Saturday, February 6, 2010

குறளும் கருத்தும் 5




ஊரிலேயே மிகப் பெரிய செல்வந்தக் குடும்பம். ஊர்மக்களின் காவலுக்காகவே உள்ளவர் போன்றவர்.அவர்கள் குடும்பத்தின்
மூத்த மகன் பக்கத்து ஊர்களின் இரந்து(பிச்சை) வாழ்கின்றார்.





என்னால் அதனைப் புரிந்து கொள்ள இயலவில்லை. தந்தையும் உடன் பிறந்தவர்களும் அப்படி இருந்தால் நான் வருந்த மாட்டேன்
முந்தித் தவம் கிடந்து முந்நூறு நாள் சுமந்து பெற்ற தாயும் அவர் குறித்துக் வருத்தம் கொள்வதில்லை. அவரைக் கண்டு கொள்வதும்
இல்லை.

எனக்கு மிக மிக வருத்தம் தந்த நிகழ்வு என்னவென்றால். பக்கத்து ஊர்க் கோயிலுக்கு இறைவனை வணங்கிடச் சென்றிருந்தேன்.
கோயில் வாசலில் கையேந்தி நின்று கொண்டிருந்த அவரை அங்கே வழிபாடு செய்ய வந்த அவரின் தாய் கண்டு கொள்ளவே இல்லை
எனக்கு மிகுந்த அதிர்ச்சி. இப்படியும் ஒரு தாய் தாய்மைப் பண்பற்றவராக இருப்பாரா என்று. வழி பாடு முடிந்து வெளியே வரும்
போதேனும் காண்பார் என்று கருதினேன். அங்கே ஒரு உயிர் இருப்பதாகவே அந்த அம்மையார் கருதவில்லை. வெளியில் வந்தார்.
மகிழூந்தில் ஏறினார். சென்று விட்டார்.


வருத்தம் அதிகமாக வள்ளுவப் பேராசானை நாடிச் சென்றேன்.


என்னைப் பார்த்தவுடன் என் முகவாட்டம் தெரிந்து கொண்டார்.


என்ன வாட்டம் என்றார் தந்தை.


பெற்ற மகனின் மீது பற்றில்லா ஒரு தாயைக் கண்டு கொண்ட வருத்தமென்றேன்


தாய்மை என்றால் என்ன என்று நீ அறிவாயா என்றார்


பதில் சொல்ல சக்தியற்று நின்றேன்.


சொல் என்றார்.


ஊரிலேயே உயர்ந்த குடும்பம். ஊர்மக்களுக்காக கல்விக் கூடம் மருத்துவமனை. பசிப்பிணி தீர்க்கும் நல்ல ஏற்பாடுகள் என
அனைத்தையும் செய்திருக்கும் குடும்பத்தின் முதல் மகன் இரந்து வாழ்கின்றார்.கோயில் வாசலில் அவர் இரந்து நிற்பதனைக் கண்டு
கூட அந்தத் தாய்க்கு வருத்தமில்லை என்பது மட்டுமல்ல அய்யா அப்படி ஒரு மகன் இருந்த்தான் என்கின்ற நினைவு கூட அந்தத்
தாய்க்கு இல்லை. அவரைத் திரும்பிக் கூடப் பார்க்காமல் போகின்றார் என்றேன்.


அவருக்கு ஒன்றுமே அவர்கள் தந்ததில்லையா என்றார்.


இல்லை அவர் தனியாக வாழ வேண்டுமென்று விரும்பினார். அவருக்கு வேண்டிய செல்வங்கள் தந்துதான் அனுப்பினர்.என்றேன்


அந்த செல்வங்கள் என்ன ஆயிற்று என்றார்.


அவருக்கு நல்ல நட்பில்லை.அவர்களாலேதான் குடும்பத்தையே அவர் பிரிந்தார். எல்லாத் தீய வழக்கங்களுக்கும் ஆளானார்.
ஊரில் ஏழைப் பெண்கள் நிம்மதியோடு வாழ இயலாத சூழல்.அனைத்தையும் தீமைகளிலேயே இழந்தார் என்றேன். ஆனாலும் அந்தக்
குடும்பமே செல்வத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கையில் அவரை இப்படி விடலாமா? அதிலும் பெற்ற தாய் என்று நின்றேன்.


தந்தை வள்ளுவர் பேசலானார். நல்ல வழிகளிலே அவர் அந்தச் செல்வத்தை செலவிட்டு அழித்திருந்தாரானால் அந்தத்
தாயைப் போல் மகிழ்ச்சி யார் அடைவார்கள். தீய வழிகளிலே அனைத்தையும் அழித்து மக்கள் அனைவருக்கும் துன்பங்கள் தந்துள்ள
அவரை அந்தத் தாய் எப்படி மகன் என்று ஏற்றுக் கொள்வார்.வறுமை கூட நல்வழியில் வந்தால்தான் தாயர் அதனை ஏற்றுக்
கொள்வர். அறத்திற்குப் புறம்பாக வந்த வறுமை என்றால் பெற்ற தாயே அந்த மகனை தன் மகன் என்று எப்படிப் பார்ப்பாள்
இனிமேலேனும் முழுமையும் தெரிந்து கொண்டு பேசு என்றார்.


தந்தையை வணங்கி நிற்கின்ற பெரும் பேறு அன்றும் கிடைத்ததை நினைத்து இறைவனுக்கு நன்றி சொல்லி நின்றேன்.


குறள்

அறஞ்சாரா நல்குரவு ஈன்ற தாயானும்
பிறன் போல நோக்கப் படும்

3 மறுமொழிகள்:

said...

வணக்கம் அய்யா,

வள்ளுவனின் வாக்குகளை எளிய தமிழில் கதையுடன் சேர்த்துத் தருவது மிக நன்றாய் இருக்கிறது. தொடரட்டும் உங்கள் தமிழ்த்தொண்டு.

வணக்கம்.

said...

அதேபோல எல்லா குறளுக்கும் கதை சொல்ல முடிந்தால் ஒரு வித்தியாசமான முயற்சியாகவும், குறளை தமிழ்ச் சமூகத்திற்கு மீள் அறிமுகம் செய்த பாக்கியமும் கிடைக்கும்.

வணக்கம்.

said...

நல்ல வழி சொன்னீர்கள் இனிய நண்ப
நான் முயன்று பார்க்கின்றேன் இறையருளால்
வல்லவரின் நல் மொழியை குறளை இங்கு
வகைப்படுத்தித் தொகைப்படுத்தித் தர முயல்வேன்

வாழ்க தமிழுடன் நெல்லைகண்ணன்