Friday, March 12, 2010

குறளும் கருத்தும் காதல் 2

காதல் என்னவெல்லாம் செய்யும். எல்லாம் செய்யும்.ஆமாம். அது எதை வேண்டுமானாலும்
செய்யும்.

காதல் வயப்பட்ட பெண்ணொருத்தி தோழிகளோடு உரையாடிக் கொண்டிருக்கின்றாள். அனைவரும் மகிழ்வோடு அவரவர்அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர்.

ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு விதத்தில் அவரவர் காதலர் குறித்தும் காதலனோடு தாங்கள் கொண்ட ஊடல் கூடல் குறித்தும் கலந்துரையாடுகின்றனர்.

ஒருத்தி சொன்னாள்.மெல்ல மெல்லத்தான் தொடுவான். ஆனால் அதிலேயே எனது மேனி மிக மிக வேகமாகக் குதிக்கத்தொடங்கும் என்று.

மற்றொருத்தி சொன்னாள். தொடவே மாட்டான். அந்தப் பார்வையிலேயே துவண்டு அவன் மார்பில் நானே போய்ச் சாய்ந்து கொள்வேன் என்றாள்.

இன்னொருத்தியோ ஒற்றை விரலை வைத்துக் கொண்டு அந்தப் பாவி படுத்தும் பாடு மொத்த மேனியும் அவனிடத்தில் தஞ்சம் அடைந்தால்தான் உயிர் பிழைக்கும் என்றாள்.

திரும்பி நின்று கொள்வேன். கட்டித் தழுவுவான் என்று நிற்பேன். அவனோ செவி மடல்களில் அவனது மூச்சுக் காற்றைப்படச் செய்வான். நானாகவே பின்னால் சாய்ந்து விடுவேன் என்றாள்.

இதெல்லாம் என்ன என்னவனின் வேகம் யாருக்கு வரும் என்றாள் ஒருத்தி.

வேகமா அத்தனை வேகமா என்றார்கள் அனைவரும்.

எடுத்தவுடன் வேகமென்றால் இனிக்காதே அது என்றாள் ஒருத்தி

இல்லை கூடி மகிழ்ந்து மகிழ்வின் உச்சத்தில் எனது மூங்கில் தோள்களில் சாய்ந்து கொள்வான். அவன் தலையைக்கோதிக் கொண்டிருப்பேன். ஆனால் அந்த வேகம் வேறு யாருக்கும் வராது என்றாள்.


ஏக்கத்தோடு மற்ற பெண்கள் கேட்டார்கள் சொல்லேன் சொல்லேன் அந்த வேகத்தைத் தான் சொல்லேன் என்று.

சொல்கின்றேன் பொறுங்கள் பொறுங்கள் என்றாள். பெருமை பொங்க.

தோளிலே தானே சாய்ந்திருப்பான். ஆனால் நான் கண் விழித்தேன் என்றால் அத்தனை விரைவாக எனது நெஞ்சுக்குள்போய் அமர்ந்து கொள்வான். ஆமாம் ஆமாம். விரைவு விரைவு அத்தனை விரைவு.

கண் விழித்தாலா. தோழிமார்கள்.

ஆமாம் கண் மூடித் துயில்கையில் தானே அவன் கனவில் வந்து களித்து எனது தோளிலும் சாய்ந்து கொள்வான்.அப்படித் தோளில் சாய்ந்திருப்பவன் நான் கண் விழிக்கும் கணப் பொழுதில் நெஞ்சுக்குள் போய் விடுவான். அந்த வேகம் யாருக்கு
வரும் சொல்லுங்கள் என்றாள்.

சிரித்துக் களித்தார்கள் தோழியர்.

குறள்

துஞ்சுங்கால் தோள் மேலராகி விழிக்குங்கால்
நெஞ்சத்தராவர் விரைந்து

1 மறுமொழிகள்:

said...

Ayya
Naan ungalathu Rasigan. Ippothu intha inaiyathai thinamaum vanthu parkiren.
ungal kambanum kannadasanum uraiyai adikadi kaekkiren. ungal paechai thedi , en pullaiku koduppen
Naanum rasipen