Wednesday, March 25, 2009

வாழுகின்றார்

தவறாகப் பொருளீட்டி வாழ்வோரெல்லாம்
தனியாக வாழ்கின்றார் மனத்திற்குள்ளே
அவமானம் உணர்ந்தேதான் வாழுகின்றார்
ஆனாலும் பணம் சேர்க்க ஒடுகின்றார்
குலமானம் இனமானம் வாழ்வின் மானம்
கூட்டாக்க முடியாமல் கலங்குகின்றார்
பணமான துன்பத்தால் என்றும் எங்கும்
பரிதாபமாகவே வாழுகின்றார்


சேர்த்துள்ள பணத்தாலே தாம் விரும்பும்
சீரான பொருள் யாவும் வாங்குகின்றார்
பார்த் தெவரும் போலியாய் வணங்கி நின்றால்
பாவத்தை மனத்துக்குள் எண்ணுகின்றார்
ஆர்த்தாலும் பேர்த்தாலும் உலகம் தம்மை
அவமானமாகத் தான் பார்க்குமென்று
வேர்த்தாராய் மனத்துக்குள் அழுதழுது
விரும்பாத வாழ்க்கையதை வாழுகின்றார்

1 மறுமொழிகள்:

said...

சரியாக சொன்னீர்கள். இன்று அயல் நாட்டில் வாழும் தமிழனின் நிலை இது தான். இந்தியாவுக்குள் வேறு மாநிலங்களில் இருக்கும் தமிழனின் நிலை சற்றே மாறு பட்டது. (இந்த இரண்டின் அனுபாவம் எனக்கு உள்ளது!)

- ஸ்ரீதரன் ராமன்