Monday, May 11, 2009

போற்றி நிற்கும்

நாள் தோறும் அனைவரிடம் அன்பு செய்யும்
நல்லுறவைத் தந்திட்ட தமிழர் நாட்டில்
பாழ் செய்யும் பழக்கத்தைப் பாவியர்கள்
பரப்புகின்றார் அந்தோ நாம் என்ன செய்ய
தோள் தழுவிக் கருவுற்று பெற்ற அன்னை
தோகைக்கு ஒரு நாளாம் தந்தையர்க்கோ
நாள் என்று ஒன்று உண்டாம் காதலர்க்கும்
நாளொன்றாம் வெவ்வேறாயச் சொல்லுகின்றார்


பாழ்பட்டீர் வெளி நாட்டான் வழக்கையெல்லாம்
பைந்தமிழர் நாட்டினுள்ளே கொண்டு வந்தீர்
சூழ்ந்து நிற்கும் நல்லன்பும் நல்ல பண்பும்
சொத்தாகக் கொண்டீரே என்ன கூத்து
வாழ்நாளில் எந்நாளும் அனைவருக்காய்
வழங்குதற்குச் சொல்லி நின்ற வள்ளுவரின்
ஆழ் மனத்துப் பேரழகே என்றும் எங்கும்
அய்யா நம் பெருமையினைப் போற்றி நிற்கும்

1 மறுமொழிகள்:

said...

அம்மணமாய் அவன்சென்றால் இவனும் செல்வான்
அடுத்தவனின் வழிசென்றே அறிவைக் கொல்வான்
கம்மெனக் கண்டிருக்கக் கடவாய் என்பான்
கருத்தேதும் சொன்னாலும் கருத மாட்டான்
செம்புலம்பெய் நீர்போலச் சென்று சேர்வான்
செருப்பைக்கொண் ட்டித்தாலும் திருந்த மாட்டான்
பொம்மையென வாழும்இப் புலையர் தம்மைப்
புகழ்வள்ளு வர்வரினும் திருத்த ஆமோ?