Wednesday, October 1, 2008

நபி பெருமானார் அருள் மொழிகள்

  உண்மைக்குப் புறம்பானோர் ஆட்சியிலே
  உட்கார நேர்ந்திட்டால் விளைவதெல்லாம்
  நன்மைக்குப் பதிலாக தீமை ஒன்றே
  நபி பெருமான் சொல்கின்றார் மக்களுக்காய்
  மண் முழுதும் குழப்பங்கள் செய்து நிற்பார்
  மண் தரும் நல் வேளாண்மை அழித்து நிற்பார்
  கண்ணியமே இல்லாத அவர்கள் தம்மை
  கடவுள் என்றும் தண்டிப்பார் அருள மாட்டார்

  படைப்பனைத்தும் இறைவனது அருள் உணர்வீர்
  பார்க்கின்ற உயிர் அனைத்தும் அவனின் கொடை
  இடைப்பட்ட காலத்து வாழ்க்கை தன்னில்
  எல்லோர்க்கும் உதவி செய்வீர் நன்மை செய்வீர்
  கடையனென்று எவனுமில்லை இறைவன் முன்னே
  கருணையில்லார் மட்டுமே கடையராவார்
  உடைமையென்று மென்மேலும் சேர்த்து சேர்த்து
  உள்ளமின்றி வாழாதீர் வழங்கி நில்லும்

  கொடுமையினைச் செய்வானைக் காப்பாற்றுங்கள்
  கொடுமையினால் வீழ்ந்தானைக் காப்பாற்றுங்கள்
  பட படத்தார் கேட்டார்கள் பெருமானிடம்
  பாவியினைக் காப்பதுவா எவ்வாறென்று
  கொடுமையினைச் செய்வானுக்கு அன்பு சொல்லி
  கொடுமையினைச் செய்யாமல் திருத்திடுங்கள்
  படுகிறவன் துயரத்தை உணர்த்தி அந்தப்
  பாவத்தில் இருந்து அவனை விலக்கிடுங்கள்


  நல்லவரைப் பதவியிலே அமர்த்தல் விட்டு
  நாசவேலை செய்வோரை அமர்த்துகின்றார்
  அல்லாவை அவரளித்த தூதர் தம்மை
  ஆண்டவனுக்கு அஞ்சி வாழும் உண்மையோரை
  பொல்லாத அச் செயலால் புறக்கணித்து
  பொறுப்பின்றி அவர்கட்குத் துரோகம் செய்வார்
  அல்லாவின் தீர்ப்பு நாளில் அவர்க்கு அல்லா
  அளிப்பாரே நரகத்தை உண்மை உண்மை

 கல்வி வழி ஞானத்தைப் பெற்றோரன்றி
  கடவுளினைத் தீயவர்கள் அறிவதில்லை
 நல்ல கல்வி இறைவனையே நம்பி நிற்கும்
  நலமற்றோர் இறை இல்லை என்று நிற்பார்
 வல்லவனாம் இறைவனையே வணங்கி நிற்போர்
  வாழ்வாங்கு வாழ்ந்திருப்பார் இறையருளால்
 அல்லாவை வணங்கி நிற்பீர் அருள் பெறுவீர்
  அகிலமெல்லாம் அவன் கொடையே பணிந்து நிற்பீர்
   

3 மறுமொழிகள்:

said...

குரானை தங்களின் அழகிய தமிழிழ் சுவை பட எழுதி இருப்பது இனிமை.

இருந்தாலும் எனக்கு குரான் மற்றும் இஸ்லாம் மீது ஈடுபாடு வராமல் இருப்பதற்கு காரணம். அங்கு பெண்களுக்கு சம உரிமை கொடுப்பது இல்லை.

தன் மனைவி பிற ஆண் மகனை முகத்தோடு முகம் பார்க்க கூடாது, பெண்கள் கார் ஓட்ட கூடாது (இன் saudi அரேபியா) போன்ற குறுகிய மனப்பான்மை யை விட்டு ஒழிkka வேண்டும் இஸ்லாம்

said...

ரம்ஜான் நாளன்று
இப்படிப்பட்ட ஒரு அற்புதப்பதிவைக்
கொடுத்து
நண்பர்களை
அன்பில் மூழ்கடித்துவிட்டீர்கள் அய்யா!

said...

//இருந்தாலும் எனக்கு குரான் மற்றும் இஸ்லாம் மீது ஈடுபாடு வராமல் இருப்பதற்கு காரணம். அங்கு பெண்களுக்கு சம உரிமை கொடுப்பது இல்லை.//

ஐயா குப்பன் அவர்களே...இஸ்லாத்தை முழுமையாக படித்துப்பாருங்கள்.....இன்று நடந்துக் கொண்டிருக்கக்கூடிய அவலங்களை எண்ணிப் பாருங்கள்....பெண்களின் சம உரிமை விளங்குவீர்கள்...