Thursday, May 21, 2009

குறட் கருத்து

தவநெறியாய் வாழுகின்றார் தம்மைவிடத்
தனி மனிதன் உயர்ந்தவனாய் நிற்பான் என்று
புவனம் எல்லாம் வாழ்வதற்கு வழிகள் சொன்ன
பொது மறையில் வள்ளுவனார் சொல்லுகின்றார்
அவர் உடம்பை வருத்தி உண்ணா நோன்பதனை
அடிக்கடியே மேற் கொள்ளும் அவரை விட
பிறர் சொல்லும் இனிமையற்ற சொற்கள் தன்னை
பெரிதாக்கார் தன் பின்தான் துறவி யென்றார்



பசி தாங்கி பல விதத்தில் தவங்கள் செய்யும்
பரம் தேடி நின்றிருக்கும் தவ நெறியார்
கசிகின்ற காதலிலே கடவுளையே
காலமெல்லாம் நினைக்கின்ற மிகப் பெரியார்
பசி தீர்த்து மற்றவரின் துன்பம் தீர்த்து
பண்பதுவே பசி தீர்த்தல் என்று வாழும்
இசை வாழ்வாய் தன் வாழ்வை மாற்றிக் கொண்ட
எளியார் பின் துறவியரை வைப்பேன் என்றார்


திருக்குறள்

உண்ணாது நோற்பர் பெரியர் பிறர் சொல்லும்
இன்னாச் சொல் நிற்பாரின் பின்


ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்

0 மறுமொழிகள்: