Monday, March 12, 2012

கண்ணதாசனின் திரைப் படப் பாடல்கள்

கதிர் வெடித்துப் பிழம்பு விழ
கடல் குதித்துச் சூடாற்ற
முதுமை மிகு நிலப் பிறப்பின்
முதற் பிறப்புத் தோன்றி விட
நதி வருமுன் மணல் தரு முன்
நலம் வளர்த்த தமிழணங்கே
பதி மதுரைப் பெருவெளியில்
பாண்டியர் கை பார்த்தவளே


நின்னை யான் வணங்குவதும்
நீ என்னை வாழ்த்துவதும்
அன்னை மகற்கிடையே
அழகில்லை என்பதனால்
உன்னை வளர்த்து வரும்
ஓண் புகழ் சேர் தண் புலவர்
தன்னை வணங்குகின்றேன்
தமிழ்ப் புலவர் வாழியரோ


தனைப் புகழ் தன்னிடத்தோர் சொல்லில்லாத
தமிழே என் தாயே நின் பாதம் போற்றி
நினைப்பில் எழும் அத்தனையும் வடிவம் இன்றி
நிழலாகத் தோன்றிடினும் சிறிய நெஞ்சின்
நினைப்பினுக்கு மதிப்பீந்து வாழ்த்தாய் உன்
நிழல் கண்ட நானும் உன்னை வணங்குகின்றேன்
என்று கவியரங்கங்களில் அன்னை தமிழை அழகுறப் போற்றிய கவிஞர்


திருவிளையாடல் திரைப் படத்தில் தமிழாம் தாயை உயர்த்துகின்ற் பாங்கு அவருக்கே உரியது. ஆமாம்.

வட நாட்டுப் பாடகர் ஹேமநாதனை எதிர்த்துப் பாட பாணபத்திரருக்கு பாண்டியன் உத்தரவிட பாணபத்திரர் சொக்கநாதப் பெருமான் முன்னர் நின்று இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை என்று பாடும் பாடலில் கவிஞர் தாய்க்கொரு பழி நேர்ந்தால் மகற்கில்லையோ அன்னை தமிழுக்குப் பழி நேர்ந்தால் உனக்கில்லையோ என்று ஒரு கேள்வியை முன் வைத்து எம் பெருமான் சிவனுக்கே தாய் தமிழ் என்று பெருமைப் படுத்துவார்.

அதே திரைப் படத்தில் அவ்வை தமிழ்க் கடவுள் முருகனிடம் ஆறுவது சினம் என்று சொல்லி விட்டு கூறுவது தமிழ் என்றும் சொல்லுவாள் மிகவும் உச்சமாக அந்தப் பாடலில் இறுதியில் உன் தத்துவம் தவறென்று சொல்லிட அவ்வையின் தமிழுக்கு உரிமையுண்டு என்பாள்
அவ்வையின் வாயிலாக கவிஞர் தமிழ்த்தாய்க்கு தரும் பெருமை இது

1 மறுமொழிகள்:

said...

ஆகா ஆகா! மெய்சிலிக்கிறது அய்யா! மென்மேலும் நுட்பங்களறிந்து எங்களுக்கு அளிக்க வேண்டுகிறோம்