Friday, June 27, 2008

குறட் கருத்து பெருமையும் சிறுமையும்

ஊரினிலே மிகப் பெரிய மனிதர் என்றும்
உண்மையொன்றே வாழ்க்கை என்று கொண்ட வீரர்
யாரிடத்தும் எப்போதும் பணிந்து நிற்பார்
எங்கேயும் யார்க்கும் நன்மை செய்தே நிற்பார்
காரிடத்தின் மழை போலே ஏழையர்க்கு
கருணையுடன் எப்போதும் ஈந்தே நிற்பார்
ஊரிடத்தே எங்கேயும் தன் பெயரை
உச்சரிக்க அனுமதிக்க மறுத்தே நிற்பார்


இன்னொருவர் எப்போதும் ஆடி நிற்பார்
எங்கேயும் தான் என்றே கூறி நிற்பார்
மன்னவன் என் அறிவிற்கு ஈடு இணை
மக்களிலே யார் உண்டு என்றே கேட்பார்
தன் நிலையை உணராதார் அய்யோ அய்யோ
தாவிடுவார் கூவிடுவார் ஊர் சிரிக்க
தென்னவராம் வள்ளுவரும் இவருக்கென்றே
திருக்குறளைத் தந்துள்ளார் காண்க நீவீர்

குறள்
பணியுமாம் பெருமை என்றும், சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து

2 மறுமொழிகள்:

said...

குறளுக்கு தாங்கள் தரும் அறிமுகம் அருமையாக இருக்கிறது ஐயா, மிக்க நன்றி.
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்.

said...

மிகவும் அருமையானக் கருத்துரை.
வளர்க உங்கள் தமிழ்ச் சேவை.
நன்றியுடன்

நாஞ்சில் ஏ.பீற்றர்

www.thirukkural2005.org
www.fetna.org