Monday, February 1, 2010

குறளும் கருத்தும் மூன்று

ஒரு நாள் தக தகக்கும் மாலை நேரம் . ஞாயிறு மஞ்சள் குளித்தாற் போல காட்சி தந்து
கொண்டிருந்தான். வள்ளுவப் பேரறிஞர் முன்னர் நிற்கின்றேன். எனது நண்பர் ஒருவரைப் பற்றி அவரிடம் சொல்லிக் கொண்டிருக்கின்றேன். அவர் கல்வி கேள்விகளில் சிறந்தவர்.நிறையப் படித்தவர். மிகப் பெரிய அறிவாளி என்றெல்லாம் மிகுந்த மகிழ்ச்சியோடு சொல்லிக் கொண்டிருக்கின்றேன். கேட்டுக் கொண்டேயிருந்த வான் புகழ் வள்ளுவர் சிரித்துக் கொண்டேயிருந்தார்.நான் அவர் எழுதியுள்ள நூற்களைப் பற்றியெல்லாம் அவரிடம் வரிசையாகச் சொல்லிக் கொண்டேயிருக்கின்றேன். பேராசான் சிரித்துக் கொண்டேயிருந்தாரே யொழிய ஒன்றும் சொல்லவில்லை. எனக்கு நாம் ஏதோ தவறுதலாகப் பேசிக் கொண்டிருக்கி றோம் போல என்ற அய்யப்பாடு வந்து விட்டது.

அமைதியானேன்

வள்ளுவப் பேராசான் கேட்டார் மிகப் பெரிய அறிஞர் உன் நண்பர் அப்படித்தானே என்று.

நான் மீண்டும் அடுக்கலானேன்.

சரி இத்தனை படித்திருந்தால் அவர் ஒரு அறிஞர் என்று யார் உனக்குச் சொன்னது என்றார்

என்ன சாமி அதுதானே உண்மை என்றேன்

மீண்டும் கேட்டார் நிறையப் படித்திருந்தால் அவர் அறிஞர் என்று உறுதி படச் சொல்லுகின்றாயா என்று

திரும்பத் திரும்பக் கேட்கின்றார் என்றவுடன் எனது குரல் அடை பட்டு விட்டது.

சொல் என்றார்.

நான் அமைதியானேன்

அறிவு என்றால் என்ன என்று அடுத்து ஒரு கேள்வி கேட்டார்.

யாருக்கு யார் விடையளிக்க முற்படுவது. அமைதி காத்தேன்

சிரித்தார்

கல்வியல்ல படிப்பதல்ல அறிவிற்கு அடிப்படை. அடுத்த உயிர்கள் படுகின்ற துன்பத்தை தனது துன்பமாகக் கருதி அதனைத் தீர்க்க எவன் முற் படுகின்றானோ அவன்தான்
அறிவுடையவன்.

உனது நண்பர் அப்படி உயிர்க் குலத்தின் மேல் காதல் கொண்டு மற்றவர் துன்பத்தைத் தனக்கு வந்த துன்பம் போலவே கருதி துடிதுடித்து யாருக்கேனும் உதவி செய்து மகிழ்ந்துள் ளாரா. அன்று என்னிடம் வா நான் ஒத்துக் கொள்கின்றேன் அவரை அறிஞர் என்று.

வாயடைத்து நின்றேன். ஆமாம் அறிவு என்பது தன் வயிற்றையும் தன் பெண்டு பிள்ளைகள் வயிற்றையும் நிரப்புவதா. கோடிக்கணக்கில் சொத்துக்களைச் சேர்த்து வைப்பதா.

பேரறிஞர் சொல் எத்தனை உண்மையானது.

குறள்

அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின் நோய்
தந்நோய் போல் போற்றாக் கடை

0 மறுமொழிகள்: