Friday, March 6, 2009

தாங்கவில்லை

தந்தையாய்ப் பிள்ளையாய் உறவுகள் தருவது
தவித்தென்றும் அழுவதற்காய்
தழுவியே அணைத்திடப் பெண்மையைத் தந்தது
தனியாக புலம்புதற்காய்
முந்திய தலைமுறைத் துன்பங்கள் என்றென்றும்
முன்னாலே நிற்பதென்ன
முடி மேலே ஒரு பெண்ணும் உடலோடு ஒருபெண்ணும்
முக்கண்ணா கொண்டதென்ன


ஆடியே நிற்கின்றாய் ஊர் தோறும் ஊர் தோறும்
அன்பராய் வணங்க வைத்தாய்
ஆட்டியே எங்களை மென்மேலும் மென்மேலும்
ஆசையில் வீழ வைத்தாய்
கூடிட மாதரை மணமென்னும் கோலத்தில்
கூத்தனே சேர்த்து வைத்தாய்
கொண்ட அவ்வின்பத்தில் பிள்ளைகள் என்றொரு
குவியலைத் தந்து விட்டாய்


ஆடுறார் ஆடுறார் பிள்ளைகள் என்பவர்
அறியாமல் ஆடுகின்றார்
அன்பதைப் பாசத்தை நேர்மையாய்க் கொள்ளாமல்
அப்படி ஆடுகின்றார்
கூடிய போதினில் கண்டிட்ட சுகங்களை
கூட்டாக்க முடியவில்லை
கொள்ளியாய் வந்திட்ட பிள்ளைகள் கொடுத்திடும்
கொடுமைகள் தாங்கவில்லை

0 மறுமொழிகள்: