Saturday, December 27, 2008

உவமையற்று வென்றதாலே

தமிழை நான் அமுதென்று சொல்ல மாட்டேன்
தேவர் மட்டும் சதி செய்து உண்டதாலே
தமிழை நான் பாலென்று சொல்ல மாட்டேன்
தரிக்காது திரிந்து வீணாவதாலே
தமிழை நான் தாயென்று சொல்ல மாட்டேன்
தாயவளும் மருமகளால் மாறலாலே
தமிழை நான் வேலென்று சொல்ல மாட்டேன்
தாவி ஒரு உயிர் பறிக்கும் கொடுமையாலே


தமிழை நான் நிலவென்று சொல்ல மாட்டேன்
தான் தேய்ந்து தேய்ந்து மீண்டும் வளரலாலே
தமிழை நான் மதுவென்று சொல்ல மாட்டேன்
தனை மறந்து ஏழையரை அழிப்பதாலே
தமிழை நான் வாளென்றும் சொல்ல மாட்டேன்
தமிழருக்குள் பகை வளர்த்துப் பிரித்ததாலே
தமிழை நான் தமிழென்றே சொல்லி டுவேன்
தனக்கிணையாய் உவமையற்று வென்றதாலே

2 மறுமொழிகள்:

said...

மிக அழகான விருத்தங்கள், ஐயா!

நா. கணேசன்

said...

மயங்கி நின்றேன் உமதழகு தமிழாலே..!!
மயக்கங்கள் தீர்த்தொழிப்பீர் மறுபாவாலே..!!

அருமை..!! ஐயா..!! அருமை..!!