Friday, February 5, 2010

குறளும் கருததும் 4

மனித வாழ்க்கை தருகின்ற பல அய்யப்பாடுகள் குறித்து வள்ளுவரைத் தவிர யாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள இயலும்.
என் தந்தை எனக்கு சிறு வயதில் இருந்தே சொல்லித் தந்தது. என்ன அய்யம் ஏற்படினும் அதனை ஒரு கேள்வியாக்கிக் கொண்டு
வள்ளுவரிடம் செல் உறுதியாகப் பதில் உண்டு என்பார்கள்.


மக்களுக்கு எப்போதும் இருக்கின்ற ஒரு பெரிய அய்யம்.

தவறுகளுக்கு அஞ்சாமல் தவறுகளையே வாழ்க்கையாக்கி வருவாய் ஈட்டி பெருஞ் செல்வந்தர்களாக வாழ்ந்து வருபவர்களும்
நேர்மை நாணயம் ஒழுக்கம் என்று உண்மையாக மனிதர்களாக வாழ்பவர்கள் வறுமையில் வாடுவதும். எதனால் என்ற அய்யத்திற்கு
விடை கேட்டு வள்ளுவரிடம் சென்றேன்.

அவரிடம் எனது அய்யம் குறித்து வினவினேன்.

நீ என்ன கருதுகின்றாய் என அவர் என்னையே வினவினார்

தவறானவர்கள் மிகப் பெரிய இடங்களிலே இருக்கின்றனர். அவர்களையும் இந்த மக்கள் வணங்கி நிற்கின்றனர்.
கோயில்களில் கூட அவர்கள் எல்லோருக்கும் முன்னர் நின்று இறைவனைத் தொழுகின்றார்கள். மக்கள் அங்கேயும் கூட அவர்களை
வணங்கி நிற்கின்றனர்.


நல்லவர்களை மக்கள் வணங்கவில்லை என்கின்றாயா என்றார்

இல்லை அவர்களையும் வணங்கத்தான் செய்கின்றனர்.

இரண்டிற்கும் ஏதாவது வேறுபாடு கண்டாயா என்றார்

சரியாகப் பார்க்கத் தவறி விட்டேன் என்றேன்.


இனிப் போய்க் கவனி.ஒன்றைப் புரிந்து கொள்வாய் என்றார் பேராசான்.

கள்ளச் சாராயம் காய்ச்சுவது விபச்சாரத்தைத் தொழிலாகச் செய்வது ஏழைகளின் உழைப்பைத் திருடுவது. எவர்
சொத்தையும் அபகரித்துக் கொள்வது என்று வாழ்பவர்களை ஊரில் மக்கள் வணங்குவதும் அவர்களைக் கண்டால் குழைந்து
நிற்பதும் வார்த்தைக்கு வார்த்தை அய்யா அய்யா என்பதும் அவர்களைத் தொழுவது போல நிற்பதுவும் பார்த்த நீ கொஞ்சம்
அங்கேயே நின்று கவனித்திருந்தால்தான் உண்மை உனக்குப் புரிந்திருக்கும் என்றார்,

ஒருமுறை நின்று பார். அந்தத் தவறானவன் அந்தப் பக்கம் போனதும் வணங்கி நின்றவர்கள் கடவுளிடம்
சினம் கொள்வதோடு நிறுத்திக் கொள்ள மாட்டார்கள். இவனையெல்லாம் உடனடியாகத் தண்டிக்காமல் விட்டாயானால் எங்களுக்கு
உன் மீது உள்ள பக்தியே போய் விடும் என்று வேகப் படுவார்கள்.இவனுக்கு ஒரு சாவு வராதா. நல்லவர்கள் வாழ்கின்ற
இடத்தில் இவனைப் போன்றவர்களையும் இறைவன் வாழ வைத்துள்ளானே என்று மிக மிக உள்ளம் வருந்துவார்கள்,


அதே நேரம் நல்லவர்களைக் கண்டவுடன் முக் மலர்ந்து தாள் பணிந்து அவர்களின் ஏழ்மை நிலை குறித்துத்
தங்களின் மன வருத்தங்களை அவர்களிடம் பகிர்ந்து கொண்டு இறைவன் அவர்களுக்கு உடனடியாக எல்லா உதவிகளையும் செய்ய
வேண்டும் என்று இறைவனிடம் மன்றாடுவார்கள். அய்யா உங்களைப் போன்றவர்களால்தான் மழை பெய்கின்றது. அச்சப்பட்ட ஏழை
மக்கள் உங்களைப் போன்ற நேர்மையாளர்களைப் பார்க்கும் போதே கடவுளை நம்புகின்றோம்.என்றெல்லாம் அவரோடு உரை
யாடுவார்கள். நாங்கல்லாம் உங்கள் பிள்ளைகள் என்பார்கள்.

புரிகின்றதா தம்பி. மக்களால் இவர்கள் இருவருமே நினைக்கப் படுவார்கள். ஆனால் நினைக்க்ப் படுகின்ற முறைதான்
வேறு. தீயவர்களை மனம் நொந்து சாபங்களோடு வணங்குவார்கள். நல்லவர்களை அகமும் முகமும் மலர தெய்வமாகவே வணங்கு
வார்கள்.

குறள்

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்

0 மறுமொழிகள்: