Tuesday, December 16, 2008

ஏழை சாதி

 சாதி சொல்லி ஏழையரைப் பிரித்து வைத்து
  சரியாக விஷ விதையை விதைத்து வைத்து
  பாதிக்கா இடத்தினிலே இருந்து கொண்டு
  பணக்காரர் பத்திரமாய் வாழ்கின்றார் காண்
  நீதி காக்க பயிலுகின்றார் மனத்தினிலும்
  நீசர்களே இவ்விதையை விதைத்து உள்ளார்
  பாதிக்கப் பட்டாரைக் காப்பதற்கு
  பணம் படைத்தோர் வருவாரோ மாட்டார் மாட்டார்


  ஏழையர்கள் ஒரு சாதி /பணம்படைத்தோர்
  எல்லோரும் ஒரு சாதி உணர்வீர் நீரே
  வாழையடி வாழையென ஏய்த்து வாழ்வார்
  வளைத்து விட்ட செல்வத்தைக் காப்பதற்காய்
  கோழைகளாய் இளையவரின் மனத்தில் இந்தக்
  கொடுமையினைப் புகுத்துகின்றார் புரிந்து கொள்வீர்
  நாளை அவர் வீட்டுப் பெண்ணை மணமகளாய்
  நல்குவரோ தன் சாதி ஏழைக்கங்கு


  சாதிகளின் பெயராலே நடக்கும் எந்தச்
  சதியினிலும் ஏழைகளே மாளுகின்றார்
  பாதிப்பை தூண்டி விட்ட பணம் படைத்தோர்
  பத்திரமாய் குளிர் அறையில் தூங்குகின்றார்
  சாதியையே சொல்லி வாழும் அவர் தம் வீட்டில்
  சாதி ஏழை அனுமதிக்கப் படுவதில்லை
  நீதி உணர் இளைஞர்களே ஏழைகளே
  நீரெல்லாம் ஒரு சாதி ஏழை சாதி
   

1 மறுமொழிகள்:

said...

////நீதி உணர் இளைஞர்களே ஏழைகளே
நீரெல்லாம் ஒரு சாதி ஏழை சாதி/////

நிதர்சனமான உண்மை!
கவிதைக்கு நன்றி அய்யா!