Wednesday, December 29, 2010

ராசிபுரம் எஸ்.ஆர்.வி.கல்விக் குழுமங்களின் செயலர் அன்பே வடிவான அய்யா ப.வஜ்ஜிரவேலு அவர்களோடு

சிவனும் திருமாலும்

மார்கழி மாதம் ஆண்டாளும் மணிவாசகரும் தந்து நின்ற
சீர் நிறைப் பாவைப் பாடல்களை செவியில் நிறையச் செய்வதற்காய்
கார்முகில் கண்ணன் சிவனார் தம் கனிவை அருளைப் பெறுவதற்கு
ஊரினில் உள்ளோர் விடவில்லை ஒருவருக் கொருவர் எதிர்ப் பாட்டு
ஆரிதைக் கேட்பது தெருத் தோறும ஆறேழாகக் கோயில்களில்
சீரின்றிப் பாடல்கள் ஒலி பரப்பி செவியைக் கிழித்தே ஒழிக்கின்றார்
வார்முலை உமையின் சிவனாரும் வ்ளம் கொள் திருவும் திருமாலும்
ஆரிங்கு வருவார் வர மாட்டார் அகப் பட்டது நாம் மட்டு மிங்கே

Saturday, December 25, 2010

கிறிஸ்துமஸ் வாழ்த்து

உன்னைப் போல் பிறரையே நேசி என்ற
ஒரு வரியை உலகத்தார் கொண்டு விட்டால்
பின் னங்கு இன்ப மன்றி வேறு ஏது
பிரி வேது சரி வேது சர்ச்சை யேது
தன்னையே தந்து நின்றார் இயேசு பிரான்
தந்ததெல்லாம் அன்பு வழி ஒன்று தானே
அன்னவரும் அவதரித்தார் உலகம் உய்ய
அன்பர்களே உமக் கெந்தன் அன்பு வாழ்த்து

Friday, December 24, 2010

எம்.ஜி.ஆர்.எங்கும் உள்ளார்

மறைந்தவர்கள் அனைவருமே மறைந்தா போனார்
மக்களுக்கு உதவியவர் இன்றும் உள்ளார்
இறந்து விட்டார் என்றவரைச் சொல்லுவது
இழி மொழியாய் ஆகி விடும் நிறுத்திக் கொள்வீர்
சிறந்தவராய் அனைவருக்கும் உதவி செய்து
சேர்த்தெதையும் வைக்காமல் கொடுத்து வாழ்ந்த
பரந்த மனம் கொண்டோர்கள் என்றும் உள்ளோர்
பார்க்கின்றோம் எம்.ஜி.ஆர். எங்கும் உள்ளார்

Thursday, December 23, 2010

தம்பி நாஞ்சில் நாடனுக்கு அண்ணனின் வாழ்த்து

பெரம்பலூர் லயன்ஸ் கிளப்

லயன்ஸ் கிளப்

லயன்ஸ் கிளப் தொடர்ச்சி

பெரம்பலூர் லயன்ஸ் கிளப் ஆளுனர் தலைவர் இமயவரம்பன் ஹேமா இமயவரம்பன் நண்பர் ராமராசு அவர்களோடு

ஹான்ஸ் ரோவர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் முனைவர் வரதராஜன் துணைவியார் திருமதி மகாலட்சுமி திருமகனார் அசோக் அவரகள் திருமதி பவானி அசோக் அவர்களோடு

என் தம்பி நாஞ்சில் நாடன்

என் தம்பி இனிய தம்பி நாஞ்சில் நாடன்
இதயத்தில் நிறைந்திருக்கும் முதன்மைத் தம்பி
முன் பின்னர் யாரிடமும் முயற்சி செய்து
முறை கேடாய் விருதுகளைப் பெறுவார் முன்னே
தன் னுழைப்பால் தமிழுறவால் விருது பெற்றான்
தாமதமாய்ப் பெற்றாலும் சரியாய்ப் பெற்றான்
கண்ணினிய என் தம்பி தன்னை எந்தன்
கனியுறவாய்த் தந்த தமிழ் காத்து நிற்பாள்

Friday, December 17, 2010

ஆரிவரை முடித்திடுவார்

எல்லாத் தவறுகளும் செய்து விட்டு
எப்படித்தான் முகம் மலரச் சிரிக்கின்றாரோ
பொல்லாதார் இவர் தம்மைப் பார்க்கும் நேரம்
புழுங்கி மனம் நோகின்றது சாகின்றது
எல்லோரும் வருந்துகின்றார் பேசுகின்றார்
இறைவனிடம் முறையிட்டு நிற்கின்றாரே
அல்லாவோ சிவனோ ஏசு தானோ
ஆரிவரை முடித்திடுவார் புரியவில்லை

Saturday, December 11, 2010

பரந்து வெல்க

அன்பை விடச் சிறந்த மொழி உலகில் யாரும்
அறிந்திருந்தால் அதனை இங்கே சொல்ல வேண்டும்
பண்புகளில் தலையாய பண்பு அது அதைப்
பயின்று விட்டால் உலகனைத்தும் உமது சொந்தம்
நண்பர்களே அன்பு செய்யப் பயின்றிடுங்கள்
நலம் விளையும் உயிரெல்லாம் வணங்கிப் போற்றும்
பண்பு இதை மனைவி மக்கள் தனில் தொடங்கி
பாரெங்கும் விரித்திடுக பரந்து வெல்க

பாரதி தான்

பிறந்தவர்கள் அனைவருமே இறப்பார் என்ற
பெருஞ் செய்தி அது ஒன்றே உண்மைச் செய்தி
நிரந்தரமாய் வாழ்பவர் யார் தனை மறந்து
நிலந் தாங்கும் உயிர்களெல்லாம் வாழ்வதற்காய்
சிறந்த வழியனைத்தையுமே சொல்லி நல்ல
சிந்தனைகள் சிறப்பதற்கும் கவிதை சொல்லி
வரம் போல வந்தவர்தான் என்றும் வாழ்வார்
வாழ்கின்றான் இன்றும் எங்கள் பாரதி தான்

Tuesday, December 7, 2010

வெல்ல வேண்டும்

நாலரைக்கு குயிற் பெண்ணாள் கூவி நிற்பாள்
நான் விழிக்கக் குருவிகளார் குரல் கொடுப்பார்
கோல மணிச் சத்தத்தைப் பால் காரர்தான்
கொண்டு வந்து செவிகளிலே ஊட்டி நிற்பார்
ஆலயத்தின் மணி ஒலிக்கத் தேவாரம் தான்
அழகு தமிழாய் வந்து இன்பம் சேர்க்கும்
நாளொன்று கழிந்ததென்ற செய்தி எந்தன்
நாட் காட்டி வழி தெரியும் வெல்ல வேண்டும்

Sunday, December 5, 2010

இளையராஜா

நாதத்தின் தலைவன் அந்தச் சிவன் தானென்றால்
நாயகனின் முதற் பிள்ளை இளையராஜா
தாளத்தின் தலைவனும் அச் சிவனே யென்றால்
தலைப் பிள்ளை தமிழர் பெற்ற இளையராஜா
கோளங்கள் அனைத்திலுமே இசையின் கோலம்
கொண்டு சேர்த்து வென்றவனே இளையராஜா
நாள் தோறும் அவன் இசையை மீண்டும் மீண்டும்
நான் கேட்பேன் உயிர் வாழ்வேன் மகிழ்ச்சியோடு

ஆட்சியே தருவாரோ தான்

எரிந்தார்கள் எத்தனை பேர் இவருக்காக
இவர் வீட்டுப் பிள்ளைகளும் சுகமாய் வாழ
எரிந்தார்கள் மூவர் இவர் சண்டையிலே
இணைந்தார்கள் இவர்கள் மீண்டும் கோடி கொள்ள
எறிந்தார்கள் பிச்சை போல இலவசங்கள்
ஏழையரை மயக்குதற்கோ மதுக் கடைகள்
எறிவாரா மக்கள் இவர் கொள்ளை கண்டு
இலவசமாய் ஆட்சியையே தருவாரோ தான்

Friday, December 3, 2010

நாட்டு மக்காள்

உழைக்கின்ற ஏழை மக்கள் வயிற்றுக்குள்ளே
ஊற்றுகின்ற மது வகைகள் நெருப்புத் தானே
அலைக் கற்றைக் கோடிகளில் இந்தியரின்
அடி வயிற்றில் எரிவதெல்லாம் நெருப்புத் தானே
தொலைக் காட்சி திரைப் படங்கள் மேலும் உள்ள
தொழில் செய்வோர் வயிறெல்லாம் நெருப்புத் தானே
கலைஞர் தன்னை நெருப் பென்று சொன்ன தன் நற்
கருத் திதனை உணர்ந்திடுவீர் நாட்டு மக்காள்

Wednesday, December 1, 2010

தலைவராக

உயிர்க் கொல்லி எய்ட்ஸ் நோயை ஒழிப்பதற்காய்
உள்ளூரில் தலைவ ரெல்லாம் பேசுகின்றார்
உயிரோடு ஏழையரைக் கொல்லுகின்ற
ஊழல் நோயை இவர் வளர்த்துப் பேணுகின்றார்
அயராமல் ஊழல் செய்து மகிழுகின்றார்
அது குறித்து நாணமின்றி வாழுகின்றார்
துயரங்கள் நாட்டு மக்கள் சொந்தமாக
தொழில் நாணம் இழப்ப தென்போர் தலைவராக