Wednesday, March 4, 2009

என்னபெருமை தரும்

கல்வியைக் கல்வியாய்க் கற்றவர் நெஞ்சிலே
கல்லெறி உணர்வு வருமோ
கையிலே ஆயுதம் ஏந்தியே இரத்தத்தைக்
கண்டிடும் வெறியும் வருமோ
நல்லதோர் கல்வியும் வணிகமாய் ஆனதால்
நாடின்று அழுது நிற்கும்
நாளையும் தொடருமோ இதுவென்ற அச்சமே
நல்லவர் மனதில் நிற்கும்


வள்ளுவன் என்றொரு மாபெரும் மனிதனை
வழங்கினாள் எந்தமிழ்த் தாய்
வாய் திறந்தால் அவன் பெருமையே கூறுவீர்
வழி ஏற்று நடக்க மாட்டீர்
கொள்ளையைத் தீங்கினைத் தடுக்கவே வந்தவர்
குடும்பமும் மனித குலந்தான்
கூட்டமாய் இருப்பதால் எவரையும் தாக்குதல்
கொண்ட நல் கல்விக்கு அழகோ


நல்லதைக் கற்றவர் அதன் வழி நடத்தலே
நலம் என்று தந்தை சொன்னார்
நலமெல்லாம் புறந்தள்ளி அடிதடி கொள்ளுதல்
நமக்கென்ன நன்மை தரும்
வல்லமை என்பதே நல்லது என்பதை
வள்ளுவம் சொல்லி நிற்க
வழி மாறிப் பொருதுதல் படித்தவர் செயலென்றால்
வாழ்வென்ன பெருமை தரும்

0 மறுமொழிகள்: