Wednesday, December 31, 2008

கொண்டிடுவாய்

அழகாய் வாழ்தலென்றால் உள்ளம்
அன்பால் நிறைதல் என்றாகும்
தெளிவாய் வாழ்தல் என்றால் பொருளைத்
தேடல் நிறுத்தல் என்றாகும்
அறிவாய் வாழ்தலென்றால் உயிர்கட்
கருளிச் செய்தல் என்றாகும்
பணிவாய் வாழ்தலென்றால் என்றும்
பாவம் செய்யா வாழ்வாகும்


துணிவாய் வாழ்தலென்றால் எதிலும்
தொல்லை காணா வாழ்வாகும்
இனிதாய் வாழ்வதென்றால் எதற்கும்
ஏக்கம் இல்லா வாழ்வாகும்
தனியாய் வாழ்வதென்றால் இறைவன்
தன்னுள் அமரும் வாழ்வாகும்
கனிவாய் வாழும் வாழ்வென்றால்
கருணை கொண்ட வாழ்வாகும்


மனிதா இந்த வாழ்வொன்றே
மனிதன் என்று உனைச் சொல்லும்
கனிதான் இருக்கக் காய் கவரும்
கருத்தை விட்டால் வென்றிடுவாய்
இனியும் என்ன வள்ளுவரை
எடுத்துப் படி நீ வென்றிடலாம்
தனியாய்த் தமிழ்த்தாய் ஈன்றெடுத்த
தவத்தின் மகனைக் கொண்டிடுவாய்

0 மறுமொழிகள்: