Sunday, September 13, 2009

எதிர்த்திடுவோம்

உடன் வாழ வந்தவனோ உடலை மட்டும்
உறவென்று கொண்டவனாய் வாழ வந்தால்
உடல் நாணத் துன்புறுவார் பெண்கள் அய்யோ
உணர்ந்தாரா இல்லையே ஆண்கள் இங்கு
மனம் நாடிப் பேசாராய் அன்பு செய்து
மணம் கொண்ட பண்பாராய் இல்லார் விட்டு
தனை உணர்ந்த நல்லவனைத் தேடி வாழ்ந்தால்
தவறாமோ அதுவேதான் நல்ல காதல்


காதலென்றால் நல்லதென்று உணரார் தானே
கள்ளத்தைக் காதலிலே சேர்க்கின்றாரே
வேதனையை வாழ்க்கையென்று உணர்ந்த பின்னர்
விரும்பாத பேயோடு வாழ்தல் விட்டு
கோதி நன்கு அரவணைத்து அன்பு செய்து
கொஞ்சி மனக் கோயிலுக்குள் வைத்துப் போற்றும்
பாதி எல்லாம் பாதி என்று புரிந்து வாழப்
பழகியவர் தன்னோடு வாழ்தல் காதல்


ஒடி விட்டாள் என்கின்றார் எங்கே அன்பை
உதவாதார் தனை விட்டு ஒடல் நியாயம்
கூடி விட்டாள் என்கின்றார் நல்ல நட்பைக்
கொண்டாடிக் காதல் செய்யும் நல்லவரைப்
பேடியைப் போல் அவர் தனையே கள்ளக் காதல்
பேணியவர் என்று சொல்லும் அறியார் தம்மைக்
கூடி நாமும் எதிர்த்திடுவோம் கொடுமையாக
கூச வைக்கும் பேச்சினையே எதிர்த்திடுவோம்

0 மறுமொழிகள்: