Thursday, September 2, 2010

எரிகின்ற மூடர்களே வாழப் பாரும்

போராட்டம் என்றாலே ஏழைகள் தான்
புரியாமல் எரிகின்றார் மாளுகின்றார்
சீராட்டி வளர்க்கின்ற தலைவர் மக்கள்
செந்தழலில் கொள்கைக்காய் எரிவதில்லை
தேரோட்டம் காரோட்டம் திருவிழாக்கள்
தேர்தலிலே வெற்றி கொள்ளல் அமைச்சராதல்
நீரோட்டம் போல அவர் வாழ்க்கை மட்டும்
நீள்கிறது ஆள்கிறது வாழ்கிறது


எரிந்த அந்த அறியானின் சடலத்தின் முன்
ஏங்கி அந்தத் தலைவர் விடும் கண்ணீர் கண்டு
நொறுங்கிடுவார் எரிந்தவனின் குடும்பத்தாரும்
நோகாமல் நடிக்கின்ற தலைவர் கண்டு
விரிந்த மனம் கொண்டவராய்த் தலைவர் அங்கு
விம்மலுடன் ல்ட்சம் ஒன்றை நீட்டிடு வார்
கருகியவன் குடும்பத்துக் கண்ணீரையும்
காசாக்கி வென்றிடுவார் நம் தலைவர்


எரிந்து பட்ட தங்கமே என் இதய வேந்தே
எப்படி நான் உனை மறப்பேன் செந்தமிழா
கருகுகின்ற நேரமும் நீ என்னை வாழ்த்தி
கனித் தமிழில் முழக்கங்கள் இட்டாயாமே
பனித் தமிழே என் தம்பி உன்னைப் போல
பாசமிக்க தம்பியரைப் பெற்றதால் தான்
தனித்த நந்தம் இயக்கத்தின் ஆட்சியதும்
தவறாமல் தொடருது இந்த நாட்டில் நன்கு


இனித்தவனே என் நெஞ்சில் தீயை வைத்தாய்
என்று நான் உனைக் காண்பேன் கொன்றே போட்டாய்
தனித்து நான் நிற்கின்றேன் உன்னைப் போன்ற
தம்பியரைப் பிரிகின்ற நேரமெல்லாம்
கனித் தமிழாள் உனைப் பெற்ற காரணத்தால்
கண்ணியத்தைப் பெருமையெனக் கொண்டாள் தம்பி
நினைவெல்லாம் நீயாக என்றும் வாழ்வேன்
நெஞ்சத்தில் ஒரு இடத்தை உனக்களித் தேன்


சுவரொட்டி ஆயிடுவான் அந்தத் தம்பி
சுற்று முற்றும் தேர்தல் வரும் நேர மெல்லாம்
தவறாமல் அவன் பெயரை மேடை தோறும்
தமிழ் காக்க உயிர் தந்தான் என்று சொல்லி
அவதார புருஷர் இவர் ஆட்சி கொள்வார்
அடுத்து வரும் தலை முறையின் ஆசை தீர்ப்பார்
இவர் பிள்ளை எரிந்தவனின் வயதையொத்தான்
இந்நாட்டு ஆட்சியிலே அவன் அமர்வான்


எரிகின்ற மூடர்களே உணர்ந்தீரா நீர்
ஏய்க்கின்றார் பிள்ளைகள் தான் எரிகின்றாரா
விரிகின்ற அறிவு கொள்வீர் வாழ்க்கைதன்னை
வீணருக்காய்க் கொள்ளையர்க்காய் எரிக்காதீர் நீர்
தெரிகின்ற நல் வாழ்க்கை தேர்ந்தெடுப்பீர்
திருடருக்காய் அழியாதீர் வாழப் பாரும்
உரிமையுள்ள தாய் தந்தை மனைவி மக்கள்
உற்றார்கள் நாட்டிற்காய் வாழப் பாரும்

0 மறுமொழிகள்: