Wednesday, February 24, 2010

நாள் என்று் வந்திடுமோ

பணம் சேர்த்துப் பணம் சேர்த்து வாழ்க்கையினை
பகட்டாக வாழுகின்ற தலைவர் கண்டு
பணம் சேர்க்க விழைகின்றார் பல பேர் இங்கு
பாவங்கள் செய்வதற்கும் அஞ்ச மாட்டார்
குணம் ஒன்றே உயர்வென்று உலகிற் கெல்லாம்
குறள் சொன்ன உயர்வெல்லாம் சொல்லி நிற்பார்
பணம் சேர்க்கும் போதெல்லாம் குறளை மட்டும்
பக்கத்தில் வருவதற்கே அனுமதியார்


மரம் வளர்க்கச் சொல்லுகின்ற தலைவர் வீட்டில்
மர வேலைப் பாடுகள் ஆகா ஆகா
தினம் இங்கு தவறுகளே செயும் தலைவர்
திருவள்ளுவர் சிலையின் அருகே உள்ளார்
மனம் என்று ஒன்று மட்டும் இருந்த தென்றால்
மாறி மாறி அவர் தம்மைச் சுடவே செய்யும்
குணம் விட்ட காரணத்தால் கொடுமை கண்டு
கொதிக்கின்ற மனம் தன்னைக் கொன்றே போட்டார்


கையூட்டுப் பெற்று விட்டார் என்று தினம்
கைதாகும் பைத்தியங்கள் படத்தைப் போட்டு
மெய் காத்து நிற்பதுவாய் நடிக்கின்றார் காண்
மெய்ம்மை உணர்வற்று நிற்கும் செய்தியாளர்
பொய் பேசி மக்களையே ஏய்த்து வாழும்
பொறுப்பற்ற அரசியலார் படத்தை மட்டும்
கையூட்டின் பெருந்தலைவர் என்று போடக்
கையாலே யாகாத செய்தியாளர்

உடல் விற்றார் என்று சொல்லி பெண்களினை
ஊர் தோறும் பிடிக்கின்ற காவலர்கள்
கடன் தந்து அவர்களது வறுமை தன்னால்
காம விளையாட்டிற்குக் கொண்டு செல்லும்
திடமான மனிதர்களை அரசியலார்
தேடி என்றும் வளர்த்து நிற்கும் கொடுமையினை
புடம் போட்டு மக்களுக்குக் காட்டுகின்ற
பொன்னான நாள் என்று வந்திடுமோ

1 மறுமொழிகள்:

said...

சாட்டையடி கொடுத்தீர்கள்..!!
திருந்துமா தமிழ்கூறும் நல்லுலகம்..!!
வருந்துமா மனமுவந்து இவைதனுக்கே..!!