Tuesday, March 27, 2012

கண்ணதாசன் திரைப் படப் பாடல்கள்



தந்தையைக் காண முடியாமல் தவிக்கின்ற குழந்தை ஒன்று அதனை வளர்க்கின்ர மாமன் அதற்கு ஆறுதல் சொல்லிப் பாடுகின்றான் பார்த்தால் பசி தீரும் என்ற படம்.

பிள்ளைக்கு தந்தை ஒருவன் நம்
எல்லோருக்கும் தந்தை இறைவன்
நீ ஒருவனை நம்பி வந்தாயோ இல்லை
இறைவனை நம்பி வந்தாயோ

என்று கேட்கின்றார் கவியரசர்

ஆமாம் உனக்கு ஒரு தந்தை உண்டு மகனே. ஆனால் உன் தந்தைக்கும் ஒரு தந்தை உண்டு .அவர் தான் இறைவன் என்கின்றார்.

அடுத்த கேள்வி மிக மிக ஆழமான கேள்வி. ஆமாம் உனக்குத் தெரிய வாய்ப்பில்லை மகனே அந்த தந்தையாக உருவெடுத்த அந்த ஒருவனையா நம்பி நீ வந்துள்ளாய். இல்லை இல்லை அவனுக்கும் தந்தையான இறைவனை நம்பியல்லவா வந்துள்ளாய் என்கின்றார். ஏனெனில் உன் தந்தையையும் இயக்குவது அவனல்லவா என்கின்றார்.

உன் தந்தை உன் தாயை மறந்திருக்கக் கூடும் உன் தந்தை உனக்கு தந்தையென்று ஊரார் அறியச் சொல்லாமலிருக்கக் கூடும். ஆனால் இறைவனாகிய தந்தையோ நீ அழைக்க வேண்டும் என்று காத்திருக்க மாட்டான் அவனாகவே வந்து அவனது கடமைகளைச் சரியாகச் செய்வான்.

தாயாரைத் தந்தை மறந்தாலும்
தந்தை தானென்று சொல்லாத போதும்
ஏனென்று கேட்காமல் வருவான் நம்
எல்லோருக்கும் தந்தை இறைவன்

அடுத்துத் தான் கவியரசரின் சிந்தனையின் தெளிவும் உயர்வும் வந்து விழும் வரிகளாக.

கோடிக்கணக்கில் பணம் வைத்திருக்கின்ற பணக்காரர்களுக்கு எல்லாம் சொந்தமாகக் காட்சியளிக்கும் என்கின்றார்.

செல்வமற்ற ஏழைகளுக்கு மிகப் பெரிய செல்வமாக இறைவன் அளித்த உள்ளங்கள் சொந்தமாக இருக்கும் என்கின்றார். அதனால்தான் இறைவன் என்ன செய்வானாம் கள்ளமற்ற உள்ளங்கள் வாழும் இல்லாதவரின் இல்லங்கள் தேடி வருவானாம். அவன் நம் எல்லோருக்கும் தந்தை இறைவன் என்கின்றார்.

உள்ளோர்க்குச் செல்வங்கள் சொந்தம் அது
இல்லார்க்கு உள்ளங்கள் சொந்தம்
இல்லாத இடம் தேடி வருவான் நம்
எல்லோருக்கும் தந்தை இறைவன்
கவியரசரின் வரி வடிவங்கள் இறைவன் அவருக்கு அளித்த கொடை.

0 மறுமொழிகள்: