆளுகின்றார்
பொறுத்தல் இல்லாச் சிறு மதியாளர்
புண்பட நொந்தே வாடுகின்றார்
பொறுத்தல் குணமே பொறுப்பின் குணமாய்ப்
பொலிந்தவர் சிறந்தே ஒங்குகின்றார்

Saturday, July 16, 2011

ஆக்கி வீரர் தன்ராஜ் பிள்ளை பிறந்த நாள்

மட்டைக்குள் பந்து அது சுழலும் அது
மயக்கத்தில் சுழல்வது போல் தெரியும்
கட்டுக்குள் பந்து அது நிற்கும் அவர்
கால்களுக்கு இடையில் உருண்டோடும்
பட்டெனவே முன் களத்தில் பாய்வார் அந்தப்
பந்ததுவும் வலைக்குள்ளே பாயும்
கட்டழகுக் கருப்பர் தன்ராஜ் பிள்ளை அவர்
காணுகின்றார் பிறந்த நாளை இன்று

Friday, July 15, 2011

காமாராஜர் பிறந்த நன்னாள்

ஏழைகளைக் காப்பதற்காய் பிறந்த நல்லோர்
எல்லோர்க்கும் கல்வி தந்த இனிய நல்லோர்
வாழையடி வாழையென காந்தி அண்ணல்
வழி நடந்து தமிழருக்குப் பெருமை சேர்த்தோர்
கோழைத்தனம் இல்லாமல் தாய் நாட்டிற்காய்
கொடுஞ்சிறையில் ஆறாண்டு இருந்த வல்லோர்
பேழையாம் கல்வியினை அள்ளித் தந்த
பெருஞ்செல்வர் காமராஜர் பிறந்த நன்னாள்

Thursday, July 14, 2011

மும்பையில் குண்டு

மனிதர்களுக்கு அன்பினையே அருளிச் செய்த
மதங்களுக்குள் நன்மைகளே உண்டு உண்மை
தனி மனிதர் சிலர் இதனைப் புரியாராகி
தவறுகளைச் செய்கின்றார் தனை மறந்து
மனிதர்களைக் கொல்லுகின்றார் குண்டு வைத்து
மனநலத்தில் குறை கொண்ட மனிதராகி
தனி மனிதர் சில பேரின் மனத்துட் பேயால்
தடுமாறி நிற்கின்றதோ மதங்கள் எல்லாம்

Monday, July 11, 2011

பிறந்தீர் என்று

வள்ளுவனார் பிறந்து விட்ட தமிழர் நாட்டில்
வசைகளோடு வாழ்கின்றார் வெட்கமின்றி
உள்ளுகின்றார் நல்லவர்கள் இவற்றை யெல்லாம்
உள்ளத்துள் குருதியுடன் புலம்புகின்றாரே
எள்ளி நகையாடுகின்றார் தவற்றால் வாழ்வார்
எவரையுமே ஏய்த்ததிலே பெருமை கொண்டு
வள்ளுவனை நினைக்கின்றோம் அய்யா நீர் ஏன்
வந்து எங்கள் தமிழகத்தில் பிறந்தீர் என்று

Friday, July 8, 2011

தாதா கங்குலி வாழ்க

தனக்காக ஆடாமல் நாட்டிற்காக
தயங்காமல் ஆடி நின்ற நல்ல வீரன்
பிணக்கேதும் இல்லாமல் இளையவரை
பேர் சொல்லி அணிக்குள்ளே சேர்த்த வீரன்
கணக்காக வெளி நாட்டில் வெற்றிகளை
கண்ணியமாய்ப் பெற்றளித்த உயர்ந்த வீரன்
கங்குலி பிறந்த நாள் இன்று அந்த
கனிவான தாதாவை வாழ்த்துகின்றேன்