Monday, September 1, 2008

பலபட்டடை சொக்கநாதப் புலவர்

 இறைவனிடம் கேட்டு நின்றார் புலவர் இவர்
  என்னுளத்தே வந்திருக்க வேண்டுமென்றே
  பிறை சூடும் பெம்மானுக்கவரே ஒரு
  பெரு வழியை நல் வழியைச் சொல்லித் தந்தார்
  சரி பாதி அம்மைக்குத் தந்ததாலே
  சரி பாதி இருவருக்கும் மீதமுண்டு
  தனிப் பாதி அவ்விரண்டும் சேர்ந்தால் போதும்
  தனியாக இன்னுமொரு அர்த்தநாரி


  விரி சடையான் ஒருருவாய் இருத்தல் வேண்டாம்
  வெற்றி நிறை களந்தையிலே ஒருவனாகி
  புரிந்தவனை வணங்கி நிற்கும் புலவர் நெஞ்சில்
  புகுந்தங்கும் அருள் செய்து போற்றலாமாம்
  அறிவான புலவர் அவர் வேண்டுதலை
  அறிவான்தான் அறிவான ஆண்டவனே
  செறிவான இப்பாடல் பலபட்டடை
  சீர் சொக்கநாதர் அவர் அருளிச் செய்தார்


  செய்யுள்

 ஆகத்திலே ஒரு பாதி என்னம்மைக்களித்து அவள்தன்
 பாகத்திலே ஒன்று கொண்டாய் அவள் மற்றைப் பாதியும் உன்
 தேகத்திற் பாதியும் சேர்ந்தால் இருவருண்டே சிவனே
 ஏகத்திராமல் இருப்பாய் களந்தையும் என் நெஞ்சமுமே

0 மறுமொழிகள்: