Wednesday, November 25, 2009

துவக்கும்

மதத் தலைவர் அனைவருக்கும் எங்களது
மாபெரிய விண்ணப்பம் அய்யா அய்யா
சிதைத்திங்கு மனித குலம் அழிப்பதற்காய்
செயல்பட்டு நிற்கின்ற ஆட்சியாளர்
விதம் பலவாய் நாடு தோறும் ஆடுகின்றார்
வேதனைகள் விளைக்கின்ற அவரையெல்லாம்
பதம் செய்து திருத்துகின்ற வேலையினைப்
பாங்குடனே நீர் செய்தால் என்ன அய்யா


போதனைகள் போதனைகள் அந்தோ அந்தோ
போதுமய்யா போதுமய்யா தாங்க மாட்டோம்
வேதனைகள் வேதனைகள் தீர்ப்பதற்கே
வேண்டுமய்யா உங்களது அருளும் அன்பும்
சாதனைகள் என்பதுவே மற்றவரைச்
சரிப்பதுவும் ஒழிப்பதுவும் என்று ஆடும்
பேதைகளை மதத்தினின்று விலக்கும் பின்பு
பெரும் போரை அவர்க் கெதிராய்த் துவக்கும்

1 மறுமொழிகள்:

said...

அதனால்தான் அன்றே சொல்லிற்று கண்ணன் என்னும் கருந்தெய்வம்
உனக்கு விதிக்கப்பட்ட கருமத்தை செய்
பலனில் ஆசை வையாதே என்று
அதை உணர்ந்துகொண்ட பாரதி சொன்னான்
கண்ணன் என் சீடன்
என்னும் பாட்டில் கண்ணன் அவனுக்கு உணர்த்திய அறிவுரையான
ஒன்றை ஆக்குதல் அல்லது மாற்றுதல் உன் செயலன்று காண்
தோற்றேன் என்றபோதே நீ வென்றாய்
ஆசையும் தாபமும் அகற்றியே வாழு நீ
வாழ்கமற்றவனே என்று
எனவே சமுதாயத்தில் இருக்கும் இருள் போன்ற நிலையை எடுத்து
புலம்புவதை விடுத்து இருளை நீக்க தீபத்தை ஏற்றுவதைபோல்
நல்ல கருத்துக்களை விதைத்துக்கொண்டே செல்வோம்.
சில விதைகளாவது முளைத்து பலன் தரும்.
மற்ற விதைகள் உரிய காலம் வரும்போது
முளைத்து துளிர் விடும்
ஏனென்றால் எண்ணங்களுக்கு அழிவு என்றும் இல்லை என்பது உண்மை