Thursday, July 22, 2010

பூவரசி எனும் அரக்கி

பூவரசி எனும் பெண்ணை அரக்கியாக்கி
பொன்னான தன் மகனை இழந்து நிற்கும்
பாவி மகன் ஜெயக்குமார் தன்னை யாரும்
பழிப்பது போல் தெரியவில்லை வீட்டில் நல்ல
வாழ்வரசி துணையிருந்தும் வந்த பெண்ணை
வளைத்து அவள் உடல் சுகித்து கருக்கலைத்து
பாழ் வாழ்க்கை அவன் வாழ ஒருத்தி அங்கு
பனி மகனை இழக்க பூவோ அரக்கி ஆனாள்


கேவலமாய் வாழுகின்ற ஆண் மகனின்
கீழ்த்தரத்தை உணர்ந்தீரோ நாட்டு மக்காள்
ஆவலினை ஆசையினை அடக்க வொண்ணா
அத்துமீறல் அன்றோ அவன் குழந்தையினை
சாவறைக்குக் கொண்டு செல்ல வழி செய்தது
சரியாகச் சுமந்து பெற்ற தாயவட் கன்றோ
கேவிக் கேவி அழுதரற்றும் துன்பமிங்கு
கேட்டுப் பெறக் குழந்தை யென்ன நுகர் பொருளா

Wednesday, July 21, 2010

வெறுமை மிஞ்சும்

தவம் செய்ய ஆசை கொள்வார் முதலில் ஒரு
தரமான வாழ்க்கையினைக் கொள்ள வேண்டும்
சிவ நெறியில் செல்வதென்றால் ஒழுக்கம் வேண்டும்
செந்தமிழில் பண்பாடு காக்க வேண்டும்
இவை யெல்லாம் கொண்டவர்க்கே செல்வம் வரும்
இல்லை யென்றால் இழி பெயர் தான் கொள்ள வேண்டும்
அவம் இதை உணராதார் தவ நெறியில் செல்வம்
அகப்படும் என்றலைந்தாலோ வெறுமை மிஞ்சும்

சிவாஜி நடிப்பின் வேதம்

பராசக்தி தனில் மலர்ந்தான் தமிழர்களின்
படங்களுக்காய் இறைவனவன் தந்த பூவாய்
தராதரத்தில் அவனை மிஞ்ச இன்னுமொரு
தனி நடிகன் வருவதற்கு வாய்ப்பேயில்லை
அறாத ஒரு பெரும் புகழைக் கொண்ட வேந்தன்
அண்ணன் அவன் சிவாஜி எனும் நடிப்பின் வேதம்
பராபரமே அவன் நடிப்பின் சிறப்பைக் காண
பக்கத்தில் அவன் அழைத்துக் கொண்ட தின்று

Monday, July 19, 2010

மன நோயால் வீழ்ந்தார்

பிறர் தாயைப் பண்பாட்டுக் குறைவாய்ப் பேசும்
பேதையர்கள் தம் தாயைப் பேசுகின்றார்
குறைப் பட்ட மனத்தாராய் மற்றவரைக்
கொடு மொழியால் திட்டுகின்றார் அந்தோபாவம்
நிறைவான மனம் கொண்டார் மற்றவரின்
நிலை உணர்வார் தம் பிழையின் தரம் உணர்வார்
அறைவார் போல் வார்த்தைகளை வீசிடுவார்
அய்யகோ மன நோயால் அன்றோ வீழ்ந்தார்

தமிழன்னை வேண்டி நிற்பாள்

பண்பாடு இல்லாத வார்த்தைகளைப்
பழகிடுவார் தமிழரென்றால் இல்லை இல்லை
கண் போலப் பண்பாட்டைப் போற்றுதற்கு
கனிவு மொழி வேண்டும் என்ற வள்ளுவனின்
தென் பாட்டுத் திருக்குறளைப் போற்றார் தம்மை
தீந் தமிழர் என்று சொன்னால் தமிழாம் அன்னை
புண் பட்டுப் போய் நிற்பாள் புலம்பிடுவாள்
புறங் கூறும் அவர் மரணம் வேண்டி நிற்பாள்

Saturday, July 17, 2010

எங்கும் கிடைக்கும்

எனது படைப்புக்கள் அனைத்தும் சென்னையின் எல்லா புத்தக விற்பனைக் கடைகளிலும் கிடைக்கும்

Friday, July 16, 2010

சிலையே கூட

சிலை வைக்க வேண்டாமே நல்லவர்க்கு
சேறு அள்ளிப் பூசியவர் எல்லாம் வந்து
வலை வலையாய் மாலைகளைப் போடுகின்றார்
வாய் நிறைந்த பொய் வசனம் பேசுகின்றார்
அலை அலையாய்க் கூட்டங்கள் கூட்டுகின்றார்
அரி தார நாட கங்கள் நடத் துகின்றார்
பல வேடப் பாவியரின் கரங்கள் பட்டு
பதைபதைத்து நிற்கும் அந்தச் சிலையே கூட

Thursday, July 15, 2010

காமராஜர் தேடி

எத்தனையோ பேர் பிறப்பார் இறந்தும் போவார்
இருப்பார்கள் சில பேரோ இறந்தே வாழ்வார்
மொத்தமான தமிழ்க் குலத்தார் நினைவில் என்றும்
முதல்வராக வாழ்ந்திருப் பார் காமராஜர்
சத்தியத்தை வாழ்க்கை யெனக் கொண்டிருந்த
சரித் திரத்தைத் தந்தவர் தான் காமராஜர்
எத்தனை நாள் அவர் நினைவில் வாழுகின்றோம்
இன்னும் ஒரு காமராஜர் தேடித் தேடி

Tuesday, July 13, 2010

மக்கள் வெள்ளம்

எனது உரை

மக்கள் வரிசையில் கணக்காயர் லோகநாதன் அய்யா அவர்களும் பெரியவர் ரத்தினம் செட்டியாரும்

திருப்பூர் மக்கள்

திருப்பூர் டவுன் ஹால் மைதானத்தில் நிரம்பி வழிந்த கூட்டம்

நான்

நானும் அணியினரும்

நான் தா.பா. சுப்பராயன்

எனது முன்னுரை


அண்ணன் தா.பாண்டியன் தோழர் கே.சுப்பராயன் பேராசிரியை ரேவதி கிருபாகரன் பேராசிரியை திருமதி க.சுப்புலெட்சுமி

பட்டிமன்றம் அணிகள் வள்ளுவம் காந்தீயம் மார்க்சியம்


வள்ளுவம் பேராசிரியர் வே.சங்கரநாராயணன் ந்ல்லாசிரியர் பே.சங்கரலிங்கம் காந்தீயம் பேராசிரியை திருமதி ரேவதி கிருபாகரன் பேராசிரியை திருமதி க.சுப்புலெட்சுமி மார்க்ஸீயம் அண்ணன் தோழர் தா.பாண்டியன் தோழர் திருப்பூர் கே.சுப்பராயன்

திருப்பூரில் பட்டிமன்றம்


ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கம் சார்பில் நடந்த பட்டிமன்றம் பொருள் மனித குலச் சிக்கலைத் தீர்ப்பதற்கு உதவுவது வள்ளுவமா காந்தீயமா மார்க்ஸீயமா

Friday, July 9, 2010

ஆக்டோபஸ் ஜெர்மனி

ஆக்டோபஸ் வெற்றி என்று சொன்னதென்று
ஆர்ப்பரித்து ஆடி நின்றார் ஜெர்மனியர்
போக்கொழியும் அரை இறுதி ஆட்டம் தன்னில்
பொறுப்பாக ஸ்பெயின் அணியே வெற்றி பெறும்
ஆக்டோபஸ் சொல்லியது அதுவே ஆச்சு
அலறுகின்றார் ஜெர்மனியர் ஆக்டோபஸ்ஸை
தாக்குங்கள் கொல்லுங்கள் என்று எல்லாம்
தட தடத்து ஆடுகின்றார் அந்தோ பாவம்

Thursday, July 8, 2010

இறையும் வாழ்த்த (இளையராஜா)

யார் என்ன சொன்னா லும் என்னவாகும்
இளையராஜா இசைக்கெனவே பிறந்த ராஜா
ஊர் தோறும் அவர் இசையை உணர்ந்து போற்ற
உணராதார் உளறி நின்றால் விட்டுத் தள்ளும்
சீர் கொண்ட செந்தமிழாள் பெருமை கொண்டாள்
சிறப்பான இசை வேந்தைப் பெற்றதாலே
பார் உணர்ந்து நிற்கிறது அவர் இசையை
பாடி நிற்போம் அவர் புகழை இறையும் வாழ்த்த

சிவத் தமிழே

நல்லவனாய் வாழ வைத்த நாயகனே நன்றி
நாடோறும் புகழ் வழங்கும் நல்லவனே நன்றி
அல்லவரை அகற்றி வைத்த அன்புடையோய் நன்றி
அறிவானார் துணை தந்த அஞ்செழுத்தே நன்றி
பல் விதத்தில் நல் நண்பர் தந்தவனே நன்றி
பாப் புனைய பைந்தமிழைப் பரிசளித்தோய் நன்றி
செல்லும் வழி தனி லெங்கும் சிறப்பளித்தோய் நன்றி
சிவத்தமிழே தவத்தழகே வணங்கி நின்றேன் போற்றி

Monday, July 5, 2010

இளையராஜா என்றே

பின்னணி இசை யதுவோ படம்
பேசா இடங்களில் வசனங்கள் பேசிடும்
மெல்லிசைப் பாட லதோ நம்
மேனி முழுவதும் துளிர்த் திட வைத்திடும்
துள்ளிசைப் பாட லென்றால் விண்ணைத்
தொட்டிடும் அளவிற்குத் துள்ள வைக்கும்
எம்மிசை என் றாலே அது
இளைய ராஜா என்றே மலர்ந்து நிற்கும்

Sunday, July 4, 2010

ஒரு கூட்டம் உண்டு

தேவநேயப் பாவாணர் என்னும் அந்தத்
தீந்தமிழார் தனைப் பற்றிப் பேச்சே இல்லை
ஆவலுற்றுச் சுவடிகளைத் தேடித் தேடி
அனைத்தையுமே கண்டு தந்த அய்யர் இல்லை
தேவாரத் திருமறைகள் திருவாய் மொழி
தேன் தமிழின் வள்ளலார் அருட்பா இல்லை
நாவாரப் புகழுவதற்கு மட்டும் அங்கே
நடிப்பிசைப்புப் புலவர் ஒரு கூட்டம் உண்டு

Friday, July 2, 2010

அடிமைகளாய்ப் பாடினாரே

பாரதியை நினைத்தாரா இல்லை இல்லை
பாவேந்தர் தனையே தான் போற்றினாரா
ஊரறிய காந்தி மகான் புகழைப் போற்றி
உயர்ந்து நின்ற நாமக்கல் போற்றினாரா
சீர் நிறைந்த கவிமணியைப் போற்றினாரா
செந்தமிழான் தமிழ் ஒளியைப் போற்றினாரா
பார் புகழும் இவரையெல்லாம் விட்டு விட்டு
பணிந்து வாழ்ந்து அடிமைகளாய்ப் பாடினாரே

தமிழைப் போல

கண்ணதாசன் பிறந்த நாள் தன்னிலே தான்
கனித் தமிழின் மாநாட்டைத் தொடங்கினார் காண்
எண்ணவில்லை கண்ணதாசப் பெருங் கவியை
எவரும் அவர் பெயர் கூடச் சொல்லவில்லை
மன்னவனைச் சொல்லி விட்டால் மாத்தமிழாள்
மயங்கிடுவாள் எனக் கருதி மறைத்திட்டாரோ
என்னவென்று புரிந்து கொண்ட நற்றமிழர்
எவரும் அங்கு செல்லவில்லை தமிழைப் போல