தமிழ்த் தாயார் ஈன்றெடுத்த காமராஜர்
தாய் நாட்டைக் காக்க வந்த பீமராஜர்
அமிழ்தான தமிழ் மொழிக்கு உண்மை ராஜர்
அகிலமெல்லாம் தமிழ் கொணடு சென்ற ராஜர்
வட புலத்தில் காங்கிரஸின் தலைவராகி
வாயாடி நின்ற தன்புத் தமிழிலேதான்
கடல் கடந்து ரஷ்ய நாட்டில் நின்ற போதும்
கனித் தமிழே பேசி நின்ற தனித் தமிழர்
தான் பெறவே இயலாமல் போன கல்வி
தமிழ் ஏழை அனைவருக்கும் தந்த தெய்வம்
ஊன் உடம்பு உயிர் தந்த தாய்க்குக் கூட்
உண்மைக்குப் புறம்பாக உதவாத் தேவன்
ஏன் என்று எதனையுமே கேட்டுக் கேட்டு
ஏழைகட்காய்ச் செய்து நின்ற மாமனிதன்
வான் சென்றான் என்கின்றார் இல்லையில்லை
வாழ்கின்றான் எம்மோடு இன்றும் இங்கே
ஏழையெனப் பிறந்தான் தான் உயர்ந்த போதும்
ஏழையென்றே வாழ்ந்தான் காண் தோல்வி தந்தார்
கோழையென அழுதானா இல்லை என்னைக்
கூப்பிடுங்கள் என்றெல்லாம் குமுறினானா
வாழையடி வாழையென காந்தி பேரை
வாழ்விக்க வந்தவன் காண் செல்வனான்
கூழையென நின்றார்க்கு கல்வி யெனும்
கொடை அளித்தான் அதனாலே செல்வனான்
ஏழையென்று சொல்லாதீர் அவனை எங்கும்
ஏற்றங்கள் அவனாலே பெற்ற நீவிர்
வாழையடி வாழையென கல்வி இன்று
வந்ததுங்கள் வீட்டிற்குள் அவனால்ன்றோ
பேழையென நெய்வேலி திருச்சியிலே
பேர் சொல்லும் மிகுமின் நிறுவனம் தான்
வாழ்வதற்கு அனைவருக்கும் உணவளிக்கும்
வயற்காட்டுத் தோழருக்காய் அணைகள் தந்தான்
ஊழை வெல்ல முடியாராய் ஒடுக்கப் பட்டோர்
ஒய்ந்திருந்த நேரத்தில் எழுந்து வந்தான்
கோழை மனம் விட்டவரும் கொடிகள் ஏந்தி
கொள்கை கண்டு வெற்றி பெற வழிகள் செய்தான்
ஏழையல்ல செல்வன் அவன் என்றே சொல்வேன்
ஏனென்றால் செழுங் கிளையைத் தாங்கி நின்றான்
நாளை வரும் இளைஞ்ருக்கு இந்தச் செய்தி
நல்கி நிற்பீர் ந்ன்றி கொல்லா நற்றமிழீர்
Monday, April 28, 2008
தமிழர் காமராஜர்
Subscribe to:
Post Comments (Atom)
6 மறுமொழிகள்:
காமராஜர் பீமராஜர் என்று சொன்னால்
காந்திமகான் தருமரெனக் கொள்ளலாமோ
ஆமென்றால் பண்டிதராம் அருமை நேரு
அர்ச்சுனனாய் நிற்கின்றார் அலவோ அய்யா!
தேமதுர விருத்தத்தில் விருதுப்பட்டி
தூயவரைக் கவிதையிலே படம்பிடித்தீர்
சேமமுறு நகுலனொடு சகாதேவர்கள்
சரித்திரத்தில் யாரென்று சொல்வீர் அய்யா!!
நகுலனென்றால் சாஸ்திரியார்
கொள்க அய்யா
நல்ல சகாதேவன்
ஜெகஜீவன்ராம் தானே
புகல வைத்த உந்தமக்கு
நன்றி சொன்னேன்
புலவருக்கு மீண்டும் ஒரு
வணக்கம் தந்ந்தேன்
தங்கள் நெல்லைக்கண்ணன்
பாரதத்தின் பெருமைதனைக் காத்துநின்ற
பாண்டவர்கள் யாரென்ற பதிவை இங்கே
கார்வண்ணன் கண்ணன்தான் அறிவார் என்ற
காரணத்தால் நான்கேட்டேன் நன்றி அய்யா
காமராஜரை கவிதையில் கண்டதும்
பின்னூட்டம் கவிதையாய் வந்ததும்
பதிலாகவும் கவிதையே தந்ததும்...
உங்களால்தான் இயலும்.
வணக்கங்கள்!
காமராஜரை கவிதையில் ஏற்றி அழகு பார்க்கும் உம் இலக்கிய பணி தொடர்க பல்லாண்டு
Iyya , ennal tamzil thattachu seiya iyalavillai.Porutharulka. Kamatchi{kamarajarai] iththunai eliya tamizil padippathu mika mika nandru.Vaazka Pallandu
Post a Comment