Thursday, January 29, 2009

மனிதராவீர்

கோயில் தோறும் கூடுகின்றீர் இறைவனையே
கும்பிட்டு வாழ்த்துகின்றீர் வேண்டுகின்றீர்
தாயவளைத் தெய்வம் என்று அவ்வை என்னும்
தமிழ்த் தாயார் கூறியதை மறந்தே போனீர்
ஆயாமல் அலைகின்றீர் ஆண்டவனை
அறியாமல் அலைகின்றீர் உறவை யெல்லாம்
காயாமல் அன்பு செய்தால் ஆண்டவனும்
கண்களுக்குள் கருத்துக்குள் இருப்பான் கண்டீர்


போயெங்கும் அலையாதீர் அன்பு ஒன்றே
பொதுவாகும் இறைவனுக்கு ஏதுவாகும்
சாயாதீர் மத வெறியில் மூடராகி
சதி செய்வார் தம்மிடத்தில் இரையாகாதீர்
போயெல்லா உயிரிடத்தும் அன்பு செய்வீர்
பொதுவான இறைவன் அவன் உடனிருப்பான்
தாயாகி அன்பு செய்யும் தந்தையாகித்
தன்னலமே துறந்து நின்றால் மனிதராவீர்

Monday, January 26, 2009

மாற்றித் தொலைத்ததாலே

மக்களாட்சி பெறுவதற்காய் தம்மைத் தந்த
மாபெரிய வீரர்களை வணங்கி நிற்போம்
தக்க அந்த வீரர்களின் பின்னால் சென்று
தமைத் தந்த மக்களையும் வணங்கி நிற்போம்
எக்கணமும் அவர் பெருமை போற்றி நிற்போம்
இதயத்துள் வைத்தவரை ஏற்றி நிற்போம்
செக்கிழுத்து உயிர் தந்து உறவிழந்த
சீராளர் அனைவரையும் நினைந்து நிற்போம்



மக்களாட்சி இன்றும் இங்கே நிலைத்திருக்கும்
மணம் கண்டு மனம் மிகவும் மகிழ்கின்றது
பக்கம் உள்ள நாடுகளில் இராணுவமே
பல ஆண்டாய் ஆள்கிறது கேவலம்தான்
தக்க விதம் வாழ்கின்றோம் என்ற போதும்
தலைவர்களைக் காண்கையிலே எரிகின்றது
மக்களாட்சி என்பதனைத் தங்களது
மக்களாட்சி என்று மாற்றித் தொலைத்ததாலே

சொல்வாரில்லை

மனிதர்களாய் வாழ்ந்திடவே மறந்தே போனார்
இவர்
மறந்தே போனார்
மற்றவரை ஏய்ப்பதிலே சிறந்தே போனார்
இவர்
சிறந்தே போனார்
கனிவாகப் பேசுவதில் பெரிதே ஆனார்
இவர்
பெரிதே ஆனார்
களவு செய்து வாழ்வதிலே தலைவர் ஆனார்
இவர்
தலைவர் ஆனார்
வனிதையரைக் கண்டு விட்டால் சிறியர் ஆனார்
இவர்
சிறியர் ஆனார்
வாழ்ந்திருக்கும் போதே இவர் இறந்தும் போனார்
ஆம் ஆம்
இறந்தே போனார்


தொடர்ந்து கெட்ட தவறுகளைச் செய்தே நின்றார்
இவர்
செய்தே நின்றார்
தொய்வு இன்றி ஊழல்களை காத்தே நின்றார்
இவர்
காத்தே நின்றார்
உணர்ந்து திருந்த என்றும் எங்கும் முயன்றாரில்லை
இவர்
முயன்றா ரில்லை
உண்மை தன்னை என்றும் எங்கும் தெரிந்தாரில்லை
இவர்
தெரிந்தாரில்லை
தினந் தினமும் தவறுகளே தீயார் எல்லை
இந்தத்
தீயார் எல்லை
தேசமெங்கும் தெரிந்திருந்தும் சொல்வாரில்லை
இங்கு
சொல்வாரில்லை

Thursday, January 22, 2009

பொங்கல் விழாவில் கலை நிகழ்ச்சிகளில் பங்கு கொண்ட குழந்தைகளுக்கு அய்யா சலாவுதீன் அவர்களும் தமிழ்க்கடல் அய்யா அவர்களும் பரிசளித்து மகிழ்கின்றார்கள்

அமீரகத்தின் தமிழர்களின் தலைவர் அய்யா சலாவுதீன் அவர்களோடு தமிழ்க்கடல்

அய்யா சலாவுதீன் அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்படுகின்றது

துபாய் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தமிழ்ச் சங்கப் பொங்கல் விழாவில் சலாவுதீன் அய்யா அவர்களுக்கு தமிழ்க்கடல் பொன்னாடை போர்த்தி மகிழ்கின்றார்

Wednesday, January 21, 2009

அழிவார் பாரும்

நல்ல வேளை தந்தையவர் குறளைத் தந்தார்
நலமாக வாழுகின்றேன் அச்சமின்றி
பல் விதத்தில் இடையூறு ஆசைத் தொல்லை
பணம் மட்டும் வாழ்க்கையென்னும் உறவுக் கூட்டம்
சொல்லுகின்ற சொற்களிலே நேர்மையில்லை
சூதான தலைவரிடம் உண்மையில்லை
அள்ளுகின்றார் கோடிகளை ஏழை தம்மின்
அடிமனத்துக் கோபங்கள் கண்டாரில்லை


வள்ளுவரை மேடை தோறும் பேசுகின்றார்
வாய் திறந்தால் அவர் குறளே கூறுகின்றார்
அள்ளி அள்ளிச் சேர்க்கின்றார் கோடிகளை
அழுது நிற்கும் ஏழைகளைக் கருத மாட்டார்
சொல்லி நின்றார் வள்ளுவரும் அவர் தம் கண்ணீர்
சோதியெனக் கோடிகளை அழிக்கும் என்று
உள்ளுவரோ தவறானார் மாட்டார் மாட்டார்
ஒழிந்தழிவார் ஒழிந்தழிவார் அழிவார் பாரும்

வாழ்க நீவிர்

வாழ்க நீவிர்

வாலி எனும் சிவபக்தன் பெயரைக் கொண்ட
வைஷ்ணவரே ஸ்ரீரெங்கப் பேரழகே
ஆலிலையின் கண்ணனவன் பெயரைக் கொண்ட
அழகு நெல்லைச் சைவன் நான் என்னை நீங்கள்
தேடுகின்றீர் என்று பழனி பாரதியும்
சேதி சொல்ல தேடி வந்தேன் உம்மை நானும்
கூடி என்னை அரவணைத்தீர் அன்பு செய்தீர்
குலத்தமிழால் மணித் தமிழால் மகிழ்ந்தே நின்றோம்



கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்ற
கன்னித் தமிழ் சொல்லதனை உண்மையாக்கி
உற்றார் நாம் என்பதனை உணர்த்தி நின்றீர்
உணர்ந்திருவர் உளம் கலந்தோம் மன மகிழ்ந்தோம்
பெற்றாளே நமையெல்லாம் தமிழாம் தாயும்
பேணி அவள் பெருமை தனை உயர்த்த வென்று
உற்றவரே உணர்ந்தேன் நான் அன்பால் இந்த
உலகமதைப் பேணிடுவோம் வாழ்க நீவிர்

துபாய்ச் சாலைகள் 15-01-09

துபாய்ச் சாலை15-01-09

வாழ்த்துகின்றென்

திரைப்படத்தில் கவியரசர் கண்ணதாசன்
தேர்ந்தெடுத்துத் தந்திட்ட பாடலெல்லாம்
வகைப் படுத்தித் தொகைப் படுத்தி உரையும் கண்டு
வண்டமிழின் காவிரி மைந்தன் அவர்
உரைப் படமாய்த் தந்துள்ளார் உவகை கொண்டு
உளமார அவரை நான் வாழ்த்துகின்றேன்
நிறைகுடமாம் கவியரசர் தன்னை என்றும்
நெஞ்சுக்குள் வைத்தாரை வாழ்த்துகின்றேன்

தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன்
21-01-09 மதியம் 12-10

Tuesday, January 20, 2009

அமீரகத்தின் அமிழ்தானார் சலாவுதீனார்

அமீரகத்தின் அமிழ்து சலாவுதீனார்


கோடிகளை இறைவன் அவன் அள்ளித் தந்தும்
குணம் மாறி வாழாத அன்பின் ஊற்று
நாடி வரும் அனைவருக்கும் உதவி செய்யும்
நல் மனத்துப் பெரு மனிதர் சலாவுதீனார்
வாடி நிற்கும் தமிழருக்கு மழையேயான
வள்ளலவர் தனைக் காணும் வாய்ப்பதனை
நாடி என்றும் தொழுது நிற்கும் இறைவன் தந்தான்
நற் கருணை ஆண்டவர்க்கு நன்றி சொன்னேன்



தமிழின் மேல் கொண்டிருக்கும் பற்றைக் கண்டேன்
தாயின் மேல் கொண்டிருக்கும் பாசம் கண்டேன்
அமிழ்தான தமிழ் மொழியின் வள்ளுவரை
அறிந்ததனில் உரையாடும் பாங்கு கண்டேன்
தமிழ் பற்றிப் பேசி நின்றால் முகம் மலர்ந்து
தனை மறந்து நிற்கின்ற பெருமை கண்டேன்
அமிழ்தானார் அமீரகத்தில் சலாவுதீனார்
அவர் தந்த உணவு உண்டும் அன்பனானேன்


எளிமையிலும் எளிமை அவர் சொற்களெல்லாம்
இனிமையிலும் இனிமை வரவேற்கும் நேரம்
கனிவினிலும் கனிவு உரையாடும் போதோ
கண்ணியத்தின் மறு உருவம் விருந்தோம்பி நின்றால்
இனிய நல்ல தாயினைப் போல் அன்பு காட்டல்
இறைவனின் மேல் கொண்டிருக்கும் உண்மைப் பற்று
தனியொருவராக நின்று பலரைக் காக்கும்
சலாவுதீனார் இறையருளால் என்றும் வாழ்க



தமிழ்க்கடல் நெல்லைக் கண்ணன்
திருநெல்வேலி நகரம்
மாலை 06-25

Thursday, January 15, 2009

மகளிர் கல்லூரிச் சுவைஞர்கள்

மகளிர் கல்லூரிச் சுவைஞர்கள்

மகளிர் கல்லூரியில் சுவைஞர்கள்

வி.பி.எம்.எம்.மகளிர் கல்லூரி கிருஷ்ணன் கோயில் பாவை விழா

சாளரம் விழாவில் சுவைஞர்கள்

தினமணிஆசிரியர் திரு வைத்தியநாதன் அவர்களின் நூல் சாளரம் அறிமுக விழாவில் தமிழ்க்கடல் உரை நிகழ்த்துகின்றார்.

வாலி என்னும் கண்ணியத்தார்

கடலே என் றரவணைத்தார் வாலி என்னும்
கண்ணியத்தார் உடை போன்ற உள்ளம் கொண்டார்
தடம் மாறிப் போகின்ற தமிழினத்தை
தமிழ்ப் பேச்சால் உணர வைத்து திருத்துகின்றீர்
புடம் போட்டு புடம் போட்டுத் தமிழர் தம்மின்
பொன்னான இலக்கியங்கள் போற்றுகின்றீர்
இடம் போட்டு என்னுளத்தில் உம்மை வைத்தேன்
ஏற்றி உம்மைப் போற்றுகின்றேன் வாழ்க என்றார்

கவிஞர் வாலி அவர்களின் அன்புப்பிடியில் அருகில் அன்புப் பிள்ளை பழனிபாரதி

கைக் கொள்ளுங்கள்

இறைவனையே நம்புகின்ற இவர்களுக்குள்
எதற்காகச் சண்டை என்று புரியவில்லை
உறைகின்றான் இறைவன் அவன் எங்கும் என்று
உரைக்கின்றார் எதற்காக மோதுகின்றார்
அறியாமை அறியாமை அதனாலன்றோ
அங்கங்கே குத்துகின்றார் வெட்டுகின்றார்
செறிவான அறிவோடு கடவுளினைச்
சேர்வதற்கு விழைந்து நிற்பார் அமைதி காப்பார்


நம்பிக்கை உடையவர்கள் எல்லாம் ஒன்றாய்
நலம் பேணி வாழ்வதுதான் நல்ல வாழ்க்கை
கும்பிட்டு நிற்கின்றீர் இறைவன்தன்னை
குறையெல்லாம் விட்டு விட்டு நின்றாலன்றி
தம்மருளைத் தருவதற்கு இறைவன் என்ன
தனையறியாப் பேதை என்றா கருதுகின்றீர்
எம்மதமும் இறைவனையே ஏத்துகையில்
எதற்காக மோதுகின்றீர் பக்தி செய்வீர்


வேறு வேறுபெயர்களிலே இறைவன் தன்னை
விளங்கி நிற்பீர் வணங்கி நிற்பீர் பெருமை கொள்வீர்
ஊறு இல்லா வாழ்க்கை என்றால் அவனை நன்கு
உணர்ந்தறிந்து அன்பு செய்தல் ஒன்றே ஆகும்
பேறு அதைப் பெற்று விட்டால் சண்டை ஏது?
பிரிவினைகள் பேதங்கள் வருமோ நூறு
ஆறுதலைத் தாருங்கள் இறைவன் தந்த
அன்பதனை அமைதியினை கைக் கொள்ளுங்கள்

Wednesday, January 14, 2009

வாழ்த்தி நின்றேன்

ஞாயி றில்லை யெனில் இங்கே எதுவும் இல்லை
நன்குணர்ந்த தமிழினத்தார் நன்றி சொல்ல
ஆய்ந் தறிந்த நன்னாளே தைத் திருநாள்
அதுவேதான் தமிழர்களின் புதிய ஆண்டு
வாயின்றி வாழ்ந்தாலும் உயிர்க் குலத்தின்
வயிற்றுக்குச் சோறிடும் மாட்டுக் கூட்டம்
போய் அதற்கும் நன்றி சொல்லும் புதிய ஆண்டு
பொங்கலிது தமிழ்ப் பெருமை பொங்கும் பொங்கல்



நன்றி சொல்லல் உயிர்க் குலத்தின் உயர்ந்த மாண்பு
நற்றமிழர் அதை அறிந்தார் அதனால் இங்கே
அன்றிருந்து உயிர்க் குலத்தை வாழ வைக்கும்
அனைத்துக்கும் அடிப்படையாய் விளங்குமந்த
விண்ணகத்தின் பேரொளியை கதிரைப் போற்ற
விருப்பமுடன் கண்டெடுத்த நல்ல நாளே
மண் மணக்கும் தமிழர்கள் தம் பொங்கல் நன்னாள்
மனம் நிறைந்து அனைவரையும் வாழ்த்தி நின்றேன்

Tuesday, January 6, 2009

தமிழாம் நம் தாயாம் தெய்வம்

வள்ளுவரை உள்ளத்தில் கொண்டிருந்தால்
வருவதில்லை தவறு செய்யும் எண்ணம் என்றும்
உள்ளுதோறும் உள்ளுதோறும் நல்லனவே
உள்ளத்தின் கொள்ளளவை நிறைத்திருக்கும்
தெள்ளு தமிழ் அன்னையவள் தவமிருந்தே
திருவான வள்ளுவரைப் பெற்றெடுத்தாள்
கள்ளமில்லா அவர் வழியில் நிமிர்ந்து சென்றால்
கனித் தமிழர் வாழ்வு என்றும் வெற்றி கொள்ளும்


அவ்வையவள் காட்டுகின்ற அன்பு வழி
அதை உணர்ந்து தமிழர்களே வாழ்ந்தீர் என்றால்
செம்மாந்து வாழ்ந்திடலாம் உலகம் எங்கும்
சீராகப் புகழ் பெற்று உயர்ந்திடலாம்
எவ்விதத்தும் எங்கேயும் தமிழர் மட்டும்
இனியவர்கள் என்ற பெயர் சேர்த்திடலாம்
செவ்வியராய் வாழ்ந்திடுவீர் செந்தமிழீர்
சிறப்பாக வையத்தின் தலைமை ஏற்பீர்


நாலடியார் காட்டுகின்ற நல் வழிகள்
நானிலத்தை வெல்லுகின்ற வழிகள் கண்டீர்
பால்மனத்தைக் கொண்டவராய் உலகம் தன்னில்
பண்பு நலம் காத்து வென்று உயரச் செய்யும்
சூல் கொண்டு பெற்றெடுத்த குழவியெல்லாம்
சுத்தமாக மனித இனம் வாழச் செய்யும்
மேல் மக்களாகவே தான் பெற்றெடுத்தாள்
மேதினியில் தமிழாம் நம் தாயாம் தெய்வம்

Monday, January 5, 2009

பெரியவர் சிலம்பொலியார் அவர்கள் கிராம இல்லத்தில் அவர்க்ளோடு தமிழ்க்கடல்

தமிழ்க்கடல் அய்யா அவர்களின் உரை நிறைவில் மாணவச் செல்வங்கள் எழுந்து நின்று கரவொலி செய்கின்றனர்

மாணவர்கள் இன்னொரு பகுதி

மாணவர்களின் இன்னொரு பகுதி

மாணவியரில் ஒரு பகுதி

பாரதிமேல்நிலைப்பள்ளி மாணவர்கள்

பாரதிமேல்நிலைப்பள்ளி மாணவியரும் மாணவர்களும்

பள்ளி முதல்வரும் பள்ளி நிறுவனர் கருப்பக் கவுண்டர் மகளுமான திருமதி சாரதாமணி இராமசாமி அவர்கள் அய்ய அவர்களை வரவேற்று உரை நிகழ்த்துகின்றார்

நாமக்கல் ரெட்டியபட்டி பாரதி மேல்நிலைப் பள்ளித் தாளாளர் முனைவர் இராமசாமி அவர்கள் தமிழ்க்கடல் அய்யா அவர்களுக்குப் பொன்னாடை போர்த்துகின்றார்

Saturday, January 3, 2009

சிரித்திங்கு மகிழுகின்றார்

பொய்யான புகழுரைப் போலியாய் விருதுகள்
பொறுப்பற்றோர் வழங்குகின்றார்
பொறுப்பினில் இருப்பவர் பொறுப்பின்றி அதை ஏற்றுப்
புழு மனம் காட்டுகின்றார்
மெய்யான அறிஞர்கள் கவிஞர்கள் புலவோர்கள்
மேனிலை எய்துகின்றார்
மேன் மக்கள் என்பதே விருதுகள் ஏற்காத
மெய்ம்மை என்றுணர்த்துகின் றார்



அய்யகோ அய்யகோ அய்யகோ இவர்களை
அறிந்துமே வணங்குகின்றார்
அடிமைகள் போல் மிக மிகக் குனிந்தே இவர்
அகங்காரம் போற்றுகின்றார்
செய்யாத செயல்களில் சிறப்பானோர் இவர் என்று
சீரற்றுப் போற்றுகின்றார்
சீரற்ற இவர்களோ கேவலம் இன்றியே
சிரித்திங்கு மகிழுகின்றார்

வள்ளுவரும் காந்தியடிகளும்

அன்பின் வழியது உயிர் நிலை என்று
அன்றே சொன்னார் வள்ளுவரும்
அன்பே வழியாய் உலகை வென்றார்
அண்ணல் காந்தி அடிகளுமே


இன்சொல்லோடு இன்முகம் ஒன்றே
ஏற்றம் என்றார் வள்ளுவரும்
தன் வாழ்வெல்லாம் அதையே கொண்டு
தாயகம் வென்றார் காந்திமகான்


வாய்மை ஒன்றே உலகம் வெல்லும்
வழியென்ற் றுரைத்தார் வள்ளுவரும்
தாய் போல் அதனைத் தலை மேல் ஏற்று
தவமாய்க் கொண்டார் காந்தி மகான்


கள்ளையுண்ணும் கொடுமை கண்டு
கடிந்தே நின்றார் வள்ளுவரும்
கள்ளை எதிர்த்துப் போரே செய்து
கண்ணியம் காத்தார் காந்தி மகான்

Friday, January 2, 2009

சேலம் அம்மாப்பேட்டை மார்கழிப் பெருவிழா

சேலம் அம்மாப்பேட்டை மார்கழிப் பெருவிழா முதல் நாள் தமிழும் தனிப் பாடல்களும் என்ற பொருளில் தமிழ்க்கடல் அவர்களின் பேரூரை

சேலம் மார்கழிப் பெருவிழாஅம்மாப்பேட்டை சிலம்பொலியார் அவர்களோடு தமிழ்க்கடல் அய்யா அவர்கள்

மார்கழிப் பெருவிழாப் பெரியவர் ஏ.கே.பழநியப்பன் அறிமுக உரை சிலம்பொலியாரோடு தமிழ்க்கடல் சேலம் அம்மாப்பேட்டை

மார்கழிப் பெருவிழா சுவைஞர்களின் மற்றொரு பகுதி

மார்கழிப் பெருவிழாச் சுவைஞர்களின் ஒரு பகுதி சேலம் அம்மாப்பேட்டை

மார்கழிப் பெருவிழாச் சுவைஞர்கள் சேலம் அம்மாப்பேட்டை

மார்கழிப் பெருவிழாச் சுவைஞர்கள் சேலம் அம்மாப்பேட்டை

நினைவுப் பரிசு வழங்கப் படுகின்றது மர்கழிப் பெருவிழா சேலம் அம்மாப் பேட்டை

மலேசியத்தம்பி தங்கவேல் சிலம்பொலி செல்லப்பனார் சேலம் மார்கழிப்பெரு விழா

அவரைச் சொல்வார்

வள்ளுவர்க்குச் சிலையுண்டுக் கோட்டமுண்டு
வாய் திறந்தால் அவன் குறளே வருவதுண்டு
தெள்ளு தமிழ்த் தாயவளும் பெற்றெடுத்த
திசையனைத்தும் வென்றெடுத்த இசையின் மகன்
உள்ளு தொறும் உள்ளு தொறும் நமது நெஞ்சம்
உணர்த்தும் அவன் வழியொன்றே சிறந்ததென்று
எள்ளி நகையாடுகின்ற வாழ்க்கை ஒன்றை
எப்படித்தான் வாழுகின்றோம் மானமின்றி



உயிர் வாழ்க்கை என்பதுவே அன்பு கொண்டு
உலகத்து உயிரையெல்லாம் வாழ வைத்தல்
அயர்வின்றி அடுத்தவர்க்கு அன்பு செய்தல்
அடுத்தவரின் துன்பமதைத் தீர்த்து வைத்தல்
உயர்வான அவ்வாழ்க்கை வாழ்பவரே
உயிரோடு வாழ்வதற்குத் தகுதி கொண்டார்
பிறர் இங்கு உயிரோடு இருந்த போதும்
பிணவறையில் சவமென்றே குறளில் சொன்னார்


சவமாக வாழுகின்றோம் பணத்திற்காக
சதிச் செயல்கள் செய்கின்றோம் உறவுக்காக
அவமானம் கொள்வதில்லை அதனை விட்டு
அரியணையைக் காப்பதற்காய் நாசம் செய்வோம்
குல மானம் இனமானம் என்று பல
கூப்பாடு போடுகின்றோம் உண்மையின்றி
சிலையாகும் முன்னாலே கல்லாய் வாழ்ந்து
சிரிப்பாகச் சிரிப்பதற்காய் வாழுகின்றோம்


அரசியலென் றோர் களம் மக்களுக்காய்
அறிவுடையார் தனை அளிப்பார் பேணும் களம்
வரம் பெற்ற நல்லவர்கள் மக்களுக்காய்
வகை வகையாய் நல்லதுவே செய்யும் களம்
உரம் பெற்ற உயர்ந்தவர்கள் காணும் களம்
உண்மையதைச் சொத்தாகக் கொண்டார் களம்
தரமின்றிப் போனதிங்கு தரமேயில்லார்
தலைவர்களாய்ப் பெரியவர்களாய் ஆனதினால்


நல்லதையே நாடுபவர் கேடு கண்டால்
நாணமுற்று அதைக் கண்டு ஒதுங்குபவர்
வல்லமையே நேர்மையென்று போற்றுபவர்
வாய்மையொன்றே மனம் கொண்டு ஏத்துபவர்
அன்னவர்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்திருந்தார்
அன்புடைய மக்களிடம் இன்றும் வாழ்வார்
தென்னாட்டில் காமராசர் கக்கன் என்றும்
தெள்ளு தமிழ் ஜீவா என்றும் அவரைச் சொல்வார்

Thursday, January 1, 2009

வெட்கமில்லை

திருப்பதியில் பெருங் கூட்டம் இன்று ஆனால்
தெலுங்கர்களின் ஆண்டு இன்று பிறக்கவில்லை
அறுபடையில் தமிழர்களின் கூட்டம் இன்று
அன்னை தமிழ்ப் புத்தாண்டு இன்று இல்லை
குருத்வாரா நிறைகிறது ஆனால் இன்று
கொஞ்சும் பஞ்சாபி ஆண்டு பிறக்கவில்லை
செறுத் தொழிலின் மாராட்டியர்கள் கோயில்களில்
சீரான அவர் ஆண்டும் பிறக்கவில்லை


செழிப்பான கேரளத்தார் கோயில்களில்
சிறப்பான அவர் ஆண்டும் பிறக்கவில்லை
கொழிக்கின்ற குஜராத்தார் கோயில்களில்
குஜராத்தி ஆண்டும் இன்று பிறக்கவில்லை
மொழிக் காதல் கொண்டிவர்க்குள் சண்டை என்றும்
மூத்த மொழி ஏது என்று இன்றும் எங்கும்
வழியுணர்ந்தார் இல்லை இவர் இன்றும் இங்கு
வணங்குகின்றார் ஆங்கிலத்தை வெட்கமில்லை