வெறுத்தல் கொண்டு வாழ்ந்தவர் எல்லாம்
வீணென வீழ்ந்தே இறந்து பட்டார்
வெறுத்தல் இல்லா விரிமனத்தாரோ
வென்றிவண் உயர்ந்தே வாழ்ந்து நின்றார்
அறத்தின் வழியை அறவே துறந்தவர்
அபலைகளாகி தெருவில் நின்றார்
அறமே வாழ்வெனக் கொண்டே வாழ்ந்தார்
ஆண்டவனாகிப் பொலிந்து நின்றார்
இறப்போம் என்றே துடிப்பவர் எல்லாம்
இறந்தே இறந்தே வாழுகின்றார்
இறப்பை உணர்ந்து பொறுப்பாய் உள்ளோர்
என்றும் என்றும் வாழுகின்றார்
மறப்போம் என்ற நினைப்பே இல்லார்
மனதால் மனதால் வீழுகின்றார்
மறத்தல் மறந்து துறந்தே வாழ்வோர்
மனிதர்களாகி வாழுகின்றார்
கறத்தல் எதையும் எங்கும் என்போர்
கவலைகளாலே மாளுகின்றார்
கறத்தல் இரத்தல் சுருட்டல் இல்லார்
காவலர் ஆகி ஆளுகின்றார்
பொறுத்தல் இல்லாச் சிறு மதியாளர்
புண்பட நொந்தே வாடுகின்றார்
பொறுத்தல் குணமே பொறுப்பின் குணமாய்ப்
பொலிந்தவர் சிறந்தே ஒங்குகின்றார்
Friday, July 22, 2011
ஓங்குகின்றார்
Subscribe to:
Post Comments (Atom)
2 மறுமொழிகள்:
என்ன சொல்வதென்றே தெரியவில்லை.. வெகு நாட்களுக்கு பிறகு நெருப்புக்களால் புனையப்பட்ட ஒரு கவிச்சரம்.
/இறப்போம் என்றே துடிப்பவர் எல்லாம்
இறந்தே இறந்தே வாழுகின்றார்
இறப்பை உணர்ந்து பொறுப்பாய் உள்ளோர்
என்றும் என்றும் வாழுகின்றார்//
வாழ்க்கையின் பாதை எதுவோ? எதன் வழி யாம் செல்வோமோ? புரியாத சில கேள்விகளுக்கு பொட்டில் அடித்தார் போன்ற வார்த்தைகட்டு.. மனம் நீண்ட நேரம் இதில் மூழ்கி திளைத்தது..
Very Nice This poem motivating me (I posted in Tamil.. but it is displayed in Junk character)
Post a Comment