Thursday, April 24, 2008

தமிழே எந்தன் தமிழே

     தமிழே  எந்தன்   தமிழே  எந்தன்  தமிழே

            எந்தன்  தாயே

     அமிழ்தும்  தோற்று  ஒடும்  உந்தன்

          அறிவுச் சுமையின்   முன்னால்

     உமிழ்  நீர்  ஊறும்  நாவால்     இந்த

          உலகை  வெல்லச்  செய்தாய்

     அமிழ்ந்தேன்  உந்தன்  அன்பில்  என்னை

          அறிவன்  ஆக்கி    வைத்தாய்



     குறளாம்   உந்தன்  குரலால்  என்னைக்

          குறைகள்  இன்றி  வைததாய்

     அறமே  போற்றும்  சிலம்பால்  என்னை

          அழவும்  தொழவும்  வைத்தாய்

     புறமும்  தந்து  அகமும்  தந்து

          புகழும்  சேர  வைத்தாய்

     குறைவேயில்லா  அவ்வை  தந்த

          கொன்றை  வேந்தன்  ஈந்தாய்



     நிறைவாய்  எங்கள்  நெஞ்சில்  நிற்க

          நிமிர்ந்த  நாலடி  தந்தாய்

     உறைவாய்  நல்ல  காதல்  காட்ட

          உயர்ந்த  குறுந்தொகை  தந்தாய்

     சிறை  வாய்ப் பட்ட  திருமறை   யோடு

          சேக்கிழார்  தன்னைத்  தந்தாய்

     கறையேயில்லாக்  கனி  மொழியூற

          காதலி   ஆண்டாள்  தந்தாய்



     அறியேன்  உன்னை  அறிந்தேன் அந்த

          அரிய  வாய்ப்பினை  ஈந்தாய்

     சிறியேன்  உன்னைச் சேர்ந்தேன் இன்று

          சிறப்பாய்  வென்று  நின்றேன்

     வறியேன்  உன்னைக் கேட்பேன் அந்த

          வரத்தை  இன்று   அருள்க

     சிறியேன்  மீண்டும்  பிறந்தால்  உந்தன்

          சீரடி  போற்ற  அருள்க

          

0 மறுமொழிகள்: