Sunday, June 29, 2008

குறட் கருத்து காமத்துப்பால்

பார்க்கின்றோம் முருகனது ஊர்கள் தோறும்
பக்தியுடன் காவடிகள் ஆடிப் போகும்
ஆர்க்கின்ற காவடிகள் அனைத்தும் கண்டோம்
அழகுப் பெண் காவடியைக் குறளார் தந்தார்
சேர்க்கின்றேன் என்றவனோ பிரிந்து சென்றான்
செவ்விதழாள் உயிர் அங்கே தண்டேயாக
பேர்த்தெடுக்கும் காமமதும் நாணம் தானும்
பிரிந்தங்கு காவடியாய் மாறியதாம்

காவடியில் இரு புறமும் பெண்ணாள் கொண்டாள்
கணக்காகக் காமமுடன் நாணமதும்
ஆகையினால் வாழுகின்றாள் இல்லையென்றால்
அவையிரண்டில் ஒன்றிழுத்தால வீழ்ந்தழுவாள
பாவி மகள் படும் பாட்டை வள்ளுவனார்
படைத்தளித்தார் இன்றும் நாம் பாடுகின்றோம்
காவடியை இருபுறமும் சரி சமமாய்க்
காத்ததனால் பெண் பிழைத்தாள் உணருகின்றோம்