Monday, May 11, 2009

தமிழராவார் பதினெண் கீழ்க் கணக்கு நூல்கள் ஏலாதி பழம் பாடல் புதுக் கவிதை

எளிது எது அரிது எது என்பதனை
ஏலாதி சொல்லுகின்றார் வெண்பா ஒன்றில்
எளிது உடன் சாவதனைத் தேடி விடல்
இருந்து நல்ல கல்வி வழி ஒழுக்கத்தோடு
பொருந்தும் நல்ல வாழ்க்கையதை வாழ்ந்துவிடல்
புகழதனைத் தரும் ஆனால் அது அரிது
இருந்து மண வாழ்க்கையினை அடைந்து விடல்
எல்லார்க்கும் மிக எளிது ஆனால் அந்த


பொருந்தும் மண வாழ்க்கையினைச் சிறந்ததாக்கி
பொறுப்போடு பற்றற்று ஒழுக்கமாக்கி
சிறந்த ஒரு வாழ்க்கையினைச் செப்பமாக்கல்
சிந்தித்தால் மிக மிகவே அரிது ஆகும்
துறந்து விட்டேன் என்று சொல்லி துறவியாதல்
தொல்லுலகில் யாவர்க்கும் எளிது ஆகும்
நிறைந்து அதில் நிற்பதுவும் புலன்கள் தன்னை
நீத்து அதில் வெல்வதுவும் அரிது ஆகும்


திறந்து விட்ட வாய் வழியாய்ப் பலவிதமாய்த்
தேராமல் பல சொல்லல் எளிது ஆகும்
உணர்ந்து அவை அனைத்தையுமே செயலாய் ஆக்கல்
உம்மாலே முடியுமோ அரிதரிது
சிறந்த இந்தச் சேதியில்லாம் ஏலாதியில்
செப்புகின்றார் கணி மேதை எனும் புலவர்
அற நூலாம் இதைத் தமிழர் கற்று விட்டால்
அதன் பின்னர் அவரேதான் தமிழராவார்


ஏலாதி

சாவது எளிது அரிது சான்றாண்மை நல்லது
மேவல் எளிது அரிது மெய் போற்றல் - ஆவதன் கண்
சேறல் எளிது நிலை அரிது தெள்ளியராய்
வேறல் எளிது அரிது சொல்

0 மறுமொழிகள்: