Thursday, March 22, 2012

வெளிநாட்டில்

அன்பே வடிவான தமிழர்களுக்கு வாழ்க தமிழுடன். வெளி நாட்டில் வாழும் தமிழர்கள் சிலர் தமிழ்ச்சங்கம் மூலமாக உரை நிகழ்த்த அழைக்கும் போது மிகவும் சிந்திக்க வேண்டியிருக்கின்றது.

நான் முதன் முதல் போன வெளிநாடு இலங்கை. கொழும்பில் நடைபெற்ற கம்பன் கழக அழைப்பில் சென்றேன்.பெரியவர் அ.ச.ஞானசம்பந்தம் அவர்களும் அந்த ஆண்டு வந்திருந்தார்.

வழக்காடு மன்றம் கவியரங்கங்களுக்கு தலைமை ஏற்றேன்.
கவியரங்கத்தை வீரகேசரி தினகரன் நாளிதழ்கள் முப்பது வருடத்தில் உச்சமாக அமைந்த கவியரங்கம் என்று போற்றின.

மீண்டும் ஒரு முறை மறைந்த விநோதகன் அவர்கள் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்றிருந்தேன்.தம்பி இதயானந்தா இன்றும் இங்கிலாந்து வந்த பிறகும் என்னோடு தொடர்பில்
இருக்கின்றார்.

அதன் பின்னர் மலேசியா சென்றேன்.இரண்டாம் முறை சென்ற போது அமைச்சர் டத்தோ சரவணன் அழைத்திருந்தார்.என்னை அப்பா என்றே இன்றும் அழைக்கின்றார்.

அதன் பின்னர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தமிழ்ச் சங்கத்தின் அழைப்பில் சென்றிருந்தேன். பெரியவர் சலாவுதீன் வீட்டில் இரவு உண்விற்குச் சென்றிருந்தேன். இரவு நெடு நேரம் உரையாடிக் கொண்டிருந்தோம்.சில தமிழ்ச் செய்யுள்களை என்னிடம் கேட்டு பெரியவர் சலாவுதீன் அவர் கைப்பட எழுதி கொண்டார்.

அதன் பின்னர் சிங்கப்பூருக்கு பட்டுக்கோட்டையாரின் நண்பர்கள் அழைத்திருந்தனர். மிக மிக பண்பும் மரியாதையும் கொண்டவர்களாக ந்டந்தனர். இன்று வரை இராமசாமியும் புகழேந்தியும் காசியும் என்னுடன் தொடர்பில் இருக்கின்றனர்.

அதன் பின்னர் குவைத் தமிழ்ச்சங்கத்து இளைஞர்கள் அழைத்து (தமிழுக்காக மட்டும்) மிகச் சிறப்பாக நிகழ்ச்சியை நடத்தினர். தமிழுக்காகவே வாழ்ந்த தேவநேயப் பாவாணர் அவர்களுடைய மாணாக்கர் பெரியவர் இரா.மதிவாணன் அவர்களும் என்னோடு கலந்து கொண்டார். எனக்கு மிகச் சிறந்த பிள்ளைகள் கிடைத்தனர். இது வரை என்னோடு தொடர்பில் இருக்கின்றனர்.

தமிழ்ச்சங்கங்கள் திரைப்படக் கலைஞர்களை அழைத்து அவர்களோடு புகைப் படங்கள் எடுத்துக் கொள்வதிலேயே ஆர்வம் கொண்டவர்களாக இருக்கின்றனர். திரைப் படக் கலைஞர்களும் தமிழுக்காகச் சேவை செய்பவர்கள்தாம்.ஆனால் தமிழறிஞர்களை அழைக்கும் போது அவர்களை முழுமையாக உரை நிகழ்த்த ஏற்பாடுகள் செய்தால் தானே. நிறைய தமிழ் குறித்துத் தெரிந்து கொள்ள முடியும்.
ஆனால் அப்படிச் செய்ய சில வெளிநாட்டு தமிழ்ச் சங்க நிர்வாகிகள்தான் விரும்புகின்றனர்.

ஷார்ஜா விலிருந்து ஒரு பெண்மணி என்னை தொலைபேசியில் அழைத்தார்.நீங்கள் நெல்லைக்கண்ணன் தானே.தமிழ் நிகழ்ச்சிக்கு வர வேண்டும் என்றார். தேதி கேட்டேன். சொன்னார். சொல்லி விட்டு அவர் என்னிடம் சொன்னார். அவர் எனக்கு ஒரு மணி நேரம் அளிப்பாராம். நான் பேச வேண்டுமாம்.ஏனென்றால் திரைப்படத் துறையினருக்கு அவர் முக்கியத்துவம் தர வேண்டுமாம்.

அபுதாபியில் இருந்து ஒரு நண்பர் அழைத்தார் . பாரதி விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்றார். என்னை நெறிப் படுத்துவது எனது வள்ளுவப் பேராசான் என்றால்.இந்த நூற்றாண்டின் சமூகச் சிந்தனையாளன் பாரதி என் ஆசிரியன். மகிழ்ச்சியோடு ஒத்துக் கொண்டேன்.

அடுத்து அவர் சொன்னார் நான் மிகவும் மதிக்கின்ற் வீணை இசைக் கலைஞர் ராஜேஷ் வைத்யா வருவதாகவும். அவர் இசை நிகழ்ச்சிக்கு முன்னர் நான் ஒரு மணி நேரம் பேச் வேண்டும் என்று. என்ன சொல்வது.வெளி நாடு வாழ் தமிழர்கள் செலவு செய்து நம்மை அழைக்கும் போது முழுமையாக ஒரு உரை நிகழ்த்தினால் தானே அவர்களுக்கும் நிறைவு. நமக்கும் நிறைவு.அவர்கள் தமிழை இரண்டாவது இடத்தில் தான் வைத்துப் பார்க்கின்றனர்.

தமிழ் நாட்டில் நான் மூன்று மணி நேரத்திற்குக் குறைவாக உரை நிகழ்த்தினால் என்னோடு வருத்தம் கொள்வார்கள்.என்ன அய்யா ஏமாற்றி
விட்டீர்களே என்று. கேட்டால் தானே அவர்களால் உணர முடியும்.

சமீபத்தில் மறைந்த முது பெரும் எழுத்தாளர் அண்ணன் ர.சு.நல்லபெருமாள் அவர் தம் மகன் பாலு அவர்கள் ஹூஸ்டன் நகரில் அமெரிக்காவில் இருக்கின்றவர். அவர்கள் தமிழ்ச்சங்கத்தில் உரை நிகழ்த்த வேண்டும் என்ற ஆசையிலே அவர்களிடம் பேச என் மீது மிகுந்த அன்பு கொண்ட வள்ளல் அழகப்பச் செட்டியார் அவர்களின் திருமகள் என் அம்மா உமையாள் இராமநாதன் அவர்கள் உறவினர் கண்ணப்பன் அவர்கள் பேசினார்.மே மாதம் 25 26 27ல் நிகழ்ச்சி என்றார். ஏற்றுக் கொண்டேன். அவர்கள் வேறு வழியில் செய்தி தந்தனர். 25 26 ஆகிய தேதிகளில் அவர்கள் எனக்கு 45 நிமிடங்கள் ஒதுக்குவார்களாம். அதில் நான் பேச் வேண்டுமாம். எனக்கு முன்னரும் பின்னரும் திரைப்படக் கலைஞர்கள் பேசுவார்களாம். அவர்களுக்கு நான் மிகுந்த நன்றியுடையவனாகி விட்டேன்.
ஏனெனில் இனி வெளி நாட்டு நிகழ்ச்சிகள் என்றால் தமிழுக்கு மட்டும் நிகழ்ச்சி நடத்துவதாக இருந்தால் மட்டும் ஏற்றுக் கொள்வதென்று ஒரு தெளிவான முடிவெடுக்க உதவினார்கள் என்பதனால்.

தமிழ்நாட்டிலேயே இன்னும் உரை நிகழ்த்த வேண்டிய ஊர்கள் பல உள்ளன. என்னைக் கேட்பதற்கு ஆர்வமான தமிழ் ஆர்வலர்களும் ஆயிரக் கணக்கில் இருக்கின்றனர். எல்லாம் வல்ல இறைவனும் என் தமிழ்த் தயும் என்னை உணர வைத்திருக்கின்றனர். மகிழ்ச்சியாக இருக்கின்றேன். அன்புடன் நெல்லைக்கண்ணன்

0 மறுமொழிகள்: