Sunday, June 28, 2009

ஆண்டவனும் அதில் ஒருவர்

வெள்ளை நிறத்தோலுக்காய் வினை தேடிக் கொண்டானோ
வெற்றிகளும் பணமதுவும் வீழ்த்துதற்கு முனைந்தனவோ
கள்ளமில்லா துள்ளிசையில் ககனத்தை வென்றவனை
கால மகன் வென்றிடவே கணக்கெழுதி முடித்தானோ
வெள்ளையில்லை கறுப்புமில்லை அனைவரையும் வென்றவனை
விரி இசையும் நடனமதும் ஒருங்கிணைத்துக் கொண்டவனை
உள்ளமெல்லாம் கொண்டழுவார் உலகத்தில் பல கோடி
உணராமல் இருப்பாரா ஆண்டவனும் அதில் ஒருவர்

Friday, June 26, 2009

கரிய செல்வம் மைக்கேல் ஜாக்சன்

இறந்து விட்டான் என்கின்றார் அவனை நாம்தான்
இழந்து விட்டோம் என்பதனை மறந்தவராய்
பரந்து பட்ட உலகமெங்கும் பாப் இசையால்
பட படக்க வைத்தவனை ஜாக்சன் தன்னை
மறைந்து விட்டான் என்கின்றார் அய்யோ அய்யோ
மனங்களுக்குள் நிறைந்தவனா மறைவான் இல்லை
நிறைந்திருப்பான் உலகமெங்கும் கோடி கோடி
நெஞ்சத்தில் மைக்கேலாம் கரிய செல்வம்

Tuesday, June 23, 2009

இளைஞர் இனம்

பணம் மட்டும் வாழ்க்கையென்று பகட்டுக் காட்டும்
பண்பற்ற மனிதர்கள் தம் வாழ்க்கை கண்டு
குணம் விட்டுப் பணம் தேட முயலுகின்றார்
குறை மனிதர் கைதாகி அலறுகின்றார்
பிணம் போலப் பெரும் பணத்தைச் சேர்த்து நின்றார்
பெரும் பதவி தனில் அமர்ந்து புளுகுகின்றார்
இனம் காக்க நாடு காக்க வாழ்ந்த காந்தி
ஏழை காமராஜர் கக்கன் காணவில்லை


இரு வேட்டி மட்டும் உடையென்று வாழ்ந்த
இந்தியத்துப் பேரருளாம் காந்தி மகான்
மறு வேட்டி இல்லாமல் வாழ்ந்திருந்த
மாபெரிய தோழர் எங்கள் ஜீவானந்தம்
கருவுற்றுப் பெற்றெடுத்த தாய்க்காய்க் கூட
கண்ணியத்தை இழக்காத காமராஜர்
திருவுற்ற இந்த நாட்டில் வாழ்ந்தார் என்றே
தெரியாமல் இருக்கிறதே இளைஞர் இனம்

Monday, June 22, 2009

பெண்ணுரிமைப் பொய்

பெண்களுக்கு எப்பொழுதும் எங்கும் துன்பம்
பேசுவதோ மேடை தோறும் பெண்ணுரிமை
கண்கள் எங்கள் பெண்கள் என்று கதைத்து நிற்றல்
கவிதைகளில் காவியத்தில் பெண் பெருமை
புண்கள் இந்தப் புண்கள் புரையோடிப் போக
பொய்யெல்லாம் மெய் போல ஆடி நிற்க
தங்கள் தாயவளோ முதியோர் இல்லத்தில்
தாரமதோ நீதி மன்றில் மண முறிவிற்கு

Sunday, June 21, 2009

உயர்வீர் நீரே

வென்று விட்டார் என்றாலே வாழ்த்துவது
வீழ்ந்து விட்டார் என்றாலே தூற்றுவது
தொன்று தொட்டு நம் நாட்டார் தோல்வியிது
தொட்டில் பழக்கம் அது தொடருதிங்கு
நின்றெதையும் சிந்தித்து உணர்ந்து பின்னர்
நிலை தெளிந்து பேசுதலே உண்மையாகும்
என்றுணர்வீர் அன்றேதான் இந்த நாட்டின்
நிலையுயரும் உணர்ந்திங்கு உயர்வீர் நீரே

குமுறுகின்றார்

வென்று விட்டார் என்றவுடன் ஊர்வலங்கள்
வீதியெங்கும் தோரணங்கள் மக்கள் வெள்ளம்
கொன்று விட்டார் என்றெல்லாம் கூப்பாடுகள்
கோடிகளை அவர்க்களித்துக் கொண்டாட்டங்கள்
நின்றபடி வந்தவரை வாழ்த்தி வாழ்த்தி
நிலை குலைந்து நின்றன்று ஆடியவர்தான்
கொன்றிடுவோம் கேவலம் இத் தோனிதன்னின்
கூட்டத்தை என்றெல்லாம் குமுறுகின்றார்

Saturday, June 20, 2009

ஆடு ஆடு

ஒம் பலிக்காய்ப் பல பேரு இங்கே இன்னும்
உயிரோட பிணமாத்தான் வாழ்ந்திருக்கார்
தன் பெண்டு தன் பிள்ளை என்றே வாழ்ந்து
தவித்திருக்கும் ஏழையரை ஏச்சே வாழ்ந்தார்
கண் பார்க்க வேண்டாம் சுடுகாடு விட்டு
காடான நாட்டுக்குள் வந்து ஆடு
புண்ணான மனிதரையே பொசுக்கி ஆடு
பொங்க வைக்கோம் சொடலமாடா ஆடு ஆடு

வர மாட்டியா?

கோடிக்கு மேல் சொத்து உள்ளோரெல்லாம்
கூட்டாக நாடாளுமன்றம் சேர்ந்தார்
ஆடிக்குக் கழிவினிலே துணி எடுக்கும்
அப்பாவி மக்கள் எல்லாம் வாக்குத் தந்தார்
வாடிக்கையாக தந்த வாய்ச் சொல்லெல்லாம்
வறுமையிலே ஏழைக்கு மறந்தே போகும்
ஆடி ஆடி இவங்களையே கேள்வி கேக்க
அய்யா ஏஞ் சொடல மாடா வர மாட்டியா?

கேக்கப் போற

கையூட்டுப் பெற்றதற்காய் சின்னச் சின்னக்
காவலர்கள் பணியாட்கள் பலரை இங்கு
மெய்யாகக் கைது செய்து மிக விரைவாய்
மேலான நடவடிக்கை எல்லாம் கொள்வார்
அய்யாயிரம் கோடி கோடி கோடி
அடித்தவர்கள் வீட்டிற்கோ காவல் செய்வார்
எய்யா ஏஞ் சொடலமாடா வர மாட்டியா?
எப்ப வந்து இவங்களைத்தான் கேக்கப் போற?

Thursday, June 18, 2009

கம்பனின் வாலி பதில் இன்றும் இல்லை

மறைந்திருந்து அம்பு விட்ட மன்னவனை
மனத்திற்குள் தெய்வமெனப் போற்றி வாழும்
நிறைந்திருக்கும் நல் மனத்தான் வாலி தானும்
நேர் படவே கேட்கின்றான் கேள்வி ஒன்றை
மறைவாக உன் மனையாள் தன்னை தூக்கி
மனத்துள்ளே சிறை வைத்த அரக்கன் விட்டு
குறையில்லா ஆட்சி கொண்ட குரங்கு என்னை
கொல்வதற்கு முயன்றுள்ளாய் என்ன நியாயம்


இரக்கமே உனை நம்பி வாழ நீ அந்த
இரக்கத்தைக் கை விட்டாய் மிகச் சிறந்த
தரமான புகழையும் நீ விட்டு விட்டாய்
தனியாகிப் போனாயே என்தலைவா
உறக்கத்தில் கூட ஒரு தவறு செய்ய என்றும்
உன்னாதாய் மனு நெறியில் இவ்வாறெல்லாம்
கிறுக்காகத் தீர்ப்பளிக்க வழியுளதோ?
கேட்கின்றான் வாலி பதில் இன்றும் இல்லை

Wednesday, June 17, 2009

வணங்கி நிற்போம்

ஊடலிலே தோற்றவர்கள் வென்றார் என்று
உலக மறை வள்ளுவனார் சொல்லி நின்றார்
தேர்தலிலே தோற்றவரும் வென்றார் எங்கள்
தேசத்தில் பெரும் பொறுப்பில் இருக்கின்றாரே
பாட நூலில் வள்ளுவரைப் படித்தவர்தான்
பல முறையும் அவையினிலே சொன்னவர்தான்
நாடவில்லை நாணத்தை அதனால் தானே
நாணமின்றிப் பெரும் பதவி தன்னை ஏற்றார்


ஊடகங்கள் அவர் குறித்துப் பேசவில்லை
உயர்மனிதர் யாரும் வாய் திறக்கவில்லை
நாடகங்கள் நடத்துகின்றார் நாடு முற்றும்
நாணயத்தால்(பணத்தால்) வெல்லுகின்றுகின்றார் நாணமின்றி
கேடு கெட்ட மனிதர் இவர் வழிகள் சொல்வார்
கேட்டு நன்கு மகிழ்ந்திடுக இந்தியத்தார்
சூடு என்றால் சொரணை என்றால் ஏழை மக்கள்
சொத்தாக்கி வாழுகின்றார் வணங்கி நிற்போம்

Tuesday, June 16, 2009

பழம் பாடல் புதுக் கவிதை கம்பன் வாலியின் வினாக்கள்

வாலியின் முன் நிற்கின்ற இராமனிடம்
வகை தொகையாய்க் கேள்விகளை வைத்தான் வாலி
மாலவனா இச் செயல்கள் செய்தான் என்று
மனத்துக்குள் மறுகி நொந்து கேட்டான் வாலி
தூயவனே அஞ்சு வகைக் கொடுமைகளில்
துடிக்கின்ற முதற் கொடுமை கொலைதான் அதை
மாயவனே நீ செய்து முன்னே வந்தாய்
மயக்கமது துணைவியினை இழந்ததாலோ

காய்கின்றாய் இராவணனை அவனோ அந்தக்
கடைக்கோடிக் கொடுமையதாம் காமம் கொண்டான்
ஆய்வு செய்தால் உன் குற்றம் முதற் குற்றமாம்
அறிந்தாயா மன்னவனே மானை விட்டு
சேயிழையை கவர்ந்து சென்றான் சிறை எடுத்தான்
சிறப்பாக தம்பியினை முன்னே விட்டு
நீ யெந்தன் உயிரினையே கவருகின்றாய்
நினைத்தாயா? இரண்டுமிங்கு ஒன்றுதானே


நாளை இந்த உலகத்தில் வீரரென்போர்
நடத்துவது நியாயம் என்று உலகோர் சொல்ல
வாளழகா நீ இந்த வழியைத் தந்தாய்
வழியின்றி நிற்குது இங்கே நேர்மை எல்லாம்
ஆழமாக வைக்கின்றான் வினாக்களையே
அதையேதான் இன்று இந்த உலகமெங்கும்
வாழையடி வாழையென பெரியார் செய்தால்
வான் பெருமாள் செய்தது போல் என்றார் கண்டோம்

கம்பன்

அறை கழல் அலங்கல் வீரர் ஆயவர் புரிவதாண்மைத்
துறையெனல் ஆயிற்றன்றே தொன்மையில் நன்னூற்கெல்லாம்
இறைவ நீ என்னைச் செய்தது ஈதெனில் இலங்கை வேந்தன்
முறையல செய்தான் என்று முனிதியோ முனிவிலாதாய்


கொலை,களவு,பொய்.சூது.காமம் 5 குற்றங்கள் இராவணன் செய்தது
இறுதிக் குற்றம்.இராமன் செய்ததோ முதற் குற்றம்

Monday, June 15, 2009

மேலே இருந்தார்

போதி மரப் புத்தரினை ஆங்காங் நாட்டார்
பொருப்பினிலே மிகச் சிறப்பாய் அமர்த்தி உள்ளார்
நீதி அவன் சொன்னதெதும் நெஞ்சில் இல்லை
நிலையாமை குறித்த எண்ணம் எதுவும் இல்லை
வாய் திறந்து அண்ணாந்து பார்ப்பதற்காய்
வடிவமைத்து வைத்து உள்ளார் பெருமையாக
போய்ப் பார்த்தேன் நானுந்தான் என்ன செய்ய
பொறுமையுடன் புத்தருமே வீற்றிருந்தார்

ஆங்காங் புத்தர்

கடவுள் வழி

பல்வேறு வழிகளிலே தெய்வம் தன்னைப்
பணிகின்றார் அவரையெல்லாம் வேண்டுகின்றேன்
நல் வழியை உணர்ந்துள்ள உங்களுக்குள்
நடக்கின்ற அர்த்தமற்ற சர்ச்சைகளால்
பல் விதமாய் உமைக் கேலி செய்வதற்கு
பலர் இங்கே அலைகின்றார் அவர்க்கு எல்லாம்
சொல்லெடுத்துத் தருகின்ற வேலை விட்டுச்
சோதரராய் இணைந்திருத்தல் கடவுள் வழி

Sunday, June 14, 2009

உணர்வீர் நீரே

வாழுவதை மகிழ்ச்சியாக வாழ்ந்திருத்தல்
வகையாக அன்பு செய்து வாழ்ந்திருத்தல்
சூழுகின்ற நல்லதெல்லாம் கொண்டிருத்தல்
சொல்லெல்லாம் உண்மையெனக் கொண்டிருத்தல்
பேணுகின்ற நன்மையெல்லாம் பெரிதாய்க் கொள்ளல்
பெரியவரைப் போற்றுதலை உயிராய்க் கொள்ளல்
காணுகின்ற நல்லதெல்லாம் போற்றி நிற்றல்
கடவுள் சொல்லும் வழி நன்கு உணர்வீர் நீரே

யோகா சிலம்பம் களரி இறகுப் பந்து என பல் துறை வீரர் தம்பி யுவராஜ் தனது முதன்மை மாணவியரோடு

Saturday, June 13, 2009

ஆங்காங்கில் விருந்தோம்பிய என் குடும்பம்

என்றும் வாழ்க

விருந்தோம்பல் தமிழர்களின் வெற்றி என்று
விரித்துரைப்பார் என் தாயும் என்னிடத்தில்
கரும்பாக விருந்தோம்பல் தன்னைக் கண்டேன்
கனிவான மணி ராமின் அன்பு வீட்டில்
அரும்பான முல்லை மலர்ச் சிரிப்பினோடு
அன்பு ராதா பானு தந்த உணவு எல்லாம்
சிறந்தோங்கி நின்றதெந்தன் தமிழைப் போல
சீர் கொண்டு அன்பரவர் என்றும் வாழ்க

நான் பாடுவேன்

அன்பு செய்ய யார் இவர்க்குச் சொல்லித் தந்தார்
அடடா நான் வியந்து நின்றேன் மகிழ்ந்தும் நின்றேன்
பண்பு நிறை ஜானகித் தாய் இருவரையும்
பைந்தமிழாய் வளர்த்துள்ளார் துணையாய் வந்த
செண்பகங்கள் பானுவோடு ராதா என்னும்
சிறப்பான மருமகள்கள் துள்ளித் துள்ளி
என் மனத்தைக் கொள்ளை கொண்ட ஆயுஷ் பேரன்
எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்

Friday, June 12, 2009

வாழ்த்துகின்றேன்

பிறந்ததுவோ வேற்று நாட்டில் மனது முற்றும்
பெருந்தமிழாய் வாழுகின்றார் யூனூஸ் அய்யா
சிறந்திலங்கும் தமிழினத்தின் காப்பியங்கள்
செய்யுள்கள் கட்டுரைகள் என்று பல
நிறைந்திருக்கும் இவர் மனத்தில் தமிழர்க்காக
நெஞ்சார உதவிகளைச் செய்து வாழும்
சிறந்திருக்கும் பெரியவரை யூனூஸ் தம்மைச்
செந்தமிழாய் வாழ்க என்று வாழ்த்துகின்றேன்

ஆங்காங்கில் தமிழ் காக்கும் பெரியவர் யூனூஸ் அய்யா அவர்களும் மகன் வெங்கட்ரமணாவும் தம்பி ரவிச்சந்திரனும்

Saturday, June 6, 2009

என்ன செய்ய ஹாங்காங் புத்தருடன்

மலை மேலே புத்தரினை பார்த்து நின்றேன் மனிதர்களின் கூட்டமதும் கண்டு நின்றேன்
அலை பாயும் மனம் கொண்டார் அனைவருமே அங்கிருந்தார் புத்தரினை உணர்ந்திடாமல்
நிலையாமை உணராதார் கேளிக்கைக்காய் நெஞ்சினுள்ளே பல உணர்வு கொண்டு நின்றார்
விலையாகிப் போய் விட்டார் மனிதரெல்லாம் வேதனையில் நான் வந்தேன் என்ன செய்ய

Wednesday, June 3, 2009

பெருமை உண்டோ?

குணம் சேரு குணத்தின் வழி பணத்தைச் சேரு
கூறி நின்றார் நம் மூத்தோர் பல வழியில்
பணம் சேரு சேர்ப்பதற்குப் பல வழிகள்
பகருகின்றோம் அது வழியில் பணத்தைச் சேரு
எனச் சொல்லி நிற்கின்றார் இந்தச் வேளை
இது சொல்லித் தர பணமும் வாங்குகின்றார்
மனம் சேராப் பொருள் சேர்த்தல் மயக்கம்தானே
மணமான குணம் இன்றேல் பெருமை உண்டோ?

Tuesday, June 2, 2009

வாழ்வதற்கு

மதங்களின் பேரால் கொல்லுகின்றார்
இனங்களின் பேரால் கொல்லுகின்றார்
மனிதர்கள் என்ற உணர்வே இன்றி
மறுபடி மறுபடி கொல்லுகின்றார்
விதம் விதமாகக் கொலைகளைப் புரிந்து
வீணே மனிதர் மாளுகின்றார்
விரிந்த நல் இதயம் பரந்த நல்லுணர்வு
வேண்டும் மனிதம் வாழ்வதற்கு

கொடுவழியினிலே

வன்முறையற்ற வழிமுறை ஒன்றை
வகுத்தே தந்தார் காந்தி மகான்
நன்முறை ஏற்றார் மண்டேலாவும்
நல்லவர் மார்ட்டின் லூதருமே
தன் முறை யென்று சொன்னாரா? எம்
தாயக முறையே இதுவென்றார்
வன்முறையாளர் அவரைக் கொன்றார்
வன்முறையாம் கொடு வழியினிலே