கண் கவரும் அணிவகுப்பு முப்படையின்
கம்பீர அணிவகுப்பு காண்கையிலோ
மண்ணிதனைக் காப்பதற்காய் இந் நாட்டு
மக்களினைக் காப்பதற்காய்த் தமையே தந்து
பெண்டு பிள்ளை அனைவரையும் விட்டு விட்டு
பெரிய மலைப் பனியினிலும் எல்லையெங்கும்
கண் துயில நேரமின்றிக் காத்து நிற்கும்
காளையரைக் காண்கின்ற அரசியலார்
எண்ணுவதேயில்லை இந்தத் தியாகம் தன்னை
எண்ணி விட்டால் தம் குடும்பம் பிள்ளையென்று
புண்ணாக்கி ஏழையரைப் புலம்ப விட்டு
பொதுப் பணத்தைத் தம் பணமாய் ஆக்கி ஊரில்
எண்ணில்லாச சொத்துகளைச் சேர்த்து நிற்கும்
இழி நிலையைக் கருதி நாணித் துயருறாரோ
வண்ண மய அணி வகுப்பு கண்ணில் நீரை
வரவழைத்த அணிவகுப்பு தலைவர் மாரே
கண்ணிருந்தும் குருடரென வாழுகின்ற
கண்ணியத்தை விற்று விட்ட திருடரென
மண்ணுக்குள் போவதற்குள் மண்ணிதற்கு
மானமுடன் காரியங்கள் செய்ய எண்ணும்
தன் மானம் ஒரு நாளும் வந்திடாதோ
தலைவர்களே தலைவர்களே கேள்வி ஈது
என் செய்ய இது எங்கள் விதிதான் என்றால்
எரிந்தவுடன் மறைந்தொழிவீர் ஒழிவீர் நீரே
Tuesday, January 26, 2010
குடியரசு தின அணிவகுப்பும் நமது அரசியலாரும்
Subscribe to:
Post Comments (Atom)
0 மறுமொழிகள்:
Post a Comment