Sunday, October 31, 2010

என்னை அல்ல

ஒரு நொடியில் சமஸ்தானம் அனைத்தையுமே
ஒருங்கிணைத்துத் தந்த படேல் எங்கள் வீரர்
சிறுமைகளே மனத்தில் இல்லாச் சிறந்த வீரர்
செய்கைகளால் பாரதத்தைச் சிறக்க வைத்தார்
தருகின்றார் பதவியினைக் கட்சி மேலோர்
தக்கவர்தான் பதில் தந்தார் நீங்கள் அல்ல
வறுமையிலும் நோயிலுமே வாடும் மக்கள்
வாழ்த்துவது நேருவையே என்னை அல்ல

வாழ்க இந்திரா

இந்திய முகவரி என்று சொன்னால்
என்றுமே எங்குமே அன்னையவர்
விந்தியம் இமயம் விரிகடல்கள்
வித வித மக்கள் அனைவருக்கும்
சொந்தமாய்த் தாயாய் அவர் இருந்தார்
சுட்டனர் மூடர்கள் இல்லத்துள்ளே
வந்தனை செய்வோம் அவரை இன்று
வழி தனில் செல்வோம் வாழ்க இந்திரா

Thursday, October 28, 2010

தீபாவளி

நாடெங்கும்
நரகாசுரர்
கண்ணன்
சத்யபாமாவைக்
காணவில்லை

Tuesday, October 26, 2010

மரபுக் கவிஞர்

பணத்திற்காய் யாரிடத்தும் பல்லிளித்து
பணிவது போல் நடித்து அவர் பக்கம் நின்று
குணமுடையார் யாரையுமே அருகில் சேர்க்க
கூச்சமுற்று கொள்ளையராம் துறவியர்க்காய்
நிணம் தசை நார் எதிலுமே நாணம் இன்றி
நெஞ்சழிந்து நிற்கின்றார் மரபில் வந்தோர்
பிணம் அவர் தான் என்ன செய்ய பணக்காரரின்
பின் நின்று ஏமாற்றும் கவிஞர் இவர்

Saturday, October 23, 2010

முதல்வர் வாழ்க

வடமொழிதான் தமிழுக்கு அனைத்தையுமே
வழங்கியதாய்க் கூறுகின்ற பத்மா கேட்க
அட அடடா முதல்வருமே அடிக்கல் நாட்டி
ஆரம்பம் செய்து விட்டார் வாழ்க தமிழ்
பட படத்துப் பெரியாரைப் பேசுகின்றார்
பைந்தமிழுக்கு அண்ணாவைக் கூறுகின்றார்
பரதருடன் இளங்கோவைச் சேர்ப்பதற்கு
பத்மாவின் அருளையுமே பெற்று விட்டார்

Wednesday, October 20, 2010

ரஜனி ரசிகர்கள்

உணவளிப்பேன் என்று சொன்னார் ரஜனி காந்தும்
ஊர் ஊராய் ரசிகர்கட்கு என்றே சொன்னார்
மனம் நிறைந்தார் ரசிகரெல்லாம் அளித்தார் இல்லை
மராட்டியத்தின் பால் தாக்கரே குருவென்கின்றார்
இனமானத் தமிழர்களின் தலைவர்களோ
என்றைக்கு வாய் திறந்தார் குடும்பம் காப்பார்
படம் ஒட அனைவரையும் சென்று பார்த்தார்
பாவம் அவர் ரசிகர்களோ என்ன செய்வார்

Tuesday, October 12, 2010

இளையராஜா இசையே வெல்லும்

இளையராஜா தனைக் குறையாய்ப் பேசுவோர்கள்
ஏவலர்கள் மேட்டுக் குடிக் கூட்டத்திற்கு
உழைகிறது அவர் மனது ஏழையவர்
உயர்ந்த இசை கொல்கிறது அவர்களையே
பிழை எழுதிப் பார்க்கின்றார் சில பேர் இங்கே
பேர் பெற்ற அவராலே பேர் பெறவே
களை அவரைப் பிடுங்குதலே நமது வேலை
ககனமெல்லாம் இளையராஜா இசையே வெல்லும்

நம்மோர் சில்லோர்

பொய்த் துறவிக் கூட்டத்தார் பெருகி விட்டார்
பொன்னழகுத் தமிழ்நாட்டில் என்ன செய்ய
மெய்த் தவத்தார் நாடு நந்தம் நாடு என்று
மேல் நாட்டார் வணங்குகின்றார் அவர் பணத்தை
கைத்தலத்தில் பற்றி நன்கு வாழுகின்றார்
கழிசடையாம் இத் துறவிக் கூட்டத்தாரும்
அத்துறவிக் கூட்டத்தின் அடிமைகளாய்
ஆகி பணம் சேர்க்கின்றார் நம்மோர் சில்லோர்

Sunday, October 10, 2010

மரபில் பிழை

பிழைப்பதற்காய் எதனையுமே விட்டுத் தரும்
பேதைகளே வாழ்வதுவாய் நினைக்கின்றார் காண்
குழைந்து அவர் பணம் செய்தோர் முன்னே மிகக்
குறுகி நிற்கும் காட்சியினைக் காணும் போது
தொலைந்து போகும் நல்லவரின் மனது அங்கே
துடித்து நிற்பார் பெரியவர்கள் நொந்து நொந்து
பிழையாகப் பிறந்து விட்டார் தமிழர் நாட்டில்
பெரும் பிழைதான் என்ன செய்ய மரபில் பிழை

Saturday, October 9, 2010

உணர்கின்றோம் நாம்

துறவியென்ற பெயரில் இங்கு நடித்து வாழும்
தூய்மையற்ற திருடருக்குத் துணையாய் நின்று
வரவினையே பெருக்கி உள்ளம் ஒழித்து வாழும்
வடிவத்தார் பணம் படைத்தோர் வீட்டில் எல்லாம்
கரவு மனத்தோடு ஏவல் செய்து வாழும்
கண்ணியமே அற்றாரைக் காணும் போது
இரந்து வாழும் வறியவரை விடவும்
இவர் எத்தனையோ கீழ் என்றே உணர்கின்றோம் நாம்

Friday, October 8, 2010

புரியவில்லை

வெள்ளையரின் அடிமைகளாய் இருந்தோம் என்று
வெளிச்சமிட்டுக் காட்டுதற்காய் ஒரு அமைப்பு
துள்ளி விளையாடுகின்றார் டில்லி மண்ணில்
துவக்கி வைக்க இளவரசர் வந்து சென்றார்
எண்ணுகின்றேன் எண்ணுகின்றேன் இவ்வமைப்பு
ஏதுக்காய் இருக்கின்றது கேவலமாய்
மண்ணுலகில் அடிமைகளாய் இருந்ததனை
மறக்காமல் இருப்பதற்கா புரியவில்லை

வாழுகின்றார்

சாமியார்கள் தனை வைத்துப் பிழைப்பவர்கள்
சரியாகப் பணம் சேர்த்து வாழ்கின்றனர்
யாரிடத்தும் கைகள் கட்டி வாழ்கின்றனர்
எவரிடத்துப் பணம் எனினும் வணங்குபவர்
தாமறிந்த தமிழ்த் தரத்தை இழந்து நிற்பார்
தன் குலத்துப் பெருமைகளும் துறந்து நிற்பார்
யாமறிவோம் பணம் இவரைப் படுத்துவதை
என்ன செய்ய இவரும் தான் வாழுகின்றார்

Saturday, October 2, 2010

அண்ணலே

அண்ணலே
உன் பிறந்த நாள்

சமாதியில்
பஜனை உண்டு

சிலைகளுக்கு
மாலை
அணிவிப்பவர்
சிலர்
நீ
உயிரோடிருந்தால்
உன்
அருகில் வரவே
அஞ்சியிருப்பார்கள்

உன்னை
மறந்து விட்டோம்
என்கின்றனர்

அதனால்தான்
அமைச்சர்களாய்
இருக்க முடிகின்றது

ஆட்சி
செய்ய
முடிகின்றது

உன்னை
மறைத்து
விட்டோம்
என்கின்றனர்

என்ன செய்ய
எங்களுக்கும்
மனச் சாட்சி
வந்து
விட்டால்

சாஸ்திரியும்
இதே
நாளில்
பிறந்த
கொடுமையை
என் சொல்ல

அதனால் தான்
மனம்
வெதும்பிய

கறுப்புக்
காந்தி
இன்று
மறைந்தார்