Sunday, January 31, 2010

வாழ்த்தி நின்றார்

வாழ்த்துக்கள் வணக்கங்கள் என்று என்னை
வளம் பெறவே செய்து நின்றார் அன்புடையோர்
கோர்த்தெடுத்த அன்பாலே நேற்று என்னை
குளிர்வித்தார் தமிழறிந்த பெரியோரெல்லாம்
வேர்த்தாற் போல் நின்றெந்தன் எதிரினிலே
விளையாட்டாய் என் கோபம் கேலி செய்தார்
சேர்ந்தாற் போல் அன்புடையோர் அனைவரும் நான்
செந்தமிழாய் வாழ என்று வாழ்த்தி நின்றார்

Saturday, January 30, 2010

குமரப்பா

குமரப்பா காந்தியவர் கொள்கையினை
கொண்டிருந்தார் இறுதி வரை உயிர் மூச்சாக
தமரப்பா ஏழையர்க்கும் இந்தியர்க்கும்
தறி கிராமத் தொழில் வழியே வாழ்வதுவே
அமரப் பாதைக்கு நம்மை அழைத்துச் செல்லும்
அற வழி என்றுரைத்து நின்ற அன்பரப்பா
எவர் கேட்டார் அதனால் தான் இந்தியாவை
எவர் எவர்க்கோ சந்தையென ஆக்கி விட்டார்

சுட்டு விட்டார் காந்தியினை

தீண்டாமைக் கொடுமையினை இந்து மதம்
தீண்டாமல் தூக்கி உடன் எறிய வேண்டும்
வேண்டாத அக் கொடுமை இருக்கும் என்றால்
வேறு மதம் தீண்டாமை இல்லா மதம்
ஆண்டவரை வணங்குதற்கு அதிலே சேர்ந்து
அதனையே என் மதமாய் ஆக்கிக் கொள்வேன்
பூண்டார் இம்முடிவினையே காந்தி அண்ணல்
பொறுப்பாரா அதனால்தான் சுட்டு விட்டார்


வரதட்சணைக் கொடுமை ஒழிவதற்கு
வழி சொன்னார் அடிகள் இங்கு மிகத் தெளிவாய்
பிற சாதி தன்னில் மணம் கொண்டு விட்டால்
பிரச்சினைகள் தீர்வதுடன் சாதி தானும்
இறந்தொழியும் அதன் பின்னர் அனைவருமே
இந்தியர்கள் என்ற பெயர் கொண்டு வாழ்வோம்
சிறந்தோங்க வழி இதுதான் என்று சொன்னார்
சிறு மதியார் அதனால்தான் சுட்டு விட்டார்

பிறந்த நாள் வணக்கம்

வணங்கி நின்றேன் என்னை இங்கு ஈன்றளித்த
வண்மை நிறை தாயவளைத் தந்தையினை
இணங்கி என்னை தமிழுக்காய்த் தருவதற்கு
என் தமிழை எனக்களித்த இறைவனுக்கு
கணங்கள் பல கணங்கள் என்னைக் காத்து நிற்கும்
கண்ணினிய அன்பருக்கு மேலும் மேலும்
எண்ணங்கள் செயல்கள் எல்லாம் நல்லவையாய்
எனக்களித்து உடனிருக்கும் இறைவனுக்கு

Wednesday, January 27, 2010

சூழ் கலி என்றால்

உலகுக்குவழி காட்டும் ஒரு நாட்டில் பிறந்தோம்
ஒருவருக்கு ஒருவர் பல பேதங்களை வளர்த்தோம்
பலருக்கு வழி காட்டும் பண்புகளை எல்லாம்
பாவிகளாய்ப் பதவிகட்காய் பறித்து விட்டார் தலைவர்
சிலருக்கு வாழ்வு அது சீரழிந்த வாழ்வு
சில்லறைக்காய்த் தன்மானம் விற்று விட்ட வாழ்வு
அழகுக்காய் கற்பை விற்ற அரசியலார் வாழ்வு
அவ் வாழ்வால் நம் வாழ்வை இழந்து விட்டோம் பாரீர்


நாணமென்ற பண்பிற்கே நாணம் வர வைத்தார்
நமையாள நாம் தேர்ந்த நம்முடைய தலைவர்
பேணுகின்றார் தம் குடும்பம் பிள்ளைகளையெல்லாம்
பேதலித்து நிற்கின்ற ஏழையரின் கூட்டம்
வாழ்வதற்கு வழி எதுவும் வகுத்தெடுக்கவில்லை
வயிற்றுக்குச் சோறிட்டு வாக்குகளைப் பெறுவார்
சூழ் கலி என்றால் இதுதான் என்று நாமும் நம்மை
சுத்தமாகச் சமாதானம் செய்து கொண்டு வாழ்வோம்

Tuesday, January 26, 2010

குடியரசு தின அணிவகுப்பும் நமது அரசியலாரும்

கண் கவரும் அணிவகுப்பு முப்படையின்
கம்பீர அணிவகுப்பு காண்கையிலோ
மண்ணிதனைக் காப்பதற்காய் இந் நாட்டு
மக்களினைக் காப்பதற்காய்த் தமையே தந்து
பெண்டு பிள்ளை அனைவரையும் விட்டு விட்டு
பெரிய மலைப் பனியினிலும் எல்லையெங்கும்
கண் துயில நேரமின்றிக் காத்து நிற்கும்
காளையரைக் காண்கின்ற அரசியலார்

எண்ணுவதேயில்லை இந்தத் தியாகம் தன்னை
எண்ணி விட்டால் தம் குடும்பம் பிள்ளையென்று
புண்ணாக்கி ஏழையரைப் புலம்ப விட்டு
பொதுப் பணத்தைத் தம் பணமாய் ஆக்கி ஊரில்
எண்ணில்லாச சொத்துகளைச் சேர்த்து நிற்கும்
இழி நிலையைக் கருதி நாணித் துயருறாரோ
வண்ண மய அணி வகுப்பு கண்ணில் நீரை
வரவழைத்த அணிவகுப்பு தலைவர் மாரே


கண்ணிருந்தும் குருடரென வாழுகின்ற
கண்ணியத்தை விற்று விட்ட திருடரென
மண்ணுக்குள் போவதற்குள் மண்ணிதற்கு
மானமுடன் காரியங்கள் செய்ய எண்ணும்
தன் மானம் ஒரு நாளும் வந்திடாதோ
தலைவர்களே தலைவர்களே கேள்வி ஈது
என் செய்ய இது எங்கள் விதிதான் என்றால்
எரிந்தவுடன் மறைந்தொழிவீர் ஒழிவீர் நீரே

பம்மாத்து நாள் இன்று

வா காந்தி என்று உம்மை அழைப்பதற்கு
வழியில்லை நாங்கள் தானே உம்மைக் கொன்றோம்
சீராக நீர் பெற்ற விடுதலையை
சீரழியச் செய்து நாங்கள் பெருமை பெற்றோம்
யார் யாரோ தலைவரிங்கு என்ன செய்ய
எவரெனினும் கோடிகளே இலக்கு இங்கே
பார் முழுக்கக் குடி ஆட்சி என்று பாடும்
பம்மாத்து நாள் இன்று படுத்துகின்றார்

மன்னராட்சி வந்திடாதோ

மகனைத் தேர்க் காலில் இட்டான் சோழன் அவன்
மங்கையின் முன் உயிர் துறந்தான் பாண்டியனும்
புகல வொண்ணாத் தவறதனால் கையைத் தானே
போக்கி நின்றான் பொற் கையின் பாண்டியனும்
தகதகக்கும் தலை கொடுத்தான் குமணனுமே
தமிழ் கேட்க தனைத் தந்தான் நந்தி வர்மன்
புகழோடு தவறுக்கும் கொடைக்கும் தம்மைப்
போக்கிக் கொண்ட மன்னராட்சி வந்திடாதோ

குடி அரசு தின வணக்கம்

கோட்டையிலே குடியரசுத் தலைவர் இன்று
கூண்டுக்குள்ளே நின்று கொண்டு கொடியேற்றுவார்
நாட்டில் உள்ள ஏழைகளோ வறுமைத் துன்பம்
நாளையும் தான் கொல்லுமென்றே துடி துடிப்பார்
வீட்டிற்காய்க் கோடிகளைச் சேர்த்து வாழும்
வெற்றுரையின் தலைவர்களோ வாய் வீசுவார்
பாட்டன் காந்தி வழியினிலே சென்றுயர்ந்த
பைத்தியங்கள் அனைவரையும் வணங்கி நிற்போம்

Monday, January 25, 2010

எனது பிறந்த நாள் 30-01-2010

தைப் பூசத் திருநாளில் பிறந்தேன் நானும்
தட தடவென் றோடுகிறது நாட்கள் கண்டேன்
இப் பூசம் அறுபத்து ஐந்து ஆகும்
இருக்கின்றேன் இன்னும் நான் இறையருளால்
மை பூசவில்லை இன்னும் தலையில் நானும்
மனத்திற்கு வயசின்னும் ஆகவில்லை
கைப் பிடித்துத் தமிழன்னை இன்னும் என்னை
கண்மணியாய்க் காக்கின்றாள் வணங்கி நின்றேன்

நான் அளித்த வாழ்த்து மடல்

நண்பர் சீனுவாசனுக்கு வாழ்த்து மடல் வழங்குகின்றேன்

பாமணிக்கு வாழ்த்து மடல் தருகின்றேன்

நண்பர் சீனுவாசன் எனக்கு மாலை அணிவிக்கின்றார்

இலக்கிய மன்றத்தை நிறுவிய கவிஞர் பாமணி நண்பர் சீனுவாசன்

தம்பி பாரதிமாறன் பேசுகின்றார்

பொருநை இலக்கிய வட்டத் தலைவர் அண்ணன் தளவாய் ராமசாமி பொன்.வள்ளிநாயகம் நெல்லை கபாலி அவர்களோடு

கரன் தொலைக்காட்சி தம்பி முத்தமிழ் உரையாற்றுகின்றார்

17-01-2010 தாமிரபரணி இலக்கிய மன்றத் துவக்க விழா

Sunday, January 24, 2010

எனது வாழ்த்துரை

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத் தலைவர் அண்ணன் எழுத்தாளர் பொன்னீலன் வாழ்த்துரை

இளசை அருணா அண்ணன் அவர்களின் எழுபது ஆண்டு இலக்கியச் சேவைக்கான விழா

Friday, January 22, 2010

சொல்லி அருள்

தூரம் எதுவும் தெரியவில்லை
தொலைவா அருகா புரியவில்லை
ஊரில் யாரும் அறியவில்லை
உண்மை உணர்வார் எங்கும் இலை
யாரும் அறியா வண்ணம் அதை
ஏன்தான் மறைத்துத் தொலைக்கின்றாய்
சேரும் வகையில் உயிர் பிரியச்
செய் வதென்னாள் சொல்லி அருள்

Thursday, January 21, 2010

பெண்கள் தெய்வங்கள் அல்ல என்ற தலைப்பில் உரை நிகழ்த்துகின்றேன்

மாணவியர்

மாணவியர்

மாணவியர்

நினைவுப் பரிசு வழங்குகின்றார் துணைமுதல்வர்

மாணவியர்

மாணவியர்

விழா மேடையில் ரோட்டரி சங்கத் தோழர்களோடு

தமிழ்த்தாய் வாழ்த்து

விழா மேடைக்குச் செல்லும் வழியில் மாணவியர்

சிவகாசி ராஜரத்தினம் வெடித் தொழிற்சாலையினரின் பெண்கள் கல்லூரி விழா துணை முதல்வரோடும் பேராசிரியைகளோடும்

தலைவர் கோசல்ராம் மணிவிழாவில் ராஜா சர் முத்தையா செட்டியார் ராமசுப்பிரமணிய ராஜா கோசல்ராம் அவர்கள் முன்னிலையில்உரை நிகழ்த்துகின்றேன்

கவியரசு கண்ணதாசன் அவர்களும நானும் மதுரையில் கலந்துகொண்ட நிகழ்ச்சி

1980 நாடாளுமன்றத் தேர்தலில் திருமங்கலத்தில் அன்னை இந்திரா கலைஞர் வருமுன்னர் 5மணிநேரம் பேசினேன் அன்னை இந்திராவின் பின்னால் நான் மாயத்தேவர் அழகிரிசாமி

கோவை அரிமா சங்கக் கூட்டம்

தவத்திரு தமிழ்ஞானத் தந்தை குன்றக்குடி அடிகளார் அவர்களோடு 50 ஆண்டு காலம் இருந்த அண்ணன் பரமகுருவோடு

காரைக்குடி கம்பன் கழகம் பட்டிமன்றம் நடுவர்

Wednesday, January 20, 2010

வலமிருந்து சோமு சதீஷ் பி.க.ந.க.அறக்கட்டளையின் இந்த வருடப் பொறுப்பாளர் பண்பிற் சிறந்த சிங்கப்பூர் அருணாசலம் அய்யா அவர்கள் பழநியப்பன் இராமநாதன்

பிள்ளையார்பட்டி திருக்குளமும் திருக்கோயிலும்

அன்பும் இன்முகமும் கொண்ட பிச்சைக் குருக்கள் அவர்களோடு பிள்ளையார் பட்டியில்

தேவகோட்டை அன்புப் பிள்ளைகள் சோமசுந்தரமும் கருப்பன் செட்டி என்ற சதீஷும்

பட்டுக்குருக்கள்

பட்டுக் குருக்கள் அவர் பரமனின் இனிய தொண்டர்
கட்டுக் குலையா மேனி கண்களில் கருணை வெள்ளம்
தொட்டுக் கொடுத்ததெல்லாம் துலங்கிடும் உயரும் வெல்லும்
தூய்மையாம் உள்ளம் தன்னால் தூயன ஒன்றே சொல்லும்
கெட்டவர் தம்மைக் கூடக் கேளிராய்க் கொண்டு வாழ்ந்தார்
கீழோர் மேலோர் என்றே கிழித்தவர் பார்த்ததில்லை
பட்டது தளிர்க்க வைக்கும் பண்புள்ள நல்ல வார்த்தை
பரமனின் விருப்பம் அவரைத் தம் பக்கம் அழைத்துக் கொண்டான்

Tuesday, January 19, 2010

பட்டுக்குருக்கள் நினைவு நாள் உரையும் மக்களும்

ஊருக்கு நல்லதே சொன்ன நல்லதே செய்த தேவகோட்டை பட்டுக் குருக்கள் நினைவு நாள்

கும்பகோணத்தின் பெருமை அண்ணன் கவிஞர் முகிலன் அவர் மகன் தமிழ்ச்செல்வன் எழுதிய நிலாச்சோறு நூலை அவர்தம் இல்லத்தில் வைத்துப் பெற்றுக் கொள்கின்றேன்

ஈரோடு இலக்கியப் பேரவை மகரிஷி அறக்கட்டளை மயிலானந்தன் ஈரோடு தமிழன்பன் தோழர் ஜீவபாரதியோடு

ஈரோடு சி.கே.கே.அறக்கட்டளைக் கவியரங்கம் தலைமை நான் வலதுபுறத்தில் இருந்து அருள்பிரகாசம் மரபின் மைந்தன் நெல்லை ஜெயந்தா பழநிபாரதி காமராஜ் ரேவதி கிருபாகரன்

காறித் துப்பும்

உண்மை சொல்ல முடியாராய் அஞ்சுகின்றார்
ஊமைகளைப் போல பலர் துஞ்சுகின்றார்
நன்மை செய்ய வேண்டியவர் கெஞ்சுகின்றார்
நாட்டு நிலை நினைத்துப் பலர் வெம்புகின்றார்
தன்மை இதை மாற்றுதற்கு கற்றோர் எல்லாம்
தாய் நாட்டு உணர்வோடு வருதல் வேண்டும்
புன்மை இதை நீக்காமல் போனோம் என்றால்
போ போ என் றெதிர்காலம் காறித் துப்பும்

வாரீர்

அனைவருமா தீயவர்கள் அன்னை நாட்டில்
ஐந்தேசத வீதம்தான் தீயவர்கள்
தனைக் காக்கும் அரசியலார் துணையினோடு
தாய் நாட்டைச் சுரண்டுவதே இவர்கள் வேலை
தினைத் துணையும் உண்மையில்லா இவர்கள் தன்னை
தேச மக்கள் அனைவருமே சேர்ந் தெதிர்த்தால்
நினைத்த நல்ல வழிகளிலே தாயாம் நாட்டை
நிமிர்ந்து நடை போட வைக்க முடியும் வாரீர்

அரங்கமும் சுவைஞர்களும்

தமிழ்நாடு முழுவதும் இருந்து வந்த மாணவ,மாணவியர்

கோவை இராமகிருஷ்ணா வித்யாலயத்தில் 4-12-2009 அன்றுசுவாமி விவேகானந்தரின் பெண்கள் பற்றிய கருத்துக்கள் குறித்து உரை நிகழ்த்துகின்றேன்

வாழ்க சாதி

சாதியினை ஒழிக்க வந்த தலைவரெல்லாம்
சாதியில் தான் வேட்பாளர் பொறுக்குகின்றார்
சாதிகட்கு தான் செய்த சலுகையெல்லாம்
சரியாகத் தேதி வாரி விளக்குகின்றார்
நீதிபதி எத்தனை பேர் காவற் றுறை
நியமித்த சாதியினர் எத்தனை பேர்
வாதிட்டுச் சாதியினை மக்கள் முன்னர்
வகை தொகையாய் ஒழிக்கின்றார் வாழ்க சாதி

நாணமில்லை

படிப்பாளி ஆக்குகின்றார் அனைவரையும்
பண்பாளி ஆக்குதற்கு விரும்பாராகி
எடுப்பார் கைப் பிள்ளையென ஆகிடாமல்
இழிந்துள்ள தலைவருக்கு இணையாய் வாழ
கெடுப்பதற்கே கல்வி யென்ற கீழ்மை நிலை
கேடு கெட்ட வணிகமென கல்வி இங்கு
தடுப்பதற்கு யாருமில்லை அகிம்சை வழித்
தந்தையவர் படம் உண்டு நாணமில்லை

இந்திய பண்பாட்டு நட்புறவுக் கழகத்தின் அகில இந்திய மாநாட்டில் அண்ணன் தா.பாண்டியன் அவர்களோடு 17-12-2009

Sunday, January 17, 2010

எம்.ஜி.ஆர்.

ஏழைகளின் மனத்தினிலே ஒரு தலைவன்
இன்றைக்கும் என்றைக்கும் இருக்கின்றானே
கோழைகளாய் அசிங்கமாக அவனைப் பேசி
கொலு வீற்றிருந்தார்கள் தன்னையெல்லாம்
மோழைகளாய் வீழ்த்தி அவர் தம்மின் முன்னால்
முதல்வரென ஏழைகளால் அவன் இருந்தான்
நாளை எந்த நாளும் அந்த எம்.ஜி.ஆராம்
நாயகனே ஏழைகளின் ஒரே தலைவன்

குறைந்திடல

கோயில் இருக்குது சாமி இருக்குது
குற்றங்கள் ஒன்றும் குறையவில்லை
நோயில் இருக்கின்ற நாடிதைக் காப்பாத்த
நூறு விதத் தெய்வம் போதவில்லை
பாயில் கிடக்கின்ற ஏழையின் வாக்கையும்
பக்குவமாகவே வாங்கி இங்கு
தாயும் பிள்ளையுமாய் நாட்டினை ஆள்கின்றார்
தரித்திரரைக் கண்டு நாணமில்லை


ஏறும் விலைவாசித் துன்பத்தில் சாகின்ற
ஏழை மக்கள் தம்மைப் பார்ப்பதில்லை
ஏறி ஏறி இவர் பயணித்த விமானத்தால்
ஏற்பட்ட செலவையும் கொடுக்கவில்லை
சாறு பிழிந்ததை உண்டு விட்டு இவர்
சக்கையையும் விற்று ஆடுகின்றார்
மாறு பாடு காணும் எண்ணமே இல்லாமல்
மக்களும் வீண் வாழ்க்கை வாழுகின்றார்


கோயில் கோயிலாகச் சென்று வணங்கியும்
கும்பிட்ட தெய்வங்கள் காக்கவில்லை
கோயில் வருமானம் தன்னையும் அரசியல்
கொள்ளையடிக்குது கேட்பதில்லை
வாயிலும் வயிற்றிலும் அடித்து அழக் கூட
வறுமையில் வாடுபவர்க் கியலவில்லை
தாயின் மணிக் கொடி தன்னை வணங்கிடத்
தன் மானம் மட்டும் குறைந்திடல

வெற்றி வெற்றி

எழுதியது அனைத்தையுமே நூல்களாக்கி
ஏற்றிடலாம் நூலகங்கள் அனைத்திற்குள்ளும்
பழுதின்றி ஆட்சியாளர் தனைப் புகழ்ந்து
பதம் பணிந்து அவர்க்காகும் தொண்டு செய்து
தொழுவதிலே புது விதங்கள் கண்டு போற்றி
தூய்மை வாய்மை நேர்மையெல்லாம் தூக்கி வீசி
அழுவதுவும் சிரிப்பதுவும் கூட இங்கு
அவர் சொல்லச் செய்தாலே வெற்றி வெற்றி

விளையாட்டை ஒழிப்பதற்காய்

ஆக்கி வீரர் அலறுகின்றார் மதிப்பு இல்லை
அன்போடு உதவி செய்ய ஆளுமில்லை
போக்களிந்து போனதாகப் புலம்புகின்றார்
புத்தியில்லா அரசு ஏதும் செய்யவில்லை
தாக்குகின்றார் பிந்த்ராவும் துப்பாக்கியால்
தாய் நாட்டின் பெருமையினைக் காத்த வீரர்
ஆக்குகின்றார் அரசியலார் அனைத்தையுமே
அசிங்கமென விளையாட்டை ஒழிப்பதற்காய்

மயங்கி நின்றார்

மக்களுக்காய் உழைக்க வந்த அனைவருக்கும்
மாசச் சம்பளமெல்லாம் கூட்டியாச்சு
மக்களிடம் கேட்காமல் அவர்களாவே
மனசு கொண்டு கூட்டிக் கொண்டார் வாழ்க அவர்
சொக்கனுக்கும் சுப்பனுக்கும் சம்பளத்தை
சுளையாகக் கொடுப்பதொரு நாளுமில்லை
மக்கள் என்ன மக்கள் இவர் இடைத் தேர்தலில்
மன்னர் தரும் அன்பளிப்பில் மயங்கி நின்றார்

Friday, January 15, 2010

பட்டுக்கோட்டை ஜேசீஸ் மாநில மாநாட்டில் உரை நிகழ்த்துகின்றேன்

பட்டுக்கோட்டை ஜேசீஸ் குத்து விளக்கேற்றல்

பட்டுக்கோட்டை ஜேசீஸ் மண்டல மாநாடு

பாவை விழா விளம்பரம்

வழக்காடு மன்றம் ஏ.பி.சி.வீ.மகாலட்சுமி மகளிர் கல்லூரி பேராசிரியை திருமதி க.சுப்புலட்சுமி சேலம் ஏ.வி.எஸ்.கலைக் கல்லூரி பேராசிரியர் வே.சங்கரநாராயணன்,

வி.பி.எம்.எம்.கல்லூரியில் சுவைஞர்கள்

வி.பி.எம்.எம்.கல்லூரியில் சுவைஞர்கள்

வி.பி.எம்.எம்.கல்லூரியில் சுவைஞர்கள்