Tuesday, June 24, 2008

பழம் பாடல் கம்பன்

பறவைகளால் நிறைந்திருக்கும் அழகு ஏரி
படபடக்கும் கண்ணழகுப் பெண்ணாள் கண்டு
உறைவிடத்திற்குள்ளேயே மீன்களெல்லாம்
ஒளிந்துகொள்ள முயல்கிறதாம் நாணம் கொண்டு
உறையை விட்டு வெளியில் வந்த வாளைப் போலே
உயிர் பறிக்கும் வேலை செய்யும் அந்தக் கண்கள்
செறி அழகுக் கூந்தலிலே சேர்வதற்காய்
செய்தவத்தின் தேன் மலர்கள் கூட்டம் அங்கு

மது அருந்தி நிற்கின்றார் கூட்டத்திற்குள்
மங்கையுமே நிற்கின்றாள் என்ற போதும்
மது அருந்தவில்லையவள் ஆமாம் ஆமாம்
மனதிற்குள் இருக்கின்ற காதலனோ
மது அருந்தும் பழக்கமது இல்லான் என்று
மங்கை நன்கு உணர்ந்ததனால் அருந்தவில்லை
அது அவனுக்கு ஒவ்வாதென்றறிந்ததனால்
அருந்தவில்லை என்கின்றான் கம்பநாட்டான்

கம்பன்

புள் உறை கமல வாவிப் பொரு கயல் வெருவி ஒட
வள் உறை கழிந்த வாள் போல் வசி உற வயங்கு கண்ணாள்
கள் உறை மலர் மென் கூந்தல் கனி இள மஞ்ஞை அன்னாள்
உள் உறை அன்பன் உண்ணான் என உன்னி நறவை உண்ணாள்

0 மறுமொழிகள்: