Sunday, April 20, 2008

கட்டாயம் வேணும்

அய்யா நான் எழுதியுள்ள கதைகள் நூறு
அப்படியே உங்களுக்கு அனுப்பியுள்ளேன்
பொய்யாத பொய்யென்று நாவல் ஒன்று
போட்டேன் நான் இவ்வாண்டு அனுப்பியுள்ளேன்
கையாலே செய்து தரும் விருது பல
கழகங்கள் ஊர் ஊராய்ச் செய்து தந்தார்
மெய்யான அரசாங்க விருது ஒன்று
மேலிடத்தில் சொல்லி வாங்கித்தரவே வேண்டும்.

இருப்பேனோ மாட்டேனோ சாவதற்குள்
எப்படியும் அரசாங்க விருது வேண்டும்
உருப்படியாய் எழுதவில்லை என்று சொல்லும்
ஒதவாக்கரைப் பேச்சை ஒதுக்கித்தள்ளும்
படிப்படியாய் விருதளித்த பாங்கை எல்லாம்
பார்த்ததனால் கேட்கின்றேன் தந்து விடும்
கடுப்படிக்க வேண்டாம் அன்னை தமிழ்
கட்டாயம் உமைக் கேள்வி கேக்க மாட்டா!

தடுப்பதற்கு எவன் இருக்கான்? சொன்னாக்கேளும்
தருவதுதான் உமக்கு வழி முன்னே வாரும்!
இடுப்பழகுப் பொண்ணா நான் பொறந்திருந்தா
எப்பமோ தந்திருப்பீர் விருதை எல்லாம்!
உடுக்கடிக்க பயலெல்லாம் வாங்கிப்புட்டான்.
ஒமக்கென்ன கட்டாயம் வேணும் தாரும்!
அடிக்கடியா கேப்பேன் நான் சொன்னாக்கேளும்
அய்யா இந்த வருசம் மட்டும் எனக்குத்தாரும்!

2 மறுமொழிகள்:

said...

///இடுப்பழகுப் பொண்ணா நான் பொறந்திருந்தா
எப்பமோ தந்திருப்பீர் விருதை எல்லாம்!
உடுக்கடிக்க பயலெல்லாம் வாங்கிப்புட்டான்.
ஒமக்கென்ன கட்டாயம் வேணும் தாரும்!///

விருதுகளின் அவலத்தை விளங்கச் சொன்னீர்
எருதுகள் அங்கே எப்படி உணரும்?

said...

உமது வார்த்தைகளே அரிது..அரிது..விருதெல்லாம் உமக்கு சிறிது..சிறிது..இருந்தாலும் காத்திருக்கு உமக்கென்று ஏதோ ஒன்று பெரிது...விருது...அதோ பாருங்க...வருது..வருது..