Wednesday, January 21, 2009

வாழ்க நீவிர்

வாழ்க நீவிர்

வாலி எனும் சிவபக்தன் பெயரைக் கொண்ட
வைஷ்ணவரே ஸ்ரீரெங்கப் பேரழகே
ஆலிலையின் கண்ணனவன் பெயரைக் கொண்ட
அழகு நெல்லைச் சைவன் நான் என்னை நீங்கள்
தேடுகின்றீர் என்று பழனி பாரதியும்
சேதி சொல்ல தேடி வந்தேன் உம்மை நானும்
கூடி என்னை அரவணைத்தீர் அன்பு செய்தீர்
குலத்தமிழால் மணித் தமிழால் மகிழ்ந்தே நின்றோம்



கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்ற
கன்னித் தமிழ் சொல்லதனை உண்மையாக்கி
உற்றார் நாம் என்பதனை உணர்த்தி நின்றீர்
உணர்ந்திருவர் உளம் கலந்தோம் மன மகிழ்ந்தோம்
பெற்றாளே நமையெல்லாம் தமிழாம் தாயும்
பேணி அவள் பெருமை தனை உயர்த்த வென்று
உற்றவரே உணர்ந்தேன் நான் அன்பால் இந்த
உலகமதைப் பேணிடுவோம் வாழ்க நீவிர்

0 மறுமொழிகள்: