ஆண்டவர்க்கு அஞ்சுங்கள் என்ற உண்மை
அருளி நின்றார் நபி பெருமான் மீண்டும் மீண்டும்
வேண்டி நிற்கும் ஏழையர்க்கு உதவல் தன்னை
விரும்பி அன்பாய்ச் செய்க என்றும் விளக்கம் தந்தார்
தூண்டி அதை நோன்போடு செய்வீர் என்றால்
தூய்மையுறும் உம் வாழ்வு இறைவன் உம்மை
வேண்டு மட்டும் வாழ்த்தி நன்கு வாழ வைப்பான்
விரைவாக உதவுங்கள் ஏழையர்க்கு
Saturday, September 27, 2008
உதவுங்கள் நபி பெருமான்
நபி பெருமான் சொன்ன பதில்
இனத்தார் மேல் பற்றுக் கொள்ளல் தவறா என்று
இறைத்தூதர் நபி பெருமான் தன்னிடத்தில்
வினாவொன்று வைத்து நின்றார் நல்ல நண்பர்
விரைந்தங்கு நபி பெருமான் பதிலைச் சொன்னார்
இனத்தார் மேல் பற்று அவர்க்கு உதவி செய்தல்
எல்லாமே மிகச் சரிதான் ஆனால் மற்றோர்
இனத்தார் மேல் கொடுமை செய்ய உதவி நின்றல்
இனவெறி தான் நல்லதில்லை என்று சொன்னார்
(வேத வரிகளும் தூதர்மொழிகளும்)
வெளியீடு இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்
138,பெரம்பூர் நெடுஞ்சாலை சென்னை 12
Thursday, September 25, 2008
வாரீர் வாரீர்
வாருங்கள் நண்பர்களே அன்பு செய்வோம்
வழியின்றி இருப்போர்க்கு வழிகள் செய்வோம்
சேருங்கள் நல்லவரை ஒன்றாய் இங்கு
செய்வதெல்லாம் எழையர்க்கு நன்மையாக
கூறுங்கள் நல்லனவே என்றும் எங்கும்
கொள்கை இங்கு ஏழையரைக் காத்தல் என்று
மாறுபாடு கொண்டார்கள் தன்னை மாற்றி
மனிதரென வாழ வைப்போம் வாரீர் வாரீர்
துணையாய்க் கொண்டேன்
நல்லவர் போல் நடிக்கின்றார் அய்யா நீங்கள்
நலம் தானா என்றெல்லாம் வினவுகின்றார்
சொல்லுகின்ற சொல்லெல்லாம் சொல்லும் போதே
சூது மனம் கொண்டேதான் சொல்லுகின்றார்
வெல்லுதற்கு இயலாராய் உள்ளம் எல்லாம்
வினை எண்ணம் கொண்டாராய் மேலும்மேலும்
கொல்லுதற்கே முயலுகின்றார் என்ன செய்ய
குறளரசர் வழி ஒன்றே துணையாய்க் கொண்டேன்
அலைகின்றாரே
வாழ்பவரைக் கண்டு மனம் புண்ணாகாமல்
வழியின்றி இருப்பார்க்கு உதவு என்று
ஆழ் மனத்தில் ஒரு விதையை எந்தன் அன்னை
அன்றைக்கே விதைத்திட்டார் அதன் வழியே
வாழ்ந்திடவே முயன்று நான் வெற்றி கண்டால்
வசை பாடி நிற்கின்றார் அன்பர் சில்லோர்
சூழ்ந்து நிற்கும் அழுக்காற்றுச் சுமையால் அந்தோ
சுகக் கேடு கொண்டவரும் அலைகின்றாரே
அதுவே போதும்
வள்ளுவர்க்குச் சிலை வேண்டாம் நிறுத்திக் கொள்வோம்
வஞ்சகத்தைப் பொய்மையினை ஒழித்தால் போதும்
தெள்ளு தமிழ் நாடென்று ஆட வேண்டாம்
தீங்கின்றி நன்மைகளைச் செய்தால் போதும்
அள்ளி விடும் சிலம்பென்று அலற வேண்டாம்
அன்னையரை அழுகையின்றி காத்தால் போதும்
உள்ளு தொறும் தவறு செய்ய நாணம் கொண்டு
ஊர் போற்ற வாழ்ந்து விட்டால் அதுவே போதும்
Wednesday, September 24, 2008
Tuesday, September 23, 2008
Monday, September 22, 2008
செய்யப் பாரும்
அடுத்தவரைக் குறை சொல்ல என்று சொன்னால்
ஆடுகின்றீர் ஒடுகின்றிர் பாடுகின்றீர்
தொடுத்தவரைக் குறை சொல்லி பொறாமைத் தீயால்
துள்ளுகின்றீர் வெவ்வேறு வடிவம் காட்டி
படித்தவரே இதையெல்லாம் செய்து நின்றீர்
பாவிகளே படித்து என்ன பயன் தான் கண்டீர்
அடுத்தவரைக் குறை சொல்லல் விட்டு விட்டு
அய்யா நீர் ஏதேனும் செய்யப் பாரும்
வாழ்கின்றாரே
நடிப்பிற்காய் அவன் ஒருவன் தன்னை மட்டும்
நற்றமிழ்த்தாய் ஈன்றெடுத்தாள் இன்று வரை
படிக்கின்றார் அவ்னைத்தான் அவனின் வழி
படிப்பாரே கொஞ்சம் கொஞ்சம் நடிக்கின்றார் காண்
துடிக்கின்ற கன்னங்கள் விழியிரண்டு
துள்ளி வரும் நடையழகும் மென்னடையும்
வடித்திட்ட வளர் தமிழான் சிவாஜி என்னும்
வள்ளல் அவன் வழங்கியதில் வாழ்கின்றாரே
Sunday, September 21, 2008
மாக்கலைஞன் சிவாஜி
ராஜாமணியென்னும் அன்னை பெற்ற ராஜாமணி அவனே வாய் வழியாய்ப்
பேசா மொழியெல்லாம் விழிகள் தன்னால் பேசிப் புரிய வைக்கும் பேரருளே
ரோஜா மலர் போல மென்மையான நோயில்லா மனம் கொண்ட நற் கலைஞன்
கூசாமல் அவன் தன்னை நகலெடுக்கக் கோடிப் பேர் முயன்றிங்கு தோற்றே போனார்
கூஜாவைத் தூக்கியேனும் அவனின் மேன்மை கொண்டு விட வேண்டும் என்று பலர் முயன்றார்
ராஜாவாய் அவன் மட்டும் இன்று வரை நற்றமிழர் உள்ளத்தில் வாழ்கின்றானே
ஆ ஜா என்று இந்தியிலே நடிப்பாரெல்லாம் அவன் நடித்த வேடம் போட அச்சம் கொண்டார்
தேசு புகழ் சிவாஜியெனும் மாக்கலைஞன் தெய்வம் தந்த மாக்கொடையே உணர்ந்தோம் வென்றோம்
Friday, September 19, 2008
அவ்வை நன்னெறி
நல்லதையே செய்து வாழும் நல்லவர்க்கு
நாணமதை சொத்தெனவே கொண்டவர்க்கு
கொல்லுகின்ற துன்பம் ஒன்று வந்து விட்டால்
குலைந்தழுது ஒழிவாரோ என்றும் மாட்டார்
அல்லவர்தான் அழுது நிற்பார் அரற்றி நிற்பார்
அறிவுடைய நல்லவர்கள் தெளிந்தே நிற்பர்
புல்லர்களோ மண்குடம் போல் உடைந்தால் போச்சு
பொன்குடமே நல்லவர்கள் உடைந்தும் பொன்னே
செய்யுள்
சீரியர் கெட்டாலும் சீரியரே சீரியர்மற்
றல்லாதார் கெட்டாலங்கென்னாகும் - சீரிய
பொன்னின் குடமுடைந்தாற் பொன்னாகும் என்னாகும்
மண்ணின் குடமுடைந்தக்கால்
தேரா மன்னா சிலப்பதிகாரம்
தெளிவான பல கேள்வி வைக்கின்றாள் கண்ணகியும்
ஆராய்ந்து பார்க்கையிலே அத்தனையும் வியப்பாகும்
அறிவென்றல் பெண்களுக்கே முதல் உரிமை என்றாகும்
நீர் வார் கண்ணாய் என்றழைத்த நெடுஞ்செழியன்
நிலை உணர வைத்தாளே கண்ணகியாம் பெருமாட்டி
சீரார் தமிழினத்தீர் செப்புகின்றேன் அவள் மொழியை
செவி மடுப்பீர் சிலம்பதனின் சிறப்பையே சிறப்பாக
சிலம்பாலே ஒருவனையே சிரமெடுக்கச் சொன்னவனே
சிலம்போடு வந்து நின்றேன் கண்களிலே நீரோடு
குல மானம் காக்க என் கோவலனின் பேர் காக்க
உளம் திரிந்து தீர்ப்பளித்தாய் உணரவில்லை நீயதனை
சிலம்போடு நிற்கின்றேன் என்றவுடன் யாரென்று
குழம்பாமல் இருந்திருந்தாலதீர்ப்பளித்த மன்னவனே
மதியில்லாய் தேராமல் மாபெரிய தவறு செய்தாய்
தலையோடு உடல் சேர்த்தேன் தழுவினேன் என்னவனை
தங்குக என்றுத்தரவில் தனியளாய் நின்றேன் நான்
உலகனைத்தும் காக்கின்ற உத்தமனாம் ஞாயிறையே
தலைமகள் நான் வினவி நின்றேன் தங்க மகன் தனைக் குறித்து
நிலையுணர்ந்தான் சொன்னான் நின் தவறை அதனாலே
எரியுண்ணும் உன் ஊரை என்றவனும் தீர்ப்பளித்தான்
உனக்கிதனை உன் ஒற்றர் உரைத்திருந்தால் நீயென்னை
விளக்கங்கள் கேட்பாயோ வீணாகி அறிவிழந்தாய்
மதுரையாம் பதியினிலே மக்கள் எனைக் கண்டவுடன்
மாபெரிய தெய்வம் என்று எனை வணங்கி நின்றார்கள்
தெருத் தெருவாய் அலைந்தேன் உன் தீய செயல் சொன்னேன் நான்
தேடிஅறி ஒற்றர்களை நீ மட்டும் கொண்டிருந்தால்
வருத்தமதை உன் மக்கள் வாயிழந்து நின்றதனை
வந்தே உன்னிடத்தில் அவர் வகையாக் உரைத்திருப்பர்
பொருத்தமின்றி யாரென்று என்னிடத்தில் கேட்டாயே
பொறுமையின்றித் தீர்ப்பளித்த் புத்தியில்லா மன்னவனே
தேரா மன்னா என்ற ஒரு வார்த்தை தனக்குள்ளே
தெயவ மகள் இத்தனையும் வைத்துள்ளாள் என்பதனை
நானே உரை செய்ய நற்றமிழார் எனை வணங்கி
தேனாம் தமிழன்னை உந்தனொடு இருப்பதனால்
தேடி உரை செய்கின்றாய் என்றெனையே பாராட்ட
நானோ இவையெல்லாம் நாயகனின் உரை என்றேன்
நாடி நின்ற தமிழ்த் தாயின் நலமான அன்பென்றேன்
வானோனும் தமிழ்த் தாயும் வழங்குவதால் வாழ்கின்றேன்
Tuesday, September 16, 2008
சொல்க அய்யா
பாசமதைப் புரியார் மேல் பாசம் வைத்து
படுகின்ற பாடதனைச் சொல்லுதற்கு
ஆசையதை அதிகரிக்கும் தமிழாம் அன்னை
அவர் கூட உதவவில்லை உணர்கின்றேன் நான்
நேசமதை உணராதார் நெஞ்சம் தன்னில்
நினைவெதுவும் இல்லாமல் அன்பைக் கொன்று
வாசமில்லா வாழ்க்கையினை வாழுகின்றார்
வாழ்வதாகப் பெருமை வேறு கொள்ளுகின்றார்
கூசாமல் பிறர் மனத்தைக் கொல்லுகின்றார்
கொல்வதையேக் கலையாக்கிச் சொல்லுகின்றார்
பேசாமல் கொடுமை வழி பேணுகின்றார்
பெரியவர் போல் நடிக்கின்றார் நாணமின்றி
ஈசா எம்பரம் பொருளே இவரை இங்கு
எதற்காக படைத்திட்டாய் சொல்க தேவே
காசாலும் பொருளாலும் பிறரை இங்கு
கடிந்தொழிக்க வேண்டுமென்றோ சொல்க அய்யா
குறட் கருத்து அழுக்காறாமை 17ம் அதிகாரம்
பாவங்கள் செய்தவர் தான் பாவியாவார்
பாவம் ஒன்றே மிகச் சிறந்த பாவியாகும்
கேவலத்தைச் சொல்லுகின்றார் நமது தந்தை
கேட்கையிலே அவர் பெருமை நாம் உணர்வோம்
பாவிகளில் மிகச் சிறந்த பாவியென்று
பகர்ந்து நின்றார் வள்ளுவரும் பொறாமையினை
தேடி அதைக் கொள்வோர்கள் கொண்டிருக்கும்
திரு இழந்து தீய வழி சேர்வார் என்றார்
குறள்
அழுக்காறு என ஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்
பழம்பாடல் வேதநாயகம் பிள்ளை
புகழுகின்றார் போலவே தான் இகழ்கின்றாரா
புகழ்வேத நாயகம் பிள்ளை யவர்
திகழ் தமிழில் கேட்கின்றார் இனிய கேள்வி
தினம் தினமும் தமிழ் படிக்கும் சுகமே வேறு
அகம் மகிழ இந்திரனே சந்திரனே
அப்பா நீ என்றிங்கு புகழுகின்றார்
ஜெகம் அறியும் அவர்களது செய்கைகளை
சிறப்பல்ல மிகச் சிறுமை மிகச் சிறுமை
பிறன் மனையைப் புணர்வதற்காய் கோழியாகிப்
பெண்குறியை உடலெங்கும் பெற்று நின்றான்
தரமில்லா இந்திரனும் அவனைப் போல
தாரையெனும் குரு மனைவி தன்னைச் சேர்ந்தான்
பரமசிவன் தலையமர்ந்த சந்திரனும்
பாவியிவர் என்று நம்மை மறைமுகமாய்
விதம் விதமாய்ப் புகழுதல்போல் ஒழிக்கின்றாரோ
விளங்கவில்லை என்கின்றார் புலவர் தானும்
செய்யுள்
வேத நாயகம் பிள்ளை
இந்திரன் நீ சந்திரன் நீ என்னல் பிறன்மனையைத்
தந்திரமாக் கூடுஞ் சழக்கன் நீ - வந்த குரு
பத்தினியைச் சேர்ந்த படு பாவி நீ என்பதாந்
துத்தியமோ நிந்தனையோ சொல்
Monday, September 15, 2008
நாணாமல் வாழ்கின்றாரெ
பெண்களினைப் போற்றாதார் வாழ்வில் என்ன
பெருமைகளைக் கண்டு விட முடியும் நல்ல
கண்களினைக் கொண்டிருந்தும் காணாராகிக்
கதைத்து நிற்கும் மானிடரை என்ன சொல்ல
விண் வெளியை வென்று விட்டார் மேலும்மேலும்
விஞ்ஞானப் பேரழிவைக் கண்டு விட்டார்
நல் மனத்துப் பெண்களது அன்பை இன்ப
நலம் சேர்க்கும் உடலதனைப் பேணி னாரா
கண் மணியே என்கின்றார் அணைக்கும் நேரம்
கவிதைகளாய்ப் போற்றுகின்றார் காம நேரம்
சொல்வதெல்லாம் ஏற்கின்றார் அந்த நேரம்
சுகம் முடிந்தால் உறங்குகின்றார் விடிந்தாலங்கே
புண் படவே பேசுகின்றார் கொண்ட சுகப்
பொலிவை யெல்லாம் மறக்கின்றார் அடிமையாகப்
பெண்ணினத்தை நடத்துகின்றார் அந்தோ அந்தோ
பேணாமல் நாணாமல் வாழ்கின்றாரே
பழம் பாடல் கம்பன்
போர்க் களத்தில் நிற்கின்றான் இராவணனும்
பொருது நிற்கும் இராமனது போர்த் திறனை
ஆர்க்கின்ற அவன் வில்லை அதிரடியாய்
அழிவெல்லாம் நடத்துகின்ற அம்பையெல்லாம்
பேர்க்கின்றான் தன் மனத்தை சீதையின் பால்
பெருமை கொண்டாள் பொறுமையினால் என்று சொல்லி
சீர் கொண்ட மூங்கிலைப் போல் தோள்கள் கொண்டாள்
சிறந்த இந்த இராமனது தேகம் தன்னை
வார் கொண்ட மென்முலையால் அணைத்தவள்தான்
வடிவெல்லாம் கண்டவள்தான் என்ற போதும்
போர் செய்யும் இவன் மேனி கண்டிருந்தால்
புகழுடைய மன்மதனும் நானும் இங்கே
நாயென்றே நினைத்திருப்பாள் நல்ல வேளை
நாயகியும் காணவில்லை என்றுரைத்தான்
வாயாலே இராமனது போர்த் திறத்தை
வாழ்த்துகின்றான் சுத்த வீரன் இராவணனும்
கம்பன் செய்யுள்
போயினித் தெரிவதென்னே பொறையினால் உலகம் போற்றும்
வேயெனத் தகைய தோளி இராகவன் மேனி நோக்கில்
தீயென கொடிய வீரச் சேவகச் செய்கை காணில்
நாயெனத் தகுதும் அன்றே காமனும் நாமும் எல்லாம்
ஆத்தி சூடி
ஆறுவது சினம் என்று அவ்வை சொன்னார்
அவ்வார்த்தை தெளிந்தீரோ நண்பர்களே
தேறி அந்த வார்த்தையினை நீர் உணர்ந்தால்
தெய்வத்திற் கிணையாவீர் நீரும் இங்கு
ஆறி விடும் சினம் கொஞ்சம் அமைதி காத்தால்
அதை விட்டு உடனடியாய் வெகுண்டீரென்றால்
நாறி விடும் நம் வாழ்க்கை சுற்றம் நட்பு
நமை விட்டு ஒடி விடும் சிறந்து வெல்வீர்
Sunday, September 14, 2008
அந்தோ அந்தோ?
காந்தி காமராசரோடு ஏழைக் கக்கனுக்கும்
கண்ணியமாய் வாழ்ந்து இன்றும் வாழ்ந்திருக்கும்
சாந்தி வழி காட்டிச் சென்ற அனைவருக்கும்
சரித்திரத்துப் பெருமையான அவருக்கெல்லாம்
நேர்ந்த ஒருகொடுமையினைக் கண்டேன் இங்கு
நெஞ்செல்லாம் வேகுதையா கண்டோரெல்லாம்
வாழ்ந்த அந்த மானிடரின் சிலைகளுக்கு
வழங்குகின்றார் மாலைகளை அந்தோ அந்தோ
பேசலாமா?
உடல் விற்றுப் பிழைக்கின்றார் என்று சொல்லி
ஊரெல்லாம் பேசுகின்றார் ஏசுகின்றார்
தடம் கண்டு அவர் தேடி மீண்டும் மீண்டும்
தழுவுதற்குச் செல்வாரைப் பேச மாட்டார்
அடம் பிடித்தா அந்தத் தொழில் செய்து நின்றார்
அவர் வயிற்றுப் பசிக்காகச் செய்து வாழ்ந்தார்
தடம் மாற்றி அவர் காக்க எண்ணா மாந்தர்
தனை மறந்து பண்பாடு பேசலாமா?
பழம் பாடல் கம்பன்
சீதையவள் பேசுகின்றாள் இராமனிடம்
தீக்குளிக்கச் சொன்னானே அதற்குப் பின்னர்
பேதையல்ல சீதையவள் என்பதனை
பேச்சு வழி காட்டுகின்றான் கம்பன் தானும்
மாதவளை நாவினிலே வைத்திருந்த
மலர் வாழும் பிரமனோடு மாட்டின் மேலே
கோதையவள் தன்னோடு இருக்கும் சிவன்
குளிர் சங்குகைக் கொண்ட மாலவனும்
யாரறிவார் பெண்களது மனதின் நிலை
எல்லாம் அறிந்தாலும் அறிய மாட்டார்
சீர் மகனே என் இணையே அவரின் நிலை
செப்பி விட்டேன் நீ என்ன செய்வாய் அய்யா
பார் முழுதும் பெண்களது நிலை இது தான்
படைத்தவனும் காப்பவனும் அழிப்பான் தானும்
தானறியார் என்றால் நீ என்ன செய்வாய்
தளிர்க் கொடியார் நிலை இது தான் உணர்வாய் நீயும்
கம்பன் செய்யுள்
பங்கயத்து ஒருவனும் விடையின் பாகனும்
சங்கு கைத் தாங்கிய தரும மூர்த்தியும்
அங்கையின் நெல்லி போல் அனைத்தும் நோக்கினும்
மங்கையர் மன நிலை உணர வல்லரோ
Sunday, September 7, 2008
தெயவம் நீங்கள்
குழந்தைகளைக் கொஞ்சுங்கள் அவர்கள் தம்மைக்
கொண்டாடி மகிழுங்கள் மேலும் மேலும்
விழைந்ததனை வாங்கித் தந்து மகிழ்ந்திடுங்கள்
விருப்பமதை நல் வழியாய் ஆக்கிடுங்கள்
அருந்தமிழைச் சொல்லித் தந்து ஆடிடுங்கள்
அன்பு வழி தனைக் காட்டி இன்புறுங்கள்
தினம் தினமும் வேறு பாடு எதுவும் இன்றி
தெய்வம் நீங்கள் என்றுணரச் செய் திடுங்கள்
குறட் கருத்து
குடி யிருக்கவீ டின்றி அலையும் மாந்தர்
குறை யதனை நினைத்து நினைத் தேங்குகின்றார்
அடி யிரண்டில் உல காண்ட வள்ளுவரோ
அறிவார்ந்த செய்தி ஒன்றைச் சொல் லுகின்றார்
துடிக் கின்ற உயிரதுவும் குடி யிருக்க
தூய ஒரு இடம் இன்றி வீடு தேடி
அடிக் கடியே இடம் மாற்றி அலை கிறதாம்
அதனால் தான் பிறப் பிறப்பு நிகழ் கிறதாம்
குறள்
அறத்துப்பால் நிலையாமை 10ம் குறள்
புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு
ஆத்தி சூடி அவ்வை பழம்பாடல்
அவ்வையென்னும் அறிவார் தமிழ் மகள்
ஆத்திசூடியை அருளிச் செய்தார்
செவ்விததனை நாங்க ளெல்லாரும்
சிறிய வயதில் கற்றே உணர்ந்தோம்
கொவ்வைச் செவ்வாய்க் குழந்தைகட் கெல்லாம்
கூற வேண்டும் தமிழர் நன்கு
அவ்வை சொல்லில் அறிவை உணர்வை
அறிந்தே அவர்கள் உயர்தல் வேண்டும்
விரும்பிச் செய்க அறத்தை என்றார்
விரும்பா அறத்தை வேடம் என்றார்
விரும் பினாலே செய்த தாகும்
வேறு விதங்கள் அசிங்கமாகும்
தரும்போ துள்ளம்தரு வதாகத்
தான்நினைத் தாலே தருதல் வீழும்
அரும்பும் தமிழில் அவ்வை சொன்ன
ஆத்தி சூடி தினமும் பார்ப்போம்
அறம் செய்ய விரும்பு
Saturday, September 6, 2008
ஈந்திடும் இறைவனே
வாருங்கள் வாழலாம் முறையான வழிகளில்
வளமான வள்ளுவர் காட்டிடும் வழிகளில்
சேருங்கள் மனிதரை ஒன்றாக அன்பினில்
சேர்த்ததைப் போற்றுங்கள் நட்பென்ற உயர்வினில்
நானென்றும் நீயென்றும் பிரிவினை இல்லாமல்
நாமென்று இணைந்தங்கு நல்லதைப் பேணுங்கள்
தானும் நம் உடனாகி அன்பெல்லாம் அருளுவான்
தாயோடு தந்தையாய் ஈந்திடும் இறைவனே
என் சொல்வேன்
குற்றங்கள் சொல்வதா உடனே குதிக்கின்றார்
கொண்டுள்ள நிறைகளைச் சொல்லிட வெறுக்கின்றார்
கற்றவர் இவர்கள் தம் தவறுகள் காண்கையில்
கவலைகள் இல்லையே சிரிப்புத்தான் வருகுது
உற்றவர் பெற்றவர் எவரென்ற போதிலும்
ஊரிலே வாழ்கின்ற நல்லவர் ஆயினும்
மற்றையோர் பெருமையைத் தாங்கிட முடியாராய்
மனத்திற்குள் அழுகின்ற கொடுமையை என் சொல்வேன்
Thursday, September 4, 2008
குறட் கருத்து
கற்றுத் துறை போகிக் காமுற்றுக் கல்வியினைப்
பெற்றுத் துறை போகும் பேரறிவார் தம்மிடத்தில்
பெற்ற கல்வியினைப்பேசிப் பெருமையுறல்
நற்றவமாய்த் தானாய் வளரும் பயிரதற்கு
நலமாகத் தண்ணீரைத் தான் பாய்ச்சல் போலுயரும்
மற்றவரின் முன்னாலே வாய் திறத்தல் அய்யய்யோ
மலிவாக்கி அமுதமதை பாத்திரங்கள் கழுவுகின்ற
முற்றமதின் அங்கணத்தில் கொட்டுவதாய் வீணாகும்
குறள்
பொருட்பால் அவை அறிதல் குறள் 8ம் 10 ம்
உணர்வதுடையார் முன் சொல்லல்வளர்வதன்
பாத்தியுள் நீர் சொரிந்தற்று
அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்
அல்லார் முன் கோட்டி கொளல்
இராம கவிராயர்
பிள்ளையார் கோயிலுக்குப் போனார் கவிராயர்
பெற்ற கொடைப் பொருள் அனைத்தும் இழந்திட்டார் கோயிலிலே
உள்ளம் தமிழுள்ளம் கவியாக பொங்கிற்று
உரைக்கின்றார் அவரிடத்து குலமே திருடும் என்று
வள்ளியெனும் வேடர் குலப் பெண்ணை திருடியது
வடிவேலன் உன் தம்பி உன் மாமன் மாலவனோ
வெண்ணெய் திருடி வெகு காலம் குலப் புத்தி
விநாயகரே நீரும் முடிச்சவிழ்த்தீர் எந்தனிடம்
செய்யுள்
தம்பியோ பெண் திருடி தாயாருடன் பிறந்த
வம்பனோ நெய் திருடி மாயனாம் - அம்புவியில்
மூத்த பிள்ளையாரே முடிச்சவிழ்த்துக் கொண்டீரே
கோத்திரத்தி லுள்ள குணம்
Wednesday, September 3, 2008
பேரனோடு பேத்தியும்
பேரனோடு பேத்தியுமே பார்க்க வந்தார்
பெருமையுடன் நானிருந்தேன் அவர்களோடு
சேரனோடு பாண்டியனும் சோழனுமே
சேர்ந்திருந்த அக்காலப் பெருமையோடு
ஆரிவர்கள் எதிர்காலம் என் பெயரை
அப்படியே உலகுக்குச் சொல்லி நிற்பார்
பேரனோடு பேத்தியுமே நலமாய் வாழ
பெருங் கடவுள் தனை வணங்கி நிற்கின்றேனே
புரிந்து கொள்ளும
யாரையுமே எழுதிடலாம் என்ற போக்கு
எவரையுமே திட்டிடலாம் என்ற நோக்கு
சாரமில்லார் செய்கின்ற வேலையன்றி
சத்தியத்தை உணர்ந்தவர்கள் செய்வதில்லை
யாரெவரோ அவரை நன்கு தெரிந்த பின்னர்
எழுதுவதில் அறிவின் ஒளி தெரிய வேண்டும்
ஊரிலுள்ள அனைவரையும் பொறுப்பேயின்றி
ஒழிக்க எண்ணும் அவர் தமிழே அறியாரன்றோ
விண்ணப்பம் போட்டெவரும் தந்தை தாயார்
வீட்டினிலே பிறப்பதில்லை அவர்கள் சேர
மண்ணகத்தில் வந்து விட்டோம் அதற்கு முன்பே
மனிதர்களோ சாதிகளின் பிடியிலுள்ளார்
நம்மகத்தே அவ்வுணர்வே யின்றி நாட்டில்
நல்லவர்கள் தனையெல்லாம் நட்பு கொண்டு
செம்மாந்து அனைவரையுமே உறவாய்க் கொண்டு
சீராக வாழ்வதனை அறியார் இங்கு
நம்மை இந்த சாதியென்று திட்டுகின்றார்
நம்மறிவைக் குறையென்று கொட்டுகின்றார்
எம்மறிவோ அவர்களையும் அன்பு செய்து
இவரும் நம் தமிழினத்தார் என்றே போற்றும்
நம்மவரே திட்டுகின்றார் உண்மை தன்னை
நமதுணர்வை அறியாமல் கொட்டுகின்றார்
எம்மவரே உம் கோபம் பழையார் மேலே
எமை அதிலே சேர்க்காதிர் புரிந்து கொள்ளும்
Monday, September 1, 2008
குறட்கருத்து
ஆண் பிள்ளை தனை மட்டும் சான்றோனென்று
அறிந்தாலே தாயவளும் மகிழ்வாளென்று
வான் போற்றும் வள்ளுவரும் சொல்லி நின்ற
வகை கண்ட பெண்ணொருத்தி என்னைக் கேட்டார்
ஏன் பெண்ணை வள்ளுவரும் சொல்லவில்லை
எகத்தாளக் கேள்வி அது புரியாக் கேள்வி
நான் சொன்ன பதிலதனை இங்கே சொல்வேன்
நற்றமிழீர் வள்ளுவனைப் போற்றி நிற்பீர்
தாயவளும் பெண்ணென்ற காரணத்தால்
தனை உணர்ந்து மகிழுகின்றாள் ஊருக்குள்ளே
தூயவனாய் தன் மகனும் இருப்பதாலே
துடியிடையின் பெண்களுக்குத் துன்பமில்லை
சேய் அவனின் நற் குணத்தால் ஊரிலுள்ள
சேயிழையார் அனைவருமே வாழ்த்தி நின்றார்
தாய் அதனால் மகிழுகின்றார் ஆடவரின்
தரமொன்றே பெண்களினைப் போற்றும் என்று
இல்லறவியல் மக்கட்பேறு குறள் 9
ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனைச்
சான்றோன் என்க் கேட்ட தாய்
பலபட்டடை சொக்கநாதப் புலவர்
இறைவனிடம் கேட்டு நின்றார் புலவர் இவர்
என்னுளத்தே வந்திருக்க வேண்டுமென்றே
பிறை சூடும் பெம்மானுக்கவரே ஒரு
பெரு வழியை நல் வழியைச் சொல்லித் தந்தார்
சரி பாதி அம்மைக்குத் தந்ததாலே
சரி பாதி இருவருக்கும் மீதமுண்டு
தனிப் பாதி அவ்விரண்டும் சேர்ந்தால் போதும்
தனியாக இன்னுமொரு அர்த்தநாரி
விரி சடையான் ஒருருவாய் இருத்தல் வேண்டாம்
வெற்றி நிறை களந்தையிலே ஒருவனாகி
புரிந்தவனை வணங்கி நிற்கும் புலவர் நெஞ்சில்
புகுந்தங்கும் அருள் செய்து போற்றலாமாம்
அறிவான புலவர் அவர் வேண்டுதலை
அறிவான்தான் அறிவான ஆண்டவனே
செறிவான இப்பாடல் பலபட்டடை
சீர் சொக்கநாதர் அவர் அருளிச் செய்தார்
செய்யுள்
ஆகத்திலே ஒரு பாதி என்னம்மைக்களித்து அவள்தன்
பாகத்திலே ஒன்று கொண்டாய் அவள் மற்றைப் பாதியும் உன்
தேகத்திற் பாதியும் சேர்ந்தால் இருவருண்டே சிவனே
ஏகத்திராமல் இருப்பாய் களந்தையும் என் நெஞ்சமுமே