Friday, April 25, 2008

கவிதை எழுத

     கவிதை எழுத  விழையும்  நண்பர்  கருத்தில்  இதனைக் கொள்வீரே

          புவியை  வெல்லும்  கவிதை  யாத்து  புகழால்  நீரும்  வெல்வீரே

     கம்பன்  தன்னை  முற்றும்  கற்று  கருத்தில்  ஏற்றிக் கொள்வீரேல

         நம்பும்  அழகுக் கவிதை  வந்து  நடமேயாடும்   உம்  மனதில்

     மின்னும்  இனிய  தமிழில்  சிவனின்  மேன்மை  கூறும்  வாசகத்தை

          பொன் போல்  மனதில்  ஏற்றிப்போற்ற  பொலியும்  கவிதை  உம்  வசமே

     கண்ணே  என்று  இறைவன்  தன்னை  கருத்தாய்ப்  போற்றும்  தேவாரம்

          பண்ணே  தெளிந்து  படித்தீரென்றால்  பழகும்  கவிதை  உம்மிடமே



     குறளை மீண்டும்  மீண்டும்  கற்றால்  குதிக்கும்  கவிதை  உம்மிடமே

          அறமே  ஒங்கும்  சிலம்பைக் கற்றால்  ஆடும்  கவிதை  உம்மிடமே

     புறமும்  அகமும்  கற்றால்  போதும்  புதிதாய்ப் பொலியும்  உம்  தமிழே

          திறமும்  தெளிவும்  கொண்டே கவிதை  தினமும்  ஆகும்  உம் வசமே

     அறிவு  என்றல்   அன்பே  என்ற  அருமைக்  குறளைக்  கற்றீரேல்

          உறவு  என்றால்  உயிர்கள் என்று  உணர்ந்தே  நீரும்  வெல்வீரே

     செறிவாய்க் கற்று  நின்றீரென்றால்  செந்தமிழென்றும்  உம்  வசமே

          செப்பும்  செய்தி  அனைத்தும்  கவிதைச்  சீராய்  அமையும்  உம்மிடமே



     பார்க்கும்  வாழ்க்கைப் பாதையெல்லாம்  பதிவாய்  மனத்தில்  கொள்வீரேல்

          ஆர்க்கும்  கவிதை  உள்ளுந்தொறும்  அணியாய் வந்து  பேர் சொலுமே

     வேர்த்தே  உழைக்கும்  மனிதர்  கொள்ளும்  வேதனை அதனைப் பார்த்தீரேல்

          பேர்க்கும்  மனதை  உந்தம்  கவிதை  பிறக்கும்  புரட்சி  உம்மிடமே

     தாய்மைப்  பொறுப்பைக் கொண்டே  வாழும்  தங்க மகளிர்  படும் பாட்டை

          வாய்மை  நிறைந்த  வார்த்தைகளால்  நீர்  வடிக்கும் கவிதை  வென்றிடுமே

     தூய்மை  வாழ்க்கை  கொண்டே  வாழும்   துறவி  போன்ற நல்லவரை

          தொழுதே பாடும்  கவிதை  உம்மை   தூக்கி உயரே வைத்திடுமே



         

       

3 மறுமொழிகள்:

said...

கவிதை புனைவோருக்கு கனிவுடன் பாடம் நடத்துவது போல் அறிவுரை ஆயிரம் சொல்லிய சொல்லின் செல்வர்
கவிச் சக்கரவர்த்தி கண்ணண் அவர்களுக்கு நெஞ்சு நிறை நன்றிகள்.
-நெல்வேலி கார்த்திக்

said...

கவிதை புனைவோருக்கு கனிவுடன் பாடம் நடத்துவது போல் அறிவுரை ஆயிரம் சொல்லிய சொல்லின் செல்வர்
கவிச் சக்கரவர்த்தி கண்ணண் அவர்களுக்கு நெஞ்சு நிறை நன்றிகள்.
-நெல்வேலி கார்த்திக்

said...

மரணம் நோக்கி நடக்கின்ற
என்னைப் போன்றோர்
மாத்தமிழை இளையவருக்குச்
சொல்லிச் செல்லத்
தருணம் இது என்
றுணர்ந்த காரணத்தால்
தந்தேன் உம் அன்பிற்கு
நன்றி அய்யா

தங்கள் அன்பின் அடிமை
நெல்லைக்கண்ண்ன்