Thursday, July 16, 2009

கல்வித் தந்தை ரோச்

நல்லதொரு தந்தையினை ரோச் என்னும்
நாயகரை தொலைக் காட்சி ஒன்றில் கண்டேன்
வல்லவராம் அவர் வாழும் திருச்சி நோக்கி
வாழ்த்தி நின்றேன் போற்றி நின்றேன் ஆடி நின்றேன்
சொல்லுகின்றேன் அவர் பெருமை ஆகா ஆகா
சுகம் சுகமே குழந்தைகட்கு உணர வேண்டும்
கொல்லாதீர் குழந்தைகளை பள்ளி என்னும்
கொலைக் கூடம் தனில் அளித்தல் நிறுத்துவீரே


பெண் குழந்தை இருவரையும் பள்ளியிலே
பெற்றோர்கள் இருவருமே பார்க்கப் போக
கண் திறந்த மனிதராய் ரோச்சும் ஆன
கதை கேட்டேன் மெய் சிலிர்த்தேன் வாழ்க வாழ்க
உண்மை இது உணர்ந்து உங்கள் குழந்தைகளை
உடன் காக்க உரிய வகை செய்வீர் நீரே
பண் பாடி குழந்தைகளும் மகிழ்ச்சி பொங்க
படிப்பாரே உயர்வாரே மனிதராக


காலை முதல் இரவு வரை படித்தல் என்ற
கட்டாயத் திட்டம் ஒன்றை அவர்கள் பள்ளி
வேலையென அறிவிக்க ரோச் அவர்கள்
விரைவாக ஒரு முடிவை எடுத்தார் அன்றே
நாளை முதல் பிள்ளைகளே பள்ளி வேண்டாம்
நலமான கல்வியினை மனம் மகிழ
வேளை தேர்ந்து வீட்டிலேயே கற்றிடுவீர்
விரும்புகின்ற நேரங்கள் தன்னில் எல்லாம்


கோழையென ஆக்குகின்ற இந்தக் கல்வி
கொடுமையிலே நீர் வாட வேண்டாம் என்றே
பேழை மன ரோச் எடுத்த முடிவில் இன்று
பெரு வெற்றி இருவருமே மிகச் சிறப்பாய்
வாழையடி வாழையென வளரும் கல்வி
வடிவத்தில் வெற்றி கண்டு உயர்ந்துள்ளார்
தோழரென அனைவருக்கும் உதவுகின்ற
தொண்டு மனப் பான்மையுடன் வென்று உள்ளார்


முதற் பெண்ணோ ஐஏஎஸ் எழுதுகின்றார் தங்கை
முதுகலையில் வெல்கின்றார் மேலும் கற்க
கதையில்லை கண் முன்னர் திருச்சியிலே
காட்டியுள்ளார் ரோச் என்னும் நல்ல தந்தை
இதை உணர்வீர் மனித உணர்வற்றவராய்
இதயமின்றிக் குழந்தைகளைக் கொல்லுகின்ற
வதைக் கூடப் பள்ளிகளை விட்டொழிப்பீர்
வாழ வையும் குழந்தைகளை மனிதராக

0 மறுமொழிகள்: