பதவிகளைக் கைப் பற்றல் என்ற வேட்கை
பணம் சேர்த்தல் கோடிகளில் என்ற ஆசை
உதவுவது ஏழையர்க்கு என்ற எண்ணம்
ஒரு சிறிதும் இல்லாத கோழைகளே
பதவிகளில் அமருகின்றார் அமர்ந்து கொண்டு
பல்லிளித்து அதைத் தக்க வைத்துக் கொள்வதற்காய்
உதவுகின்றாற் போல் நடித்து ஏழையரை
ஊர் ஊராய் ஏய்க்கின்றார் வெட்கமின்றி
பள்ளிகளில் பணம் இன்றி இடங்கள் இல்லை
படிக்கின்ற ஏழையர்க்கு உதவல் இல்லை
கள்ள மனம் கொண்டோராய் தம் குழந்தை
கற்பதற்கு வெளி நாடு அனுப்புகின்றார்
உள்ளவர்கள் வாழ்வதற்கே உதவுகின்றார்
உரிமையற்று ஏழைகளோ கலங்குகின்றார்
நல்லவர் போல் இலவசங்கள் தந்து அந்த
நாதியற்றோர் தனை மேலும் ஒழிக்கின்றாரே
அரசியலார் பிள்ளைகளை படிப்பதற்கு
அரசாங்கப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும்
அதுதானே நியாயம் அதை மக்களும் தான்
அதிரடியாய்ப் போராடி உணர்த்த வேண்டும்
பொது வாழ்வு என்பதுவே மக்களோடு
பொழுதெல்லாம் இருப்பதுவும் உழைப்பதுவும்
இது வெல்லாம் போராடிப் பெறுதல் வேண்டும்
இணங்காதார் தமை வீழ்த்த தேர்தல் போதும்
Monday, May 3, 2010
தேர்தல் போதும்
Subscribe to:
Post Comments (Atom)
2 மறுமொழிகள்:
மிக சிறந்த கவிதை இக்காலத்திற்கு...
'நல்லவர் போல் இலவசங்கள் தந்து அந்த நாதியற்றோர் தனை மேலும் ஒழிக்கின்றாரே"
ஏனோ, இலவசங்களைப் பெறவும் வாக்களிக்கும் நம் சமூகம்.
தேர்தல் என்பது முதல்போட்டு செய்யும் தொழில்...
Post a Comment